தருமபுரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சின்னசாமி காலமானார்! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
சென்னை: தருமபுரி முன்னாள் எம்.எல்.ஏ ஆர். சின்னசாமி காலமானார். தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் 3 முறை திமுக சார்பில் போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏவாக இருந்தவர் சின்னசாமி. ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட திமுக செயலாளராக 15 ஆண்டுகள் பொறுப்பு வகித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட திமுகவின் மூத்த முன்னோடி ஆர்.சின்னசாமி. 1971, 1984 மற்றும் 1989-ஆம் ஆண்டு தேர்தல்களில் திமுக சார்பில் தருமபுரி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக ஆர்.சின்னசாமி இன்று காலமானார்.

அவரது மறைவு தருமபுரி மாவட்ட திமுகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சியினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஆர்.சின்னசாமி மறைவையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், "1971, 1984 மற்றும் 1989-ஆம் ஆண்டு தேர்தல்களில், தி.மு.கழக உறுப்பினராகத் தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் வென்றவரும், ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டக் கழகத்தின் முன்ணன் செயலாளருமான ஆர். சின்னசாமி அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.
சின்னசாமி அவர்கள் மூன்று முறை தருமபுரி சட்டமன்ற உறுப்பினராக இருந்து அம்மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பெரும் பணிகளை ஆற்றியவர். மூத்த முன்னோடியாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுபெரும் உறுப்பினராக இருந்து. நமக்கு வழிகாட்டிய ஆர். சின்னசாமி அவர்களின் மறைவு தருமபுரி மக்களுக்கும் கழகத்துக்கும் பேரிழப்பாகும்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும், பொதுமக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications