பாய்லின் புயல்: ஒடிசாவில் மீட்கப்பட்ட 18 தமிழக மீனவர்களுக்கு தலா ஒரு லட்சம் : ஜெயலலிதா
சென்னை: ஒடிசா மாநிலக் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது பாய்லின் புயலில் சிக்கிய 18 தமிழக மீனவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சனியன்று ஆந்திரா மற்றும் ஒடிசாவின் கடற்கரை மாவட்டங்கள் அதி வேகப்புயலான பாய்லின் தாக்குதலுக்கு ஆளானது. ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவில் ஆபத்தான பகுதிகளில் வசித்த 9 லட்சம் பேர் பத்திரமான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனால், அங்கு மிகப்பெரிய அளவிலான உயிர் சேதம் தடுக்கப்பட்டது.
இந்நிலையில், கன்யாகுமரி மாவட்ட மீனவர்கள் 18 பேர் எதிர்பாரா விதமாக பாய்லின் புயலால் ஒடிசாவில் சிக்கிக் கொண்டனர். தமிழக அரசின் முயற்சியால் தற்போது பத்திரமாக சொந்த மாநிலம் திரும்பியுள்ள அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கியுள்ளார் முதலமைச்சர் ஜெயலலிதா.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது...

தமிழக மீனவர்கள்....
கன்னியாகுமரி மாவட் டம், விளவங்கோடு வட்டம், தூத்தூர், ஏழுதேசம்சின்னத் துறை, இரையுமன்துறை, மேல்மிடாலம் மற்றும் கோடிமுனை பகுதிகளைச் சார்ந்த 18 மீனவர்கள் ஒடிசா மாநில மீன்வளத்துறையில் பதிவு செய்யப்பட்ட படகுகளில் கடந்த இரண்டு வருடங்களாக ஒடிசா மாநிலத்தின் அஸ்தரங்கா மீன்பிடி தளத்திலிருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

பாய்லின் புயல்....
இவர்கள் இரண்டு மீன்பிடி விசைப் படகுகளில் கடந்த 22.9.2013 முதல் ஒடிசா மாநில கடற்பகுதியில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, வங்கக் கடலில் உருவான பாய்லின் புயல், ஒடிசா மாநிலம் பாரதீப் மற்றும் கோபால்பூர் பகுதியில் கரையைக் கடக்கவிருப்பதை அறிந்து அம்மீனவர்கள் தங்களது இரு படகுகளுடன் 12.10.2013 அன்று கரை திரும்ப முயன்றுள்ளனர்.

கைபேசி மூலம் தகவல்....
ஆனால், அவர்கள் கரை திரும்புவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு நடுக்கடலில் தத்தளித்துடன் படகிலிருந்த எரிபொருள் முழுவதும் தீர்ந்துவிட தங்களைக் காப்பாற்றும்படி கன்னியாகுமரி மாவட்டத் திலுள்ள தங்களது உறவினர்களுக்கு கைபேசி மூலம் தகவல் தெரி வித்துள்ளனர்.

போர்க்கால நடவடிக்கை...
பாய்லின் புயல் காரணமாக தமிழக மீனவர்கள் ஓடிசா மாநில கடற்பகுதியில் தத்தளிக்கும் தகவல் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கவனத் திற்கு கொண்டு செல்லப் பட்டவுடன், தலைமைச் செயலாளர், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை செயலாளர் ஆகியோர் இந்திய கடலோர கப்பற்படை மற்றும் ஒடிசா மாநில உயர் அதிகாரிகளுடன் உடனடியாகத் தொடர்பு கொண்டு புயலில் சிக்கித் தவிக்கும் தமிழ கத்தைச் சேர்ந்த 18 மீனவர் களைப் பத்திரமாக மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட் டார்.

பத்திரமாக மீட்க....
முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைப் படி, தமிழக அரசின் உயர் அதிகாரிகள் சென்னையில் உள்ள இந்திய கடலோர காவற் படை மற்றும் கப்பற்படை உயர் அதிகாரிகள், ஒடிசா மாநில சிறப்பு மீட்புப் பணி ஆணையர், ஒடிசா மாநில மீன்வளத் துறை உயர் அலுவலர்கள் ஆகியோரைத் தொடர்பு கொண்டு தமிழக மீனவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்தனர்.

தகுந்த ஏற்பாடுகள்...
அவ்வாறு மீட்கப்பட்ட மீனவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகள், உணவு, குடிநீர், உடைகள் மற்றும் காலணிகள் போன்றவற்றை வழங்கி அவர்கள் பத்திரமாகத் தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

விமானம் மூலம்....
மீட்கப்பட்ட மீனவர்கள் தங்களது சொந்த ஊருக்கு உடனடியாக திரும்ப மிகுந்த ஆர்வமுடன் இருப்பதை அறிந்த முதலமைச்சர் ஜெயலலிதா 18 மீனவர்களையும் தமிழக அரசின் செலவில் விமானம் மூலம் சென்னை அழைத்து வந்து பின்னர் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு உத்தரவிட் டார்.

வரவேற்பு...
அதனைத் தொடர்ந்து மீனவர்கள் அனைவரையும் 16.10.2013 அன்று ஒடிசா மாநிலம் புவனேஸ் வரத்திலிருந்து விமானம் மூலம் அழைத்து வர தமிழக மீன்வளத் துறையின் அலுவலர்கள் அங்கு சென்று அவர்களை சென்னைக்கு பாதுகாப்பாக அழைத்து வந்தனர். சென்னை விமான நிலையத்தில் மீன்வளத் துறை அமைச்சர் மேற்படி 18 மீனவர் களையும் வரவேற்றார்.

சொந்த ஊர் திரும்ப ஏற்பாடு....
பின்னர் அவர்கள் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான அணைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்பட்டு, அவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான ஏற்பாடு களும் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது,

நெஞ்சார்ந்த நன்றிகள்....
ஒடிசா மாநிலத்தில் கடும் புயலில் சிக்கி உயிருக்குப் போராடிய தங்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தங்களது நன்றியினைத் தெரிவிக்க வேண்டும் என்று இந்த மீன வர்கள் கேட்டுக் கொண் டதன் அடிப்படையில் இன்று முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்த 18 மீனவர்கள், பாய்லின் புயலில் சிக்கித் தவித்த தங்களை மீட்க தக்க தருணத்தில் பெரும் முயற்சி மேற்கொண்டமைக்காகவும், புவனேஸ்வரத்திலிருந்து சென்னைக்கும், சென்னை யிலிருந்து தங்களது சொந்த ஊருக்குச் செல்வதற்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துள்ளமைக்கும் முதல்-அமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைக் கண்ணீர் மல்க தெரிவித்துக் கொண்டார்கள்.

பொது நிவாரண நிதி....
அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர், மீனவர்களின் வறுமையான குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, 18 மீனவர்களுக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

தேவையான ஏற்பாடுகள்...
அப்போது, "நீங்கள் எல்லோரும் புயலில் சிக்கி அவதிப்படுகிறீர்கள் என்பதைக் கேள்விப்பட்டு நான் மிகவும் கவலைப் பட்டேன். உடனே தமிழக அரசு அதிகாரிகளுக்கு சொல்லி அங்கே ஒடிசா மாநில அரசு அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு உங்களைப் பத்திரமாக மீட்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை எல்லாம் செய்தார்கள்.

மிக்க மகிழ்ச்சி...
உங்களுக்குச் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது என்பதை கவனித்தேன். ஆனால் உயிர்ச்சேதம் இல்லாமல் உங்களை பத்திரமாக மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்றுதான் நாங்கள் எண்ணினோம். அதை வெற்றிகரமாக சாதித்து விட்டோம். அதனால் நீங்கள் பத்திரமாக திரும்பி வந்தது குறித்து நான் என்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் மறுவாழ்வு தொடங்கி மறுபடியும் உங்கள் சொந்த ஊருக்குச் சென்று உங்கள் குடும்பங்களோடு அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழ்க்கை நடத்த வேண்டும்.

புது வாழ்வு....
அந்த புது மறுவாழ்வை தொடங்குவதற்கு உதவியாகத்தான் உங்களுக்கு தலா 1 லட்ச ரூபாய் இப்போது தமிழக அரசின் சார்பாக கொடுக்கப்பட்டுள்ளது. இதை நல்லவிதமாக பயன்படுத்திக் கொண்டு உங்களுக்குப் பழக்கப்பட்ட, தெரிந்த தொழிலை நீங்கள் மென்மேலும் நல்ல முறையில் செய்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

நல்வாழ்த்துக்கள்...
உங்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. வேறு எந்த உதவி உங்களுக்குத் தேவை என்றாலும் அரசு செய்ய தயாராக உள்ளது. எல்லா வளமும் நலமும் அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். எல்லோருக்கும் என்னுடைய நல்வாழ்த்துகள்' என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.

முதலமைச்சருடன் புகைப்படம்...
பின்னர், பாய்லின் புயலில் சிக்கித் தவித்து மீட்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த 18 மீனவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன்குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வின் போது, மாண்புமிகு மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைச் செயலாளர் முனைவர் எஸ். விஜயகுமார், மீன்வளத் துறை இயக்குநர் முனியநாதன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.












Click it and Unblock the Notifications