புதுவையில் முதன்முறையாக இதய அறுவை சிகிச்சை- மருத்துவக் குழு சாதனை
புதுவை: புதுச்சேரி அரசு மருத்துவமனையில் முதன்முறையாக இரண்டு இதய நோயாளிகளுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நிகழ்த்தப்பட்டுள்ளது.
மாணிக்கம் என்ற நோயாளிக்கு இதய இரத்தக் குழாய் அறுவை சிகிச்சையும், 55 வயது பெண்மணி ஒருவருக்கு இதயத்தில் இருந்த ஓட்டையும் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக சரி செய்யப்பட்டுள்ளது.
சென்னை மருத்துவக் குழுவினருடன், புதுவை அரசு மருத்துவர்கள் 30 பேர் கொண்ட குழுவினரும் இந்த அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்தனர். இதுகுறித்து இதயவியல் துறை தலைவர் டாக்டர் மணிமாறன் கூறுகையில், "கடந்த காலங்களில் புதுவை நோயாளிகள் வெளி மாநிலங்களுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய சூழல் இருந்தது. இதனால் ஏழைமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து புதுவை அரசு மருத்துவமனைகளுடன் இணைந்து செய்த ஒப்பந்தப்படி 2 பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் 5 பேருக்கு சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இத்தகைய அறுவை சிகிச்சைகளை தனியார் மருத்துவமனையில் செய்ய ரூபாய் 5 லட்சம் வரை செலவாகும்.
இதய ஓட்டையை அடைக்க ரூபாய் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை ஆகும். வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள புதுவையை சேர்ந்த நோயாளிகளுக்கு இந்த அறுவை சிகிச்சை அரசால் இலவசமாக செய்யப் படுகிறது. ஏற்கனவே புதுவை அரசு பொதுமருத்துவமனையில் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தற்போது பெரிய அளவிலான இதய அறுவை சிசிக்சைகளையும் மேற்கொள்ள முடியும். இதன்மூலம் புதுவை அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு இதய அறுவை சிகிச்சை தொடர்பான பயிற்சியும் கிடைக்கும். எதிர்காலத்தில் நமது மருத்துவர்களே இதய அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு தகுதியை பெற முடியும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications