பூங்கொத்து, பழக்கூடை பரிசுகள் வேண்டாம்.. அதிகாரிகளிடம் 'ஸ்ட்ரிக்ட்டாக' சொன்ன கிரிஜா வைத்தியநாதன்
பரிசு பொருட்களை தவிர்க்குமாறு தன்னை சந்திக்க வரும் அதிகாரிகளுக்கு தமிழக புதிய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: தன்னை சந்திக்க வரும் அதிகாரிகள் பூங்கொத்தோ, பழக்கூடைகளோ கொண்டு வரக்கூடாது என்று புதிய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு போட்டுள்ளார்.
புதிதாக பதவிக்கு வருவோருக்கு அவருக்கு கீழேயுள்ள அதிகாரிகள் நேரில் வந்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அப்போது பூங்கொத்து, சால்வை, பழக்கூடைகளை அன்பளிப்பாக வழங்குவதும் உண்டு.
இதேபோலத்தான், தமிழக அரசுக்கு புதிய தலைமை செயலாளர் பொறுப்பேற்கும்போது, அனைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், ஐ.பி.எஸ். அதிகாரிகளும், அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க பூங்கொத்துகள், பழக்கூடைகள் கொண்டுபோவது வழக்கம்.

கிரிஜா வைத்தியநாதன்
இப்போது புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பேற்றுள்ளார். ஏற்கனவே அப்பதவியிலிருந்த ராம மோகன ராவ் வீட்டில் நடந்த ஐடி சோதனைக்கு பிறகு, அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு கிரிஜா அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

பரிசுகள்
ஆனால் கிரிஜா வைத்தியநாதன் வித்தியாசமானவர் தன்னை பார்க்க வரும் எந்த அதிகாரிகளும் பூங்கொத்து, பழக்கூடைகளை கொண்டுவர வேண்டாம். தங்களின் வாழ்த்துகளை மட்டும் தெரிவித்தால் போதும் என்று கூறிவிட்டார்.

இனிமையான பேச்சு
சந்திக்க வரும் ஒவ்வொரு அதிகாரிகளையும் உட்கார வைத்து, அவரது வழக்கமான பாணியில் சிரித்தபடி இனிமையாக பேசுகிறாராம். நான்தான் தமிழகத்தின் உயர் அதிகாரி என நினைத்துவிடாதீர்கள். தனியாக என்னால் எதையும் சாதிக்க முடியாது. நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்தே தமிழக அரசை நிர்வகிக்க போகிறோம்.. என்று கூறி அனுப்புகிறாராம்.

மத்திய அரசு சாய்ஸ்
1981ம் ஆண்டு பேட்ஜ் அதிகாரியான, கிரிஜா வைத்தியநாதன் திறமையான, ஊழல் அற்ற அதிகாரி என பெயர் பெற்றவர். இவரைத்தான் தலைமைச் செயலராக நியமிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் விருப்பம், வலியுறுத்தல் என தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications