என் புருஷன் என்னை திருடியாக்கினார்.. நான் என் மகனை வாரிசாக்கினேன்... ஒரு பகீர் கொள்ளைக்காரி!
சென்னை: பரம்பரை பரம்பரையாக நாங்க இதே தொழில்தான் என்று ஏதாவது ஒரு தொழிலைக் குறிப்பிட்டுக் கூறக் கேட்டிருக்கிறோம். ஆனால் என் புருஷன் திருடன், என்னையும் அவர்தான் திருடியாக்கினார். இப்போது எனது மகனையும் நான் பயிற்சி கொடுத்து திருடனாக்கியிருக்கிறேன் என்று சொல்லிக் கேட்டுள்ளீர்களா.. இப்படிக் கூறி போலீஸா7ரையே நடுங்க வைத்துள்ளார் 30 வருடமாக திருட்டைத் தொழிலாக நடத்தி கோடி கோடியாக சம்பாதித்துக் குவித்த வேலூரைச் சேர்ந்த எல்லம்மா என்ற பெண்.
சென்னை நகரில் பஸ்களில், கோவில்களுக்குச் செல்லும் வழியில், தனியாக நடந்து போகும்போது என வயதான பெண்களைக் குறி வைத்து நகை பறிக்கும் செயல் அதிகரித்து வந்தது.
இதுதொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கும் பதிவானது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரவேட்டை முடுக்கி விடப்பட்டது. இதில் எல்லம்மா என்ற வேலூரைச் சேர்ந்த பெண் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர ஒரு பரம்பரைக் கொள்ளைக்காரி என்று தெரிய வந்தது.

மதுரா கிராமத்து "ராணி"
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது மதுரா என்ற கிராமம். இதுதான் எல்லம்மாவின் சொந்த ஊர். அங்கு பெரிய சைஸில் வீட்டைக் கட்டி வாழ்ந்து வருகிறார் எல்லம்மா. தனது தொழில் குறித்து எல்லம்மா போலீஸில் கொடுத்துள்ளதாக கூறப்படும் வாக்குமூலம் விவரம்:

டீச்சிங் கொடுத்த வீட்டுக்காரர்
கொள்ளைத் தொழிலில் எனக்கு ஆசானாக விளங்கியவர் எனது கணவர் ராஜேஷ் தான். அவர்தான் எனக்கு இந்த கொள்ளை தொழிலை கற்றுத்தந்தார். வயதான மூதாட்டிகளின் கவனத்தை திசை திருப்பி அவர்களது கழுத்தில் அணிந்திருக்கும் தங்க சங்கிலிகளை பறிப்பது பற்றி நாங்கள் பயிற்சி எடுத்துள்ளோம்.

மொத்தம் 3.. நான்தான் நம்பர் டூ!
எனது கணவருக்கு 3 மனைவிகள். முதல் மனைவி ரத்தினம்மா (50). நான் முறைப்பெண் என்பதால் எனக்கு கொள்ளைத் தொழிலை கற்றுக்கொடுத்து, எனது கணவர் இரண்டாவதாக என்னை மணந்து கொண்டார். மூன்றாவதாக மாதுரி என்ற பெண்ணையும் எனது கணவர் மணந்தார்.

3 பேரும் சேர்ந்து
நாங்கள் 3 பேரும் தமிழகம் முழுவதும் கோவில் திருவிழா நடக்கும் இடங்களுக்கு செல்வோம். திருவிழாக்களுக்கு வரும் பெண்களை ஏமாற்றி நகைகளை பறிப்போம். ஒரு இடத்திற்கு கொள்ளையடிக்க சென்றால் குறைந்தது 25 பவுன் நகைகளை கொள்ளையடித்து கொண்டு நாங்கள் வரவேண்டும். இல்லாவிட்டால் எங்களை கணவர் அடித்து உதைப்பார்.

நானும் என் மூத்தாரும்
மாதுரி தற்போது இறந்து விட்டார். ரத்தினம்மாவும், நானும்தான் கொள்ளைத் தொழிலை செய்துவந்தோம். எனது கணவருக்கு இருதய நோய் என்பதால் அவர் இப்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

பேரப் பிள்ளைக வந்தாச்சு!
எங்களுக்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. அதன் மூலம் 7 பேரக்குழந்தைகளும் இருக்கிறார்கள். எனது கணவர் தொழிலை விட்டு ஒதுங்கிவிட்டதால், மகன் சுரேஷை கொள்ளைத் தொழிலில் இறக்கியுள்ளோம்.

போலீஸ் எங்க பாக்கெட்டில்
நாங்கள் கொள்ளைத்தொழிலை மிகப்பெரிய அளவில் தமிழகம் முழுவதும் செய்துவருகிறோம். போலீசார் எங்களை பிடித்தாலும் சாதாரண ஜேப்படி வழக்குகளை பதிவுசெய்து எளிதில் எங்களை ஜாமீனில் விட்டு விடுவார்கள். எங்களை ஜாமீனில் எடுக்க தமிழகத்தில் அனைத்து முக்கிய நகரங்களிலும் ஆட்கள் உள்ளனர். உயர் போலீஸ் அதிகாரிகளும் எங்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.

17 வயதில் ஆரம்பித்தேன்
நான் எனது 17வயதில் கொள்ளைத் தொழிலை தொடங்கினேனன். இப்போதுதான் முதல் முறையாக மாட்டியுள்ளேன் என்று கூறியுள்ளார் எல்லம்மா. இவரது மகனையும், ரத்தினம்மாவையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications