காவிரி மேலாண்மை வாரியம் வரும்... பொறுமையா இருங்க! - சொல்லிட்டாரு எச் ராஜா
சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை ஏற்க மறுத்து கர்நாடகத்துக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறது மத்திய மோடி அரசு.
இந்திய வரலாற்றில் இத்தனை வெளிப்படையாக மத்திய அரசு ஒரு மாநிலத்துக்கு (தமிழகத்துக்கு) துரோகம் இழைத்ததில்லை என்று அத்தனை அரசியல் தலைவர்களும் சொல்லும் அளவுக்கு ஒருதலைப்பட்சமான செயல்பாடு இது.

ஆனால் மோடி அரசின் துரோகத்தை பூசி மெழுகி வருகின்றனர் தமிழக பாஜக தலைவர்கள்.
முன்பு தமிழிசை இந்தப் பழியைத் தூக்கி திமுக மீது போட்டுவிட்டுப் போனார். அவர் வழியைப் பின்பற்றி, அதே பல்லவியைப் பாடியுள்ளார் அக்கட்சியின் தேசிய செயலாளர் எச் ராஜா.
நாகை அருகேயுள்ள திருக்கடையூரில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "காவிரி பிரச்னையில் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது திமுகதான். தஞ்சாவூரில் விவசாயிகளுக்காக ஸ்டாலின் நடத்தவுள்ள போராட்டம் நாடகமே. கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியும், தமிழகத்தில் திமுகவும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. எனவே, இப் போராட்டத்தில் விவசாயிகள் பங்கேற்கக் கூடாது.
தேவையெனில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி, இந்தப் போராட்டத்தை திமுக நடத்தட்டும்.
மத்திய அரசு சட்டப்பூர்வமான காவிரி மேலாண்மை வாரியத்தை விரைவில் அமைக்கும். விவசாயிகள் அதுவரை பொறுமை காக்க வேண்டும்," என்றார்.


Click it and Unblock the Notifications
