தஞ்சாவூர் தட்டுக்கு புவிசார்குறியீடு அங்கீகாரச் சான்றிதழ்!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலைத்தட்டு, தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் ஓவியம், நாச்சியார் கோவில் குத்துவிளக்கு, சுவாமிமலை வெண்கலசிலைகளுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் கலைத்தட்டு பிரசித்தி பெற்றதாகும். இந்த கலைத்தட்டுக்கு உலக அங்கீகாரம் கிடைக்கும் வகையில் புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. இதற்கான புவிசார் குறியீடு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. இந்த புவிசார் குறியீட்டிற்கான அங்கீகார சான்றிதழ் நேற்று தஞ்சையில் வழங்கப்பட்டது.
இந்த அங்கீகார சான்றிதழை, தஞ்சை மாவட்ட தொழில் மையம் மற்றும் 52 பேர்களுக்கு வழங்கப்பட்டது. தொழில் மைய மேலாளர் ராமலிங்கம் மற்றும் 52 கலைத்தட்டு கைவினைஞர்கள் பெற்றுக்கொண்டனர்.
இந்த சான்றிதழ்களை அறிவுசார் சொத்துரிமை வக்கீல் சங்க தலைவரும், அரசு வக்கீலுமான சஞ்சய்காந்தி, தஞ்சை மாவட்ட தொழில் மைய மேலாளர் ராமலிங்கம் ஆகியோர் வழங்கினர்.

27 பொருட்கள்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அறிவு சார் சொத்துரிமை வக்கீல் சங்க தலைவர் சஞ்சய்காந்தி, இந்தியா முழுவதும் 215 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. இதில் தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் ஓவியம், நாச்சியார் கோவில் குத்துவிளக்கு, சுவாமிமலை வெண்கலசிலைகள் ஆகியவை அடங்கும்.

அங்கீகாரச் சான்றிதழ்
தற்போது தஞ்சாவூர் கலைத்தட்டுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. அதுவும் தொழில் மையம் மற்றும் தனிப்பட்ட நபர்கள் 52 பேருக்கு அங்கீகார சான்றிதழ் வழங்குவது இதுவே முதல்முறை.

புவிசார் குறியீடு
ஒரு குறிப்பிட்ட இடத்தையோ (புவியியல்) அல்லது தோற்றத்தையோ( எ.கா. நகரம், வட்டாரம், நாடு ), குறிப்பிடும் பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம், "புவிசார் குறியீடு' (ஜியாகிரபிக்கல் இண்டிகேஷன்) எனப்படுகிறது. இக்குறியீடு, அந்த பொருளின் சொந்த இடத்தின் தரத்தையும், நன்மதிப்பையும் பறை சாற்றும் சின்னமாக விளங்கும். இந்தியாவில் பாரம்பரியம் மிக்க பொருட்களுக்கு, மத்திய அரசு அங்கீகாரம் அளித்து பாதுகாக்கிறது. இச்சட்டம் 1999ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, செப்டம்பர் 15, 2003ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது.

உலக அங்கீகாரம்
தஞ்சாவூர் கலைத்தட்டு 17ஆம் நூற்றாண்டில் மன்னர் சரபோஜி காலத்தில் வடிவமைக்கப்பட்டது. தற்போது புவிசார் குறியீடு பெற்றுள்ளதன் மூலம் தஞ்சாவூர் கலைத்தட்டு உலக அங்கீகாரம் பெற்றுள்ளது.

27 பொருட்களுக்கு
மேலும் தமிழகத்தில் 27 பொருட்களுக்கு விரைவில் புவிசார் குறியீடு கிடைக்கப்பெற உள்ளது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, சேலம் மாங்காய், கோவில்பட்டி கடலைமிட்டாய், தமிழக அரசு அறிவித்துள்ள 10 பொருட்களான மாமல்லபுரம் கற்சிற்பம், தம்மம்பட்டி மரவேலைப்பாடு, மயிலாடி கற்சிற்பம், தஞ்சாவூர் நெட்டிங்வேலைப்பாடு, தஞ்சாவூர் பூ வேலைப்பாடு உள்பட 27 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான முதல்கட்ட பணி முடிந்து 2-வது கட்ட பணி நடைபெறுகிறது. விரைவில் இதற்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற உள்ளது.

பொன்னி, சீரகசம்பா நெல்ரகம்
மேலும் சுலோச்சனா பன்னீர்செல்வம் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான அறிவுசார் சொத்துரிமை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களில் தலைசிறந்த பொருட்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் பரிசு, விருது வழங்க உள்ளோம்.
இந்த மையத்தின் மூலம் வேளாண்மை உற்பத்தி பொருட்கள் மற்றும் குடிசை தொழில் உற்பத்தி பொருட்களை புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்க உள்ளோம்.
அதன்படி முதல்கட்டமாக தஞ்சை பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பழமை வாய்ந்த நெல்ரகமான சீரகசம்பா, பொன்னி நெல் ரகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் கருவாடு போன்றவற்றுக்கு புவிசார் குறியீடு பெற விரைவில் விண்ணப்பிக்க உள்ளதாகவும் சஞ்சய் காந்தி கூறினார்.

சட்டப்படி நடவடிக்கை
புவிசார் குறியீடு கிடைத்திருப்பதால், வெளிநாட்டு ஏற்றுமதிக்கு, குறிப்பிட்ட விலையை இனி நிர்ணயிக்க முடியும். உற்பத்தியாளர்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.
இந்தப் பொருட்களை, வேறு எந்தப் பகுதியிலும் தயாரித்து, அவைகளை தஞ்சாவூர் தட்டு, வீணை, பத்தமடை பாய் என்றோ, நாச்சியார் கோவில் விளக்கு என்றோ, யாராவது விற்பனை செய்தால், அவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கலாம்.












Click it and Unblock the Notifications