நம் பிள்ளைகளுக்கு விசாலமான பார்வையோடு உலகம் சொல்லிக் கொடுப்போம்!
சென்னை: அரக்கோணத்தில், நான்கு மாணவிகள் கூட்டாக தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு காரணம் ஆசிரியர் திட்டியது என்று சொல்லப்படுகிறது. விசாரணை முடிவு விரைவில் தெரிய வரும் என்று காவல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பது அந்த நான்கு மாணவிகளும் ஒரே வகுப்பில் ஒரே பெஞ்சில் அமர்ந்திருக்கும் நெருக்கமான தோழிகள் என்றும் கடந்த வாரம் தமிழ் ஆசிரியர் பாடம் நடத்தும் நேரத்தில் மாணவிகள் குறும்புத்தனமான கானா பாட்டு எழுதி பாடம் கவனிக்காமல் இருந்திருக்கிறார்கள். அதைக் கண்டு ஆத்திரமடைந்த ஆசிரியர் 6 மாணவிகளையும் நாளை பெற்றோரை அழைத்து வரும்படி கூறி வகுப்பை விட்டு அனுப்பி இருக்கிறார்.
2 மாணவிகள் பெற்றோரை மாரு நாள் கூடி வந்த காரனாதல் உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர் .மீதி 4 பேரும் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படாத மனஉளைச்சலில் தான் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கிறார்கள். இந்த மரணம் எல்லோருக்கும் வருத்தம் ஏற்படுத்தும் விஷயம். நான்கு குடும்பங்களை பெருந்துயரத்தில் ஆழ்த்திவிட்டு உயிரை மாய்த்து கொண்ட அந்த சிறுமிகளை குறை சொல்வதா அல்லது ஆத்திரத்தில் திட்டிய ஆசிரியரை குறை சொல்வதா என்று நாம் கேள்வி எழுப்புவதுற்கு முன் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது.

அனுபவ அறிவு அவசியம்
மார்க் மார்க் என்று மாணவர்களை (நம் குழந்தைகளை) ரேஸ் குதிரைகளாக ஓட விடும் பெற்றோர்களாகிய நாம், படி படி என்று அவர்களின் கண்களை வேறு பக்கம் திசை திருப்ப விடாமல் அந்த புத்தகத்திற்குள்ளே அடக்க நினைக்கிறோம். அதை தான் செய்து கொண்டிருக்கிறோம். புத்தகத்தை தாண்டிய உலகத்தை குழந்தைகளுக்கு காட்ட வேண்டியதும் பெற்றோர்களின் கடமை என்பதை மறந்து விட்டோம். நம் அனுபவ அறிவை நாம் கடந்து வந்த பாதைகளை அதில் வந்த வலிகளை சொல்லி நம் குழந்தைகளின் மனது எதையும் தாங்கும் பக்குவத்தை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டாமா.

செல்லத்தின் பெயரால் கெடுக்கிறோம்
கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்து விடும் செல்ல தந்தையாக மாறி வரும் நம் தலைமுறை அப்பாக்களுக்கும் பிள்ளையை ஒன்னும் சொல்லாதீங்க என்று சொல்லும் இந்த தலைமுறை அம்மாக்களும் பிள்ளைகளை கடிந்து கொள்ள வேண்டிய நேரத்தில் கூட இப்போதெல்லாம் கடிந்து கொள்ள மறந்து விடுகிறோம் . அன்பு என்ற பெயரில் அதிக செல்லம் கொடுத்து விடுகிறோம்

யாராவது ஒருவர் தேற்றியிருந்தால்
ஒரு மாணவியின் தற்கொலை என்றால் கூட அது ஒரு கண நேர வெறுப்பின் மன அழுத்தத்தில் எடுத்த முடிவு என்று எடுத்துக் கொண்டு விடலாம். இது கூட்டாக ஒரு தற்கொலை எனும் போது பெரும் வருத்தமாக இருக்கிறது. இதில் ஒரு தோழியாவது தைரியமாக விடு பாத்துக்கலாம் என்று சொல்லி தேற்றி இருந்திருந்தால் இந்த சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்குமே.

ஆசிரியைகளும் மாற வேண்டும்
அந்த குழந்தைகளின் தவறை கடிந்து கொண்ட ஆசிரியை கூட முதலில் கடிந்து கொண்டு பின் அந்த மாணவர்களின் கானா பாட்டு திறமையை பாராட்டி கூடவே குட்டு வைப்பது போல நாலு அறிவுரை கூறி நாசூக்காக மாணவிகளுக்கு உணர்த்தி இருக்கலாம். அதட்டுவதற்கு ஆசிரியருக்கு உரிமை உண்டு என்றாலும் கூட அன்போடு கூடிய போதனைகள் தான் மாணவ செல்வங்களின் மனதின் அடி ஆழம் வரை சென்று காலாகாலம் அவர்களோடு இருக்கும் நற்குணங்களாக வளரும் என்பது மறுக்க முடியாத உண்மை.

மாணவர்களை அரவணையுங்கள்
பெற்றோரை கூட்டி வா என்று ஆசிரியர் சொல்லுவது மாணவர்களுக்கு மலையை தூக்கி சுமக்க சொல்வது போல தான் அந்த பருவத்தில். இது ஒரு வகை மிரட்டல் தான். பெற்றோரிடம் போய் எப்படி நடந்ததை சொல்வது என விக்கித்தே இந்த குழந்தைகள் பயந்திருக்க கூடும். இந்த மாதிரி சூழ்நிலையில் குழந்தைகளை அரவணைத்து குழந்தைகளை புரிந்து கொண்டு செல்ல கூடிய பெற்றோர்களாக நாம் இருக்க வேண்டும். குழந்தைகள் நம்மிடம் மனம் விட்டு எதையும் சொல்லக்கூடிய நட்போடு நம் பிள்ளைகளை நாம் வளர்க்க வேண்டும்.

உலகம் சொல்லிக் கொடுப்போம்
இந்தக்கால குழந்தைகள் மன உறுதி இல்லாமல் இருக்கிறார்கள். இந்தத் தலைமுறையே ஒரு பக்குவமற்ற மனநிலையில் புத்தகங்களோடு மட்டும் வளர்க்கப்படுகிறார்களோ என்று தான் கருத வேண்டியுள்ளது. புத்தகங்களும் அதன் பக்கங்களும், தேர்வு வினாக்களும் விடைத்தாள்கள்களும் மட்டுமல்ல வாழ்க்கை. வாழ்க்கையில் இன்னும் நிறைய இருக்கு என்று ஒவ்வொரு நாளும் இனியாவது சொல்லிக் கொடுத்து விசாலமான பார்வையோடு உலகத்தை கடந்து போக சொல்லிக் கொடுப்போம். அன்போடு பெற்றோர்கள் சொல்லிக்கொடுக்கும் அனுபவ அறிவு இதுபோன்ற கொடிய தருணங்களை இனியேனும் நம் தலைமுறையில் இல்லாமல் போக செய்யட்டும். .
- Inkpena சஹாயா












Click it and Unblock the Notifications