காங். கோஷ்டிகளிடையே ஓயாத 'தொகுதி' பஞ்சாயத்து... கருணாநிதியுடன் இளங்கோவன் ஆலோசனை
சென்னை: காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகளில் சிலவற்றை மாற்றுவது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் இன்று சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தலில் திமுக, பாஜக, அதிமுக, தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி என அனைத்து கட்சிகளுடனும் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. திமுக கூட்டணியில் தமாகா இணைய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அதிமுகவிலோ 15 தொகுதிகள் தருகிறோம்; ஆனால் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டும் என நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதனை வாசன் நிராகரித்துவிட்டார். அப்போது பாஜகவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதற்கு தமிழ் மாநில காங்கிரசில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

உடைந்த தமாகா
பின்னர் தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியில் தமாகா அதிகாரப்பூர்வமாக இணைந்தது. அக்கூட்டணியில் தமாகாவுக்கு 26 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த கூட்டணிக்கும் பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தமாகா உடையும் நிலை உருவாகியுள்ளது.
பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் மீண்டும் காங்கிரஸில் இணைய உள்ளனர். எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் அதிமுகவுக்கு தாவ இருக்கிறார்.

கருணாநிதியுடன் இளங்கோவன்
இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்தித்து பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், தமாகாவில் இருந்து பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன் உள்ளிட்டோர் விரைவில் காங்கிரஸில் இணைய உள்ளனர். ஜி.கே.வாசனைத் தவிர தமாகாவினர் யார் வந்தாலும் காங்கிரஸ் கட்சி வரவேற்கும். மதவெறி பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய ஜி.கே.வாசன் காங்கிரஸுக்கு திரும்ப லாயக்கற்றவர். அதிருப்தி தமாகாவினருக்காக கூடுதல் தொகுதிகளை திமுகவிடம் கோரும் எண்ணம் இல்லை. திமுக- காங்கிரஸ் கூட்டணி தொகுதி பட்டியலிலும் எந்த ஒரு மாற்றமும் இல்லை.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

தொகுதிகளில் சிக்கல்?
இளங்கோவன் இப்படி விளக்கம் அளித்தாலும் கூட காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகளில் சிலவற்றை மாற்றுவது தொடர்பாக கருணாநிதியுடன் ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸுக்கான இடங்களில் 10 தொகுதிகளை தமது ஆதரவாளர்களுக்கு ஒதுக்க வேண்டும் என கோரியிருந்தார் ப.சிதம்பரம். குறிப்பாக கராத்தே தியாகராஜனுக்காக வேளச்சேரி, கே.எஸ். அழகிரி ஆதரவாளர் ராதாகிருஷ்ணனுக்காக நெய்வேலி, கே.ஆர். ராமசாமிக்காக காரைக்குடி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ஆனால் வேளச்சேரி, நெய்வேலி உள்ளிட்ட தொகுதிகளை திமுகவிடம் காங்கிரஸ் கேட்டுப் பெறவில்லை.

ப.சிதம்பரம் அதிருப்தி
இதற்கு பதிலாக அம்பத்தூரை திமுகவிடம் இருந்து வாங்கி ப.சிதம்பரம் அணிக்கு ஒதுக்கியது காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு குழு. இதில் ப.சிதம்பரம் கடும் அதிருப்தி அடைந்து காங்கிரஸ் மேலிடத்திடம் காட்டமாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். வேளச்சேரியை திமுகவிடம் இருந்து பெற முடியாவிட்டால் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட மயிலாப்பூரில் தம்முடைய ஆதரவாளர் கராத்தே தியாகராஜனை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார் ப.சிதம்பரம். ஆனால் தங்கபாலு தாமோ அல்லது மகனோ போட்டியிட விரும்புகிறார்; இளங்கோவனோ குஷ்புவை களமிறக்கலாம் என நினைக்கிறார். இந்த நிலையில் தங்களுக்கு மயிலாப்பூர் தரப்படாவிட்டால் கராத்தே தியாகராஜனை சுயேட்சையாக களமிறக்கவும் திட்டமிட்டுள்ளதாம் ப.சிதம்பரம் தரப்பு.
ஆகையால் தற்போது ஒதுக்கப்பட்ட 41-ல் சில தொகுதிகளை மாற்றி கேட்பது என முடிவெடுத்து அதனடிப்படையிலேயே கருணாநிதியை நேரில் சந்தித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications