துப்பாக்கி சூடுக்கு உத்தரவிட துணை தாசில்தாருக்கு உரிமை உள்ளதா? முதல்வருக்கு ஏன் முன்பே தெரியவில்லை?
Recommended Video

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடத்த 2 துணை வட்டாட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர் என்ற தகவல் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி தனி துணை வட்டாட்சியர் (தேர்தல்) சேகர், மண்டல துணை வட்டாட்சியர் கண்ணன் ஆகியோர் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டு, சுமார் 10,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஒரு சம்பவத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பை 2 துணை தாசில்தார்கள்தான் வகித்தார்களா என்ற கேள்வி அனைத்து மட்டங்களிலும் எழுந்துள்ளது.

சுட்டது யார்?
தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு அனுமதி வழங்கியது யார் என்ற கேள்வி இத்தனை நாட்களாக தமிழக மக்கள் மனதில் எழுந்து கொண்டிருந்தது. மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் சம்பவம் நடந்த அடுத்த நாள் முதலே இந்த கேள்விக்கு அரசு பதில் அளிக்க கேட்டுக்கொண்டுள்ளனர். நிருபர்களும் அமைச்சர்கள், முதல்வர் என அதிகாரத்தில் உள்ளவர்களை நோக்கி நேரடியாகவே இந்த கேள்வியை முன் வைத்து வருகிறார்கள்.

ஆர்டர் போடவில்லை
சில தினங்கள் முன்பு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தபோது இக்கேள்வியை நிருபர்கள் முன் வைத்தனர். அவரோ, யாருமே ஆர்டர் கொடுக்கவில்லை. தற்காப்புக்காக போலீசார் சுட்டனர் என்று தெரிவித்தார். போலீஸ் துப்பாக்கி சூட்டை முற்றிலும் நியாயப்படுத்துவதை போல இருந்தது அவரது பேட்டி. மேலும், துப்பாக்கி சூடு பற்றி டிவி சேனல்களை பார்த்துதான் தனக்கே தெரியும் என்றும் கூறினார்.

முதல்வருக்கு ஏன் தெரியவில்லை?
ஆனால், காவல்துறை எப்.ஐ.ஆரில் 2 துணை வட்டாட்சியர்கள் முறையே, கலெக்டர் அலுவலகம் மற்றும் நகருக்குள் துப்பாக்கி சூடு நடத்த அனுமதியளித்ததாக குறிப்பிட்டுள்ளது. துணை வட்டாட்சியர்கள் இவ்வாறு உத்தரவை பிறப்பித்தது முதல்வருக்கு ஏன் தெரியாமல் போனது? யாருமே உத்தரவு பிறப்பிக்காமல் தற்காப்புக்காக போலீசார் சுட்டதாகவும், தனக்கு இதைப் பற்றி தெரியாது என்றும் மாநிலத்தின் முதல்வரே கூறியபிறகு, இவ்வாறு ஒரு எப்.ஐ.ஆர் பதியப்பட்டது எப்படி என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அதிகாரம் வட்டாட்சியருக்கு உள்ளதா
மேலும், துப்பாக்கி சூடு ஆர்டரை பிறப்பிக்கும் அதிகாரம் துணை வட்டாட்சியருக்கு இருக்கிறதா என்ற கேள்வி சட்ட வல்லுநர்களிடம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக சில சட்ட துறையினரிடம் நாம் பேசினோம். அவர்கள் கூறுகையில், பொதுமக்கள் அல்லது போலீசாரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் எழுந்தால், அதுகுறித்து மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்து அவர் அனுமதி பெற்று துப்பாக்கி சூடு நடத்த வேண்டும், அல்லது மாவட்ட கலெக்டர் அதுபோன்ற ஆர்டரை பிறப்பிக்கலாம்.

யாருக்கு அதிகாரம்
நகர்ப்புறங்களில் என்றால், குறைந்தபட்சம் துணை போலீஸ் கமிஷனர் (டிசிபி) மட்டத்திலும், மாவட்ட அளவில் என்றால் எஸ்.பியும் (இவர்கள் எல்லோரும் ஐபிஎஸ் மட்டத்திலான அதிகாரிகள்) துப்பாக்கி சூடுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியும். ஆனாலும், அவர்கள் அதுகுறித்து உடனடியாக தங்கள் மேலதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலதிகாரி என்பது கலெக்டரை குறிக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். ஆனால், துணை வட்டாட்சியர்கள் துப்பாக்கி சூடுக்கு ஆர்டர் கொடுத்தனர், அதுவும் கூட 2 நாள் கழித்தும் முதல்வருக்கு கூட தெரியாமல் இருந்தது என்பதெல்லாம் நம்பும்படியாக இல்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications