ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்- எடப்பாடி பழனிச்சாமி
ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்களை சிறை வைத்துள்ளார் சசிகலா. முதல்வர் கனவில் இருந்த சசிகலாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று மரண அடி கொடுத்து சிறைக்கு அனுப்பியுள்ளது.

சசிக்கு சிறை
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா சசிகலா உள்ளிட்டோருக்கு 4 ஆண்டுகால சிறை தண்டனை விதித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. அத்துடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை உடனடியாக சரணடைய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எடப்பாடி தேர்வு
இதையடுத்து கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக சட்டசபை குழு தலைவராக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.

முன்மொழிந்த சீனிவாசன்
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:
சசிகலா தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சி பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என்னை அதிமுக சட்டசபை குழு தலைவராக முன்மொழிய ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.

ஆளுநருக்கு கடிதம்
இதனையடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். தற்போது தமிழக ஆளுநர் வித்யாசகர் ராவின் அழைப்புக்காக காத்திருக்கிறோம். ஆளுநர் அழைத்த உடன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் கையெழுத்துகளுடன் கடிதம் தரப்படும்.
இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.












Click it and Unblock the Notifications