டெல்லிக்கு பறக்கும் எடப்பாடி பழனிசாமி.. அமித் ஷா உடன் மீட்டிங்.. என்ன பிளான்? பரபர தகவல்கள்!
சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வரும் 26ஆம் தேதி டெல்லியில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளரான பிறகு எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வது இதுவே முதல் முறை.
அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் இந்த முதல் டெல்லி பயணம், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்யும் வகையில் அமையும் எனக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் பாஜக உடனான கூட்டணி விவகாரத்தில் அண்ணாமலை - அதிமுகவினர் இடையே காரசாரமாக கருத்து மோதல் நடைபெற்று வந்தது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்தான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார்.
அதிமுக விவகாரம் : கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் பல்வேறு கட்ட தீர்ப்புகள் வெளியான நிலையில், சமீபத்தில் பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்றும், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அதிமுக பொதுக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என ஈபிஎஸ் தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளது தேர்தல் ஆணையம். அதிமுக பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையமே ஈபிஎஸ்ஸை அங்கீகரித்துள்ளதால் அவரது தரப்பினர் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

டெல்லியில் மீட் : இந்த நிலையில் தான் டெல்லிக்கு வரும் 26ஆம் தேதி செல்ல இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. டெல்லி பயணத்தின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பின்போது அதிமுக - பாஜக கூட்டணி விவகாரம் மட்டுமல்லாமல் வேறு சில விஷயங்களும் பேசப்பட உள்ளதாம்.
அண்ணாமலை அண்மையில் திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்ட நிலையில், திமுகவினர் மீதான புகார்களில் நடவடிக்கை எடுக்கக் கோரியும், தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்தும் அமித் ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைப்பார் என்றும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications