ஓரினச் சேர்க்கை.. மறுத்த மாணவனை கட்டையால் அடித்துக் கொன்ற ஹோட்டல் உரிமையாளர்
சிதம்பரம்: ஓரினச்சேர்க்கை உறவுக்கு பிளஸ் ஒன் மாணவரை வலியுறுத்தினார் ஒரு ஹோட்டல் உரிமையாளர். அதற்கு அந்த மாணவர் மறுத்ததால் அவரை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்து விட்டார்.
கோவில் நகரான சிதம்பரத்தில்தான் இந்த வெறிச் செயல் நடந்துள்ளது.
சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்த கந்தசாமி, உமையபார்வதி தம்பதிக்கு சூரியபிரகாஷ் என்ற 16 வயது மகன் இருந்தார். சூரியபிரகாஷ், சிதம்பரத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 தேர்வு எழுதி விட்டு பிளஸ் 2 வகுப்பிற்காக சிறப்பு வகுப்புக்கு சென்று வந்தார்.
கடந்த 21ஆம் தேதி மாலை டியூசனுக்கு சென்ற சூரியபிரகாஷ் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரது சைக்கிள் மட்டும் குடியிருப்பு வளாகத்தில் நின்றது. சைக்கிளை குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தி விட்டு எங்கே சென்றிருப்பான் என்று பயந்து போன பெற்றோர் சூரியபிகாசின் செல்போனை தொடர்பு கொண்டனர். ஆனால் அது ஆப் செய்யப்பட்டிருந்தது.
கந்தசாமி தனது உறவினர்கள் பலருக்கும் செல்போனில் தொடர்பு கொண்டு மகன் காணாமல் போன் விவரத்தை கூறினார். இதில் சூரியபிரகாஷின் பெரியம்மா அலமேலு மங்கை தனது செல்போன் மூலம் சூரியபிரகாசின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது லைன் கிடைத்தது.
ஆனால் அதில் சூர்யபிரகாஷ் பேசவில்லை. மாறாக வேறு ஒரு நபர் பேசியுள்ளார். அந்த நபர், தனக்கு ரூ.25 லட்சம் கொடுத்தால் சூரியபிரகாஷை ஒப்படைத்து விடுவதாக கூறி செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
இதையடுத்து போலீஸில் புகார கொடுத்தனர் சூர்யபிரகாஷின் பெற்றோர். போலீஸார் தீவிர தேடுதலில் இறங்கினர். இந்நிலையில் 23ஆம் தேதி அன்று இரவு சூரியபிரகாஷ் வீட்டின் கீழ் தளத்தில் பூட்டப்பட்டிருந்த ஒரு ஹோட்டலில் இருந்து துர்நாற்றம் வீசியதுடன் ரத்தமும் வெளியேறியது.
இந்த ஹோட்டலின் உரிமையாளர் ஜவகர் பாபு. அதே பகுதியில்தான் வசித்து வருகிறார். அவர் தனது ஹோட்டல் முன்பு பினாயில் தெளிவித்துள்ளார். இதைப் பார்த்த சூர்யபிரகாஷின் பெற்றோருக்கு அவர் மீது சந்தேகம் வந்தது. இதையடுத்து போலீஸாருக்குத் தெரிவித்தனர்.
மேலும் ஜவகர் பாபுவிடம் ஹோட்டலைத் திறக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர் தப்பி ஓடப் பார்த்தார். இதையடுத்து அவரையும், அவரது மனைவியையும் அனைவரும் சேர்ந்து பிடித்து உதைத்தனர். இதற்குள் போலீஸார் வந்தனர். அவர்கள் வந்து ஹோட்டலைத் திறந்து பார்த்தபோது உள்ளே சூர்யபிரகாஷ் பிணமான நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
இதனையடுத்து, ஜவகர் பாபு, ஆரவள்ளி, தம்பி வசந்த் ஆகிய 3 பேரிடம் காவல்துறையினர் விசாரித்தனர். அதில் ஜவகர் பாபு முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினார். பின்னர் காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணையில் மாணவன் சூரியபிரகாஷை, தான் மட்டும் கொன்றதாக ஒப்புக்கொண்டார் ஜவகர் பாபு.
இதுகுறித்து அவர் போலீஸாரிடம் கூறுகையில்,
எனது குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வந்த சூரியபிரகாஷ் பார்க்க மிகவும் அழகாக இருப்பான். இதனால் அவனுட்ன் ஓரினச்சேர்க்கை வைத்துக்கொள்ள முயற்சி செய்தேன். கடந்த மாதம் மொட்டை மாடியில் தனியாக நின்ற அவனை கட்டிப்பிடித்து முத்தமிட்டு ஓரினச் சேர்க்கைக்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். பலனில்லை. என்னை தள்ளி விட்டு அவன் வீட்டுக்குள் சென்று விட்டான்.
ஓரினச்சேர்க்கை விஷயத்தை அவன் பெற்றோரிடம் கூறி விடுவானோ? என பயந்து தூக்கமின்றி தவித்தேன். ஆனால், அவன் யாரிடமும் சொல்லவில்லை. எனக்கிருந்த பயம் கொஞ்ச நாட்களில் நீங்கியது. மீண்டும் அவனை ஓரினச்சேர்க்கைக்கு பணிய வைக்க நினைத்தேன்.
கடந்த 20ஆம் தேதி எனது மனைவி ஆரவள்ளி குழந்தைகளுடன் அவரது தந்தை ஊரான சி.முட்லூருக்கு சென்று விட்டார். இந்த நேரத்தில் எப்படியாவது சூரியபிரகாசை எனது ஆசைக்கு இணங்க வைக்க திட்டமிட்டேன்.
21ஆம் தேதி அன்று இரவு டியூசன் சென்று வீடு திரும்பிய சூரியபிரகாசை எனது வீட்டுக்குள் தள்ளி கதவை சாத்தினேன். பின்னர் அவனை என்னுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வற்புறுத்தியபோது அவன் ஒத்துழைக்க மறுத்து சத்தம்போட்டான். இதனால் அவன் தலையில் உருட்டு கட்டையால் அடித்தேன்.
இதில் மயங்கி விழுந்த அவனுடன் உறவு கொள்ள முயன்றேன். அதற்குள் மயக்கம் தெளிந்து அவன் சத்தம் போட்டான். இதனால் ஆத்திரமடைந்த நான் உருட்டுக்கட்டையால் மீண்டும் அவன் தலையில் சரமாரியாக தாக்கி கொன்று விட்டேன். பின்பு அவனது தலைமைய பாலித்தீன் கவரால் மூடி சாக்குமூட்டையில் கட்டினேன்.
பின்னர் நள்ளிரவில் சாக்குமூட்டையில் கட்டப்பட்ட அவனது உடலை வளாகத்துக்கு கொண்டு வந்தேன். அப்போது ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் உடலை எனது ஹோட்டலுக்குள் மறைத்து வைத்து விட்டேன். மறுநாள் கந்தசாமியுடன் சேர்ந்து நானும் சூரியபிரகாஷை தேடுவது போல் நாடகமாடினேன்.
மேலும் காவல்துறையினரின் கவனத்தை திசை திருப்ப ரூ.25 லட்சம் கேட்டு கடத்தல் நாடகமும் நடத்தினேன். இதற்கிடையில் எப்படியாவது பிணத்தை வெளியே கொண்டு வர மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்நிலையில் துர்நாற்றம் வீச தொடங்கியதால் இந்த கொலை வழக்கில் நான் சிக்கி கொண்டேன் என்றார்.












Click it and Unblock the Notifications