போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைக்கு திரும்புங்கள்: சட்டமாணவர்களுக்கு ஹைகோர்ட் அறிவுரை
சென்னை: டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை இடம் மாற்றம் செய்ய கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வரும் மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு வகுப்புக்கு திரும்ப வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
சென்னை பாரிமுனையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை இடம் மாற்றம் செய்யப் போவதாக வந்த தகவலை அடுத்து, அக்கல்லூரி மாணவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை மறியல், கோட்டை நோக்கி பேரணி என்று பலகட்ட போராட்டங்களை மாணவர்கள் நடத்தி வருகின்றனர்.
சாலைமறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நேற்று போலீசார் தடியடி நடத்தினர். பதிலுக்கு போலீசார் மீது சட்டக் கல்லூரி மாணவர்கள் கல் வீசினர். இதனால் பாரிமுனை பகுதி நேற்று போர்களம் போல காணப்பட்டது. போலீசாரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவசர வழக்கு
இந்த நிலையில், வழக்கறிஞர் ஆரோக்கியதாஸ் என்பவர் நீதிபதிகள் எஸ்.கே.அக்னி கோத்திரி, எம். வேணுகோபால் ஆகியோர் முன்பு ஆஜராகி சென்னை சட்டக் கல்லூரி மானவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கேட்டும், சட்டக் கல்லூரியை இடம் மாற்றம் செய்ய கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க கேட்டும் இந்த கோர்ட்டில் மாணவர் சார்பில் வழக்கு தொடர உள்ளோம். அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தார்.

கால அவகாசம் தேவை
அதற்கு நீதிபதிகள், கல்லூரியை இடம் மாற்றம் செய்யக் கூடாது என்று தலைமை செயலாளரை சந்தித்து நேற்று தான் மனு கொடுத்து உள்ளீர்கள் அந்த மனு மீது அரசு முடிவு எடுக்க கால அவகாசம் வேண்டும். உங்கள் கோரிக்கை நிராகரிக்கும் பட்சத்தில் இந்த கோர்ட்டை அணுகலாம். அதற்குள் இன்றே கோர்ட்டை அனுகியதை ஏற்க முடியாது.

வகுப்பறைக்கு திரும்புங்கள்
முதலில் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு வகுப்பறைக்கு திரும்புங்கள். அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இந்த நீதிமன்றத்திற்கு வாருங்கள் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர் .

போலீஸ் குவிப்பு
இதனிடையே சட்டக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து கல்லூரிக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறை தலைவர் அலுவலகம் மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகம் ஆகியவற்றை மாணவர்கள் முற்றுகையிடப்போவதாக செய்திகள் வந்ததை தொடர்ந்து இரு இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications