ஜெ. வீடியோ உண்மையா, பொய்யா.. ஒரு வீடியோ எடிட்டரின் பார்வை இது
Recommended Video

சென்னை: ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ என்று கூறி, தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஒரு வீடியோவை இன்று வெளியிட்டார்.
அந்த 20 வினாடி வீடியோவில், ஜெயலலிதா ஜூஸ் குடித்தபடி, டிவி பார்ப்பதை போன்ற காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ போலியானது, அது ரோபோ என்று ஜெயலலிதா தோழி, கீதா தெரிவித்துள்ளாார்.
இந்த சர்ச்சைகள் குறித்து, பெங்களூரை சேர்ந்த ஒரு பிரபல வீடியோ எடிட்டரை தொடர்பு கொண்டு கருத்து கேட்டிருந்தோம். அவர் இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

கால் பாதத்தில் ரேகை
இதுகுறித்த விவரம்: வீடியோவில் உள்ளது ஜெயலலிதாவின் உருவம் அல்ல, என்று கூறுவதற்கு போதிய ஆதாரம் இல்லை. அது ரோபோ எனக்கூறுவதையும் ஏற்க முடியவில்லை. கை பகுதியை உற்று நோக்கி ஆய்வு செய்தபோது அது ரோபோ அல்ல என்று தெரிகிறது. ஜெயலலிதாவின் கால்கள் அசைவற்று இருப்பதை போல வீடியோவில் காட்டப்படுகிறது. ஆனால், அவரது இடது கால் பாதத்தில் ரேகை உள்ளது உன்னிப்பாக பார்த்தால் தெரிகிறது. எனவே சந்தேகப்பட வேண்டாம் என்றார்.

மேலோட்ட பார்வை
இந்த வீடியோ மார்ஃபிங் செய்யப்பட்டதா, இல்லையா என்பதை அறிய நிறைய ஆய்வுகள் அவசியப்படுமே என்ற கேள்விக்கு, "நான் கூறுவது வீடியோ எடிட்டர் என்ற வகையில் மேலோட்டமான பார்வையில்தான். அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வீடியோக்களை மார்ஃபிங் செய்தால் அதை கண்டுபிடிக்க நிறைய ஆய்வுகள் தேவைப்படும்.

ஹாலிவுட்டில் படமே எடுத்தார்கள்
பாஸ்ட் அன்டு ஃப்யூரியஸ்-7 திரைப்படத்தில் நடித்தபோது, பால் வார்கர் கார் விபத்தில் மரணமடைந்தார். ஆனால், அவரது முகத்தை வேறு நபர் உடலில் பொருத்தி படத்தையே எடுத்து முடித்துவிட்டனர். யாராலும் அதை அடையாளமே காண முடியாது. இவ்வாறான தொழில்நுட்பங்களுக்கு மிகுந்த பொருட்செலவு ஏற்படும். அதை செய்திருந்தாலும் மட்டுமே இந்த வீடியோவை மார்பிங் என கூற முடியும்.

வீடியோ நம்பகத்தன்மை
ஜெயலலிதா அவசர சிகிச்சையில் இருந்தபோது அப்பல்லோ மருத்துவமனையின் 2வது மாடியில் இருந்தார். ஆனால் வீடியோவில், ஜன்னலுக்கு வெளியே மரங்கள் தெரிகின்றன. இதுதான் சற்று சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஒருவேளை வார்டுக்கு வந்த பிறகு எடுத்த வீடியோவாக இருந்திருப்பின், அந்த சந்தேகம் தேவையில்லை என்றார்.












Click it and Unblock the Notifications