ஏற்காடு இடைத் தேர்தல்: திமுக வேட்பாளர் மாறன் வேட்புமனு தாக்கல்

Subscribe to Oneindia Tamil

Maran
சேலம்: ஏற்காடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்கியது. திமுக வேட்பாளர் மாறன் இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்தார். அதேபோல தேர்தல் மன்னன் பத்மராஜன் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட மனு தாக்கல் செய்தார்.

ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த பெருமாள் கடந்த ஜூலை 18 ஆம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதிக்கு வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் அதிமுக, திமுக போட்டியிடுகின்றன.

பா.ஜ.க. இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்பதை அறிவித்து விட்டது. அதேவேளையில், காங்கிரஸ், ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. போன்ற கட்சிகள் இதுவரை போட்டியிடுவதாக அறிவிக்கவில்லை. யாருக்கு ஆதரவு என்பதையும் அறிவிக்கவில்லை.

அ.தி.மு.க. சார்பில் மறைந்த பெருமாள் எம்.எல்.ஏ.வின் மனைவி சரோஜாவும், தி.மு.க. சார்பில் மாறனும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். இருதரப்பிலும் தங்கள் ஆதரவாளர்களுடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வேட்புமனு தாக்கல்

இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று (9 ஆம் தேதி) தொடங்கி, வருகிற 16 ஆம் தேதி தேதி வரை நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முதல் தளத்தில் அறை எண். 109 ல் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அலுவலரும், ஏற்காடு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான சபாபதியிடம் வேட்பு மனுதாக்கல் செய்ய வேண்டும்.

திமுக வேட்பாளர்

முதல் நாளான இன்று திமுக வேட்பாளர் வெ.மாறன் இன்று காலை தேர்தல் அதிகாரி சபாபதியிடம் வேட்பு மனுவை அளித்தார் வெ.மாறன். 10 ஆம் தேதி தேதி (ஞாயிற்றுக்கிழமை), 14 ஆம் தேதி (குழந்தைகள் தினம்) ஆகிய விடுமுறை நாட்களை தவிர தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மனுதாக்கல் செய்யலாம்.

தேர்தல் மன்னன் பத்மராஜன்

சேலம் மாவட்டம் மேட்டூர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கே.பத்மராஜன் (52). அவர் கடந்த 1988-ம் ஆண்டு முதல் நாட்டில் நடக்கும் பல்வேறு தேர்தல்களில் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார். இவர் பி. வி. நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் உள்ளிட்ட பிரதமர்கள், திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, எதியூரப்பா, தேவே கெளடா, ஏ. கே. அந்தோணி என பல முக்கிய தலைவர்களை எதிர்த்து போட்டியிட்டுள்ளார்.

ரூ.12 லட்சம்

நூற்றுக்கும் மேற்பட்ட முறை சுயேச்சையாகப் போட்டியிட்டதற்காக இவர் கின்னஸ் சாதனையும் படைத்தவராவார். ஏற்காடு இடைத்தேர்தலில் பத்மராஜன் வேட்புமனு தாக்கல் செய்திருப்பது 156வது முறையாகும்.

2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டதற்காக 6273 ஓட்டுகள் பெற்றதுதான் இவருடைய அதிகபட்ட சாதனை. இத்தனை ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ததன் மூலம் 12 லட்சம் ரூபாயை இழந்துள்ளார்.

3 வாகனங்கள் மட்டுமே

மனுதாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் ரூ.5 ஆயிரம் டெபாசிட் செலுத்த வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்யும்போது படிவம் 2பி, படிவம் 26 ஆகியவற்றை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து முன்கூட்டியே பெறுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய விரும்புபவர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரின் அனுமதி சீட்டு பெற்ற வாகனத்தில்தான் வரவேண்டும். வாகன அனுமதி சீட்டினை வாகனத்தின் முன்புறமுள்ள கண்ணாடியில் நன்கு தெரியுமாறு ஓட்டப்பட்டிருக்க வேண்டும். மேலும் மனுதாக்கலின்போது அனுமதி பெற்ற 3 வாகனங்களில் மட்டுமே வரவேண்டும்.

பாதுகாப்பு வளையத்தில்

வாகனங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் இருந்து 100 மீட்டர் தள்ளியே நிறுத்தப்பட வேண்டும். அதற்கான எல்லைக்கோடும் 100 மீட்டருக்கு அப்பால் போடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அறைக்குள், மனுதாக்கல் செய்யும் வேட்பாளர் உள்பட 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் டி.சபாபதி தெரிவித்தார்.

ஏற்காடு இடைத்தேர்தலையொட்டி, ஆந்திராவிலிருந்து மத்திய தொழில் பாதுகாப்புப்படையை சேர்ந்த போலீசார் சேலம் வந்து உள்ளனர். அவர்கள் இன்று முதல் ஏற்காடு தொகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+