கொலை மிரட்டல் புகாரில் கைதாகும் அபாயம்.. ஈவிகேஎஸ் இங்கோவன் சிங்கப்பூருக்கு ஓட்டம்!
சென்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜய் இளஞ்செழியனுக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் நிச்சயம் கைது செய்யப்படுவோம் என்பதால் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சிங்கப்பூருக்கு தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜய் இளஞ்செழியனுக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் சில ஆண்டுகாலமாகவே ஏழாம் பொருத்தம்.. திருச்சியில் தேர்தலின் போது ராகுல் காந்தி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், சீ... போடா நாயே என்று விஜய் இளஞ்செழியனை இளங்கோவன் விரட்டினார். இது ஊடகங்களில் அப்போது வெளியாகி பரபரப்பானது.

அன்று முதலே விஜய் இளஞ்செழியனுக்கும் இளங்கோவனுக்கும் பஞ்சாயத்துதான்... இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் என்ற அடிப்படையில் விஜய் இளஞ்செழியனுக்கு எந்த ஒரு அறையுமே ஒதுக்கப்படவில்லை.
நீண்டகாலமாக இது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. தற்போது சத்தியமூர்த்தி பவனில் கோபண்ணா பயன்படுத்தி வரும் அறை முன்னர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் அறையாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 23-ந் தேதியன்று திடீரென இளங்கோவன் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார்.
அப்போது கோபண்ணா வசம் இருக்கும் அறையை கைப்பற்ற விஜய் இளஞ்செழியன் தரப்பு முயற்சித்தது. இந்த தகராறில், உன்னை கொன்னுடுவேன் தொலைச்சுடுவேன்.. என்று விஜய் இளஞ்செழியனை இளங்கோவன் மிரட்டியிருக்கிறார்... இதில் கடும் கோபமடைந்த விஜய் இளஞ்செழியன் சென்னை அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் இளங்கோவன், கோபண்ணா உள்ளிட்டோர் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் கொடுத்தார்.
விஜய் இளஞ்செழியன் தீவிர ப.சிதம்பரம் ஆதரவாளர்... கார்த்தி சிதம்பரத்தின் ஆலோசனையின்பேரில்தான் இளங்கோவன் மீது கொலை மிரட்டல் புகார் கொடுத்திருக்கிறார். இதனால் இளங்கோவன் மீது கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புகாரை வாபஸ் பெற வைக்க காங்கிரஸ் நிர்வாகிகள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் விஜய் இளஞ்செழியன் விட்டுக் கொடுப்பதாக இல்லை.
இதனால் கொலை மிரட்டல் வழக்கில் தாம் கைது செய்யப்படலாம் என்பதால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க சிங்கப்பூருக்கு தப்பிவிட்டாராம் இளங்கோவன். சிங்கப்பூரில் தற்போது இளங்கோவன் முகாமிட்டிருப்பதை காங்கிரஸ் வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.












Click it and Unblock the Notifications