சேறும் சகதியுமாக மாறிய சென்னை.. இந்த நோய்கள் பரவலாம் என டாக்டர்கள் எச்சரிக்கை
சென்னை: பெரு வெள்ளத்தைத் தொடர்ந்து தற்போது சென்னை நகரம் பெரும் குப்பைக் காடாக மாறிக் காணப்படுகிறது. எங்கு பார்த்தாலும் சேறும் சகதியு்மாக உள்ளது. வீதிகளில் மட்டுமல்லாமல் வெள்ளம் புகுந்த வீடுகளிலும் சேறும் சகதியும் மிகுந்திருப்பதால் மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் சென்னை நகரை விரைவாக சுத்தப்படுத்தாவிட்டால் பல்வேறு விதமான தொற்றுநோய்கள் பரவலாம் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
மலேரியா, எலிக் காய்ச்சல் என பல தொற்று நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்து வருவதாகவும் டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

எங்கு பார்த்தாலும் குப்பை
சென்னையைப் புரட்டிப் போட்ட கன மழையும் பெருவெள்ளமும் தற்போது போய் விட்டது. ஆனால் நகரமே குப்பைக் காடாகி விட்டது. எங்கு பார்த்தாலும் குப்பை தேங்கிக் கிடக்கிறது.

சேறும் சகதியும்
மேலும் சென்னை நகர சாலைகள், தெருக்களில் சேறும் சகதியும் தேங்கிக் கிடக்கிறது. பல பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் சகதியாக உள்ளது. அதை அகற்ற வழி தெரியாமல் மக்கள் விழித்துக் கொண்டுள்ளனர்.

குப்பைகளை அகற்றாவிட்டால்
தெருக்களிலும், வர்த்கப் பகுதிகளிலும் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றாவிட்டால் தொற்று நோய்கள் பரவலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஜேசிபி இயந்திரம் கொண்டு அதி வேகமாக இவற்றை அகற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எலிக் காய்ச்சல்
சாலைகளில் தேங்கிக் கிடக்கும் சேறு சகதி, கழிவு நீர் கலந்த வெள்ள நீரை மிதித்துக் கொண்டு அங்குமிங்கும் அடிக்கடி நடப்போருக்கு எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. ராயபுரம், சோழவரம், தண்டையார்பேட்டை பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவக் கூடும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.

தோல் நோய்கள்
முடிச்சூர், தாம்பரம், வண்டலூர், விருகம்பாக்கம், வடபழனி, ராமாவரம் பகுதியில் தோல் நோய்கள் பரவக் கூடும் என்று டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.

காலரா
அடையார், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளி் காலரா பரவும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக எச்சரிக்கப்படுகிறது. இங்குள்ள மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்த வேண்டும் என்றும் டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.

மலேரியா
போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மலேரியா பரவுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக டாக்டர்கள் கூறுகிறார்கள்.

வயிற்றுப் போக்கு
டயரியா எனப்படும் வயிற்றுப் போக்கு அபாயம் பல்வேறு பகுதிகளில் இருப்பதாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர். பொதுவாக சென்னை முழுவதும் தேங்கிக் கிடக்கும் குப்பைகளையும், சேறு சகதிகளையும் அப்புறப்படுத்தாவிட்டால் இந்த நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
தீவிரமடையும் சுத்தப்படுத்தும் பணி
இதற்கிடையே சென்னை நகரை சுத்தப்படுத்தும் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடந்து வருகின்றன. துப்புறவுத் தொழிலாளர்கள், தண்னார்வத் தொண்டர்கள் இப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications