சுவாதி கொலை வழக்கை சிபிஐக்கு கோரிய ராம்குமாரின் தாயார் மனு தள்ளுபடி
சென்னை: சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி ராம்குமார் தாயார் புஷ்பம் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இளம் பெண் சுவாதி கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டார்.
சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் தான் குற்றவாளி என கூறி வருகிறது போலீஸ் தரப்பு. ஆனால் உண்மை குற்றவாளிகளை தப்பவிடுவதற்காக ராம்குமார் குற்றவாளியாக்கப்படுகிறார் என்கின்றனர் அவரது பெற்றோர்கள்.
இந்த வழக்கில் அப்பாவியான தன் மகன் ராம் குமாரை போலீஸார் கைது செய்துள்ளதாகவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் ராம்குமாரின் தாயார் புஷ்பம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

மனுவில் குற்றச்சாட்டு
இந்தக் கொலையில் பல உண்மை களை போலீசார் மறைத்துவிட்டனர். வேண்டுமென்றே எனது மகன் ராம்குமாரை குற்றவாளியாக்கியுள்ளனர். மோசமான புலன் விசாரணை நடந்து வருகிறது. தமிழக போலீசார் இந்த வழக்கை விசாரித்தால் உண்மை குற்றவாளிகள் தப்பிவிடுவர். ஆகவே இந்த கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று அதில் கோரியுள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் விசாரணை
இந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமராஜ், சுவாதி கொலை வழக்கை போலீஸார் சரியாக விசாரிக்கவில்லை. உண்மைக் குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக ராம்குமாரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே இந்த கொலைக்குப் பின்னால் உள்ள பல உண்மை வெளியே வரும் என்று வாதிட்டார்.

போலீஸ் தரப்பு வாதம்
போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் எமிலியாஸ், இந்த வழக்கிற்கு பதில்மனு தாக்கல் செய்ய விரும்பவில்லை. அதற்கு பதிலாக சுவாதி கொலை வழக்கில் போலீசார் நடத்திய அனைத்து விசாரணை அறிக்கை களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறோம். அதன்பிறகு இந்த நீதிமன்றம் ஒரு முடிவுக்கு வரட்டும் என்று கூறினார்.

உயர்நீதிமன்றம் சஸ்பெண்ஸ்
இம்மனு மீது கடந்த சில நாட்களாக விசாரணை நடைபெற்றது. இருதரப்பு வாதங்களும் ஆகஸ்ட் 30ம் தேதி நிறைவடைந்தன. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று ராம்குமார் தரப்பினர் எதிர்பார்த்தனர்.

தாயார் மனு தள்ளுபடி
இன்று உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பி.என்.பிரகாஷ், சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி ராம்குமாரின் தாயார் புஷ்பம் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications