மாவட்டத் தலைநகரங்களிலிருந்து சென்னைக்கு மீண்டும் ஏசி பஸ்... இப்போதைக்கு இல்லையாம்ப்பா!
சென்னை: தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் இருந்து சென்னைக்கு "குளிர்சாதன" பஸ்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டு உள்ளதால் இந்த ஆண்டு கோடையிலும் பயணிகள் வெயில் தாக்கத்துடனே பயணிக்க வேண்டியுள்ளது.
அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 50க்கும் மேற்பட்ட குளிர்சாதன பஸ்கள் இயக்கப்பட்டன. சரியான பராமரிப்பின்மை மற்றும் போதிய வருவாய் இல்லாதது போன்ற காரணங்களால் 2011க்கு பின் பெரும்பாலான பஸ்கள் ஓரங்கட்டப்பட்டன.
அத்துடன் 30க்கும் மேற்பட்ட பஸ்கள் குளிர்சாதன வசதியில்லாத அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களாக மாற்றப்பட்டன. கடந்த 2012 -13 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் மாவட்ட தலைநகரங்களில் இருந்து சென்னைக்கு குளிர்சாதன வசதியுடைய பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும் இந்த அறிவிப்பு செயல்பாட்டிற்கு வரவில்லை.
இந்நிலையில் முதற்கட்டமாக மதுரை கோவையில் இருந்து சென்னைக்கு குளிர்சாதன பஸ்கள் இயக்கப்படும் என 2013 இல் போக்குவரத்து துறை அமைச்சர் உறுதி அளித்தார். இந்த அறிவிப்பும் நடைமுறைக்கு வரவில்லை.
அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தற்போது 10க்கும் குறைவான குளிர்சாதன பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரிக்கத் துவங்கியுள்ளது.

வரும் மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும். இப்போதே பெரும்பாலான பயணிகள் குளிர்சாதன பஸ்களில் பயணிக்கவே விரும்புகின்றனர்.
அதனால் ஆம்னி பஸ்களின் உரிமையாளர்களும் பிற மாநில போக்குவரத்து கழகங்களும் குளிர்சாதன பஸ்களை இயக்கி வருவாய் ஈட்டுகின்றன. அதனால் அரசு விரைவு போக்குவரத்து கழகமும் விரைவில் குளிர்சாதன பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர், " புதிய குளிர்சாதன பஸ்கள் இயக்கத்திற்கு வருவது தாமதம் ஆகியுள்ளது உண்மை தான். இருப்பினும் அந்த திட்டத்தை கைவிடவில்லை. விரைவில் குளிர்சாதன பஸ்களை தயாரிக்கும் பணியை போக்குவரத்து துறை மேற்கொள்ள வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications