பருவமழை தீவிரம்: பவானி ஆற்றில் வெள்ளம்... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
மேட்டுப்பாளையம்: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட கரையோர பகுதிகளில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் கொஞ்சம் டல்லடித்த தென்மேற்கு பருவமழை, நீலகிரி மாவட்டம் பகுதிகளில் தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் பில்லூர் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக பில்லூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. அணையின் நீர்மட்டம் 92.5 அடியாக உயர்ந்தது. இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை....
பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக அந்த ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மேட்டுப்பாளையம், நெல்லித்துறை, சிறுமுகை, ஆலாங்கொம்பு பகுதி பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பாதுகாப்பான இடம்...
மேலும், கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கூடுதல் தண்ணீர்...
ஏற்கனவே பவானியாற்றில் விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடி நீர் வந்துக் கொண்டிருப்பதால், பில்லூர் அணை நிரம்பியதும் கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

தீவிர மழை...
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக வால்பாறை, பொள்ளாச்சி பகுதிகளில் மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை...
இதற்கிடையே, வால்பாறையில் பலத்த மழை பெய்து வருவதால் தொடர்ந்து நேற்று 3-வது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மழை காரணமாக கடுங்குளிர் நிலவுவதால், தேயிலை தோட்டங்களில் தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு...
நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக துளசிங்நகர் பகுதியில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது. ஏற்கனவே 2 தடவை மண்சரிவு ஏற்பட்டு உள்ளதால் வீடுகள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு நிற்கின்றன. மேலும் வீடுகள் எப்போது வேண்டுமானாலும் இடியும் அபாயத்தில் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

வீட்டின் சுவர் விழுந்தது...
இதேபோல் வால்பாறையில் இருந்து சோலையார் அணை செல்லும் வழியில் உள்ள பழைய வால்பாறையில் நேற்று முன்தினம் திடீரென்று மண்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த 2 சிறிய பாறைகள் உருண்டு ரோட்டில் வந்து விழுந்தன. உடனடியாக இவை அகற்றப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட வில்லை. சிறுவர்பூங்கா பகுதியில் அப்துல்ரகுமான் என்பவரது வீட்டின் சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

மின் இணைப்பு துண்டிப்பு...
ஓட்டு மொத்தமாக சோலையார் அணைக்கு வினாடிக்கு 5353 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக் கிறது. நேற்றுமுன்தினம் 85 அடியாக இருந்த சோலையார் அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 13.5 அடி உயர்ந்து 98.35 அடியாக அதிகரித்துள்ளது. சோலையார் மின்நிலையம்-1 மற்றும் 2 அமைந்துள்ள பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.இதனால் 2 மின் நிலையங்களிலும் நேற்று மின்உற்பத்தி நடைபெற வில்லை. அதோடு பரம்பிக்குளம் அணைக்கும், கேரளாவிற்கும் தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. மின்துண்டிப்பு சரி செய்யப்பட்ட பிறகு தான் 2 மின்நிலையங்களும் இயங்க தொடங்கும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித் தனர்.

ஆற்றில் குளிக்கத் தடை...
வால்பாறைக்கு வரும் சுற்றுலாபயணிகள் கூழாங்கல் ஆறு, சோலையார் சுங்கம் ஆறு, நடுமலை ஆறு ஆகிய ஆறுகளில் இறங்கி குளிக்கக்கூடாது என்று தாசில்தார் மற்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மழையளவு...
மாவட்டம் முழுவதும் நேற்று பதிவான மழை அளவு விவரம் வருமாறு:- கோவை பீளமேடு-3.20 மி.மீ, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்-10 மி.மீ, பொள்ளாச்சி-14 மி.மீ, சின்கோனா-105 மி.மீ, சின்னகல்லார்-212 மி.மீ, வால்பாறை பி.ஏ.பி.-60 மி.மீ, வால்பாறை தாலுகா-64 மி.மீ, கோவை தெற்கு-6 மி.மீ, என ஆக மொத்தம் 474.20 மி.மீ ஆகும். இது 39.52 சராசரி அளவாகும்.

அருவிகளில் வெள்ளம்...
கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் செல்லும் வழியில் உள்ள வனப்பகுதியில் பலத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் சாலக்குடி அருகே உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு எற்பட்டு உள்ளது. நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

வறட்சி...
இதற்கிடையே, கோவை நகருக்குள் போதிய மழை பெய்யாததால், அங்குள்ள குளங்களுக்கு நீர்வரத்து இல்லாமல் வறண்டே காணப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications