கானல் நீராகும், திமுக-தேமுதிக கூட்டணி.. விழிபிதுங்கும் விஜயகாந்த், கலக்கத்தில் கருணாநிதி!
சென்னை: சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணிக்கு வரவிடாமல் தேமுதிகவை தடுக்கும் காரணிகள் பல உள்ளன. ஒருவேளை கூட்டணி அமைத்தால், இக்காரணங்களுக்கெல்லாம் விடை தேட வேண்டிய கட்டாயம் விஜயகாந்த்துக்கு வரும்.
சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி முடிவை அறிவிப்பதில், தேமுதிக இன்னும் இழுபறி நிலையில் உள்ளது. அக்கட்சி நம்முடன் வருமா என மக்கள் நல கூட்டணியும், பாஜகவும் மட்டுமின்றி, திமுகவும் வழிமீது விழி வைத்து காத்துள்ளது.
திமுகவுடன் இணைவதுதான் வாக்கு வங்கியை பெருக்க உதவும் என்ற கருத்து தேமுதிகவின் தொண்டர்கள் 60 சதவீதம் பேருக்கு இருப்பதாக நக்கீரன் கருத்துக்கணிப்பு கூறுகிறது. இந்த சூழ்நிலையில், திமுகவுடன், தேமுதிக சேருவதற்கு தடையாக உள்ள சில காரணங்கள் இவைதான்:

ஆண்டவனோடும், மக்களோடும் கூட்டணி
2005ம் ஆண்டு தேமுதிக என்ற கட்சியை மதுரையில் தொடங்கிய விஜயகாந்த், ஆண்டவனோடும், மக்களுடனும்தான் கூட்டணி என்று அறிவித்தார். சொன்னபடியே 2006 சட்டசபை தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட்டது.

முதல் தேர்தலில் முத்திரை
விஜயகாந்த் மட்டும் விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்றபோதிலும், தேமுதிக கணிசமான இடங்களில் ஓட்டுவேட்டையாடியது. அதன் வாக்கு சதவீதம், அதிமுக மற்றும் திமுக தலைமைகளை மலைப்புக்குள்ளாக்கியது.

மாற்றாக உருவானவர்
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சி ஆட்சிமுறையால் சலித்துப்போயிருந்த மக்கள், மாற்றாக, விஜயகாந்த்தை பார்த்ததன் விளைவாக அவருக்கு இவ்வளவு வாக்குகள் கிடைத்ததாக அரசியல் நோக்கர்களும், ஊடகங்களும் கள நிலவரத்தை கூறின.

மக்களவை தேர்தலிலும் தனித்து
சட்டசபை தேர்தல் கொடுத்த ஊக்கத்தால், 2009ல் நடைபெற்ற மக்களவை தேர்தலின்போதும், தமிழகத்தின் 39 பிளஸ், புதுச்சேரியின் 1 தொகுதி ஆகிய 40 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து போட்டியிட்டது., இத்தேர்தலில் தேமுதிகவால் வெற்றிக்கனியை பறிக்க முடியாவிட்டாலும், வாங்கி ஓட்டுக்கள் அபாரம்.

அபார வாக்குகள்
கள்ளக்குறிச்சியில், தேமுதிக வேட்பாளர் சுதீஷ் 1லட்சத்து 32 ஆயிரம் வாக்குகளை வாங்கி குவித்தார். கொங்கு மண்டலம் தவிர்த்து ஏனைய அனைத்து பகுதிகளிலும் தேமுதிக வேட்பாளர்கள் 70 ஆயிரம் முதல் 1 லட்சமும் அதற்கு மேலும் வாக்குகளை வாங்கி அசத்தினர்.

பதவிக்கு மயங்கிய விஜயகாந்த்
விஜயகாந்த்தின் வளர்ச்சி பிற கட்சிகள் கண்களை உறுத்தியது. 2011 தேர்தலில் தேமுதிகவை அரவணைத்தார் ஜெயலலிதா. "எத்தனை நாட்களுக்குத்தான், வாக்குகளை பிரிப்பதை வேலையாக வைத்திருப்பீர்கள், நீங்களும், கட்சியினரும் பதவி சுகம் அனுபவிக்க வேண்டாமா.." என்பது போன்ற ஆசை வார்த்தைகளுக்கு மயங்கிய விஜயகாந்த் 2011 சட்டசபை தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்தார்.

திமுக வெறுப்பு வாக்குகள்
இலங்கை பிரச்சினை, 2ஜி ஊழல், குடும்பத்தினரின் அராஜகபோக்கு என திமுக மீது இருந்த அத்தனை வெறுப்பையும், அதிமுக கூட்டணிக்கு ஆதரவு வாக்குகளாக கொட்டினர் மக்கள். 41 தொகுதிகளில் போட்டியிட்ட விஜயகாந்த் கட்சி 29 தொகுதிகளில் வெற்றிபெற்றது., திமுக எதிர்க்கட்சியாக கூட வரமுடியவில்லை. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஒரே கூட்டணியினராக மாறிய அதிசயமும் நடந்தது.

மக்கள் அதிருப்தி
அமைச்சர்களுக்கு இணையான மதிப்பு கொண்ட எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்ததோடு, கணிசமான எம்.எல்.ஏக்களை சம்பாதித்த மகிழ்ச்சியில் விஜயகாந்த் திளைத்திருந்தாலும், மக்களோடும், ஆண்டவனோடும்தான் கூட்டணி என்று அவர் கூறியதை நம்பியிருந்த மக்களின் அதிருப்தியையும் சேர்த்தே சம்பாதித்தார். இதன்பிறகு ஜெயலலிதாவோடு, சட்டசபையில் மோதி, கூட்டணியை விட்டு வெளியேறியது பழையகதை.

விஜயகாந்த்துக்கு சரிவு
இந்நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தபோதும், இடைத்தேர்தல்களின்போதும், டெல்லி சட்டசபை தேர்தலின்போதும், தேமுதிக வாக்கு வங்கி அதளபாதாளத்திற்கு சரிந்தது. வாக்குறுதியை மறந்து அதிமுகவோடு கூட்டணி வைத்ததுதான் விஜயகாந்த் வீழ்ச்சிக்கு காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

திமுகவோடும் கூட்டணியா
இந்நிலையில், திமுகவோடு கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டால், விஜயகாந்த் இன்னும் பெரிய வீழ்ச்சியை சந்தித்து, அதிமுக, திமுகவுக்கு மாற்று சக்தி என்ற நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிடுவார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இது தேமுதிக-திமுக கூட்டணியின் முன்னால் நிற்கும் பெரிய தடை.

கூட்டணியில் முரண்
திமுக ஆட்சியில், விஜயகாந்த்தின் கோயம்பேடு திருமண மண்டபம் இடிக்கப்பட்டது. இதற்காகத்தான் அவசரமாக அரசியலுக்குள் வந்தார் விஜயகாந்த் என்ற பேச்சு உண்டு. இப்போது அதே திமுகவோடு கூட்டணி வைப்பதை அவரது தொண்டர்களே முரணாகத்தான் பார்ப்பார்கள்.

சீட் பங்கீடு
தேமுதிக தற்போது தமிழகத்தின் எதிர்க்கட்சி. ஆனால் திமுகவோ, சாதாரண கட்சியாகத்தான் உள்ளது. நடைபெற்ற மக்களவை தேர்தலில் கூட திமுக ஒரு தொகுதியிலும் வெற்றிபெற முடியவில்லை. எனவே, தங்களைவிட பலவீனமாக உள்ள திமுகவுக்கு அதிக சீட்டும், தேமுதிகவுக்கு அதைவிட குறைந்த சீட்டும் பெற்று தேர்தலில் போட்டியிடுவதை விஜயகாந்த் மரியாதை குறைவாக பார்க்கிறார்.

கருணாநிதிக்கு நெருக்கடி
விஜயகாந்த் கட்சிக்கு அதிக சீட்டை கொடுத்துவிட்டு திமுக குறைந்த சீட்டில் போட்டியிட்டாலோ, அல்லது சம அளவு தொகுதிகளில் போட்டியிட்டாலோ, திமுகவின் பெரும்பாலான தொண்டர்களே அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்ற நெருக்கடியில் கருணாநிதி உள்ளார்.

விஜயகாந்த்தை அசிங்கப்படுத்திய திமுக
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவோடு விஜயகாந்த் கூட்டணி அமைத்தார் என்பதற்காக, திமுக குடும்ப தொலைக்காட்சி சேனல்களும், பத்திரிகை ஊடகங்களும், விஜயகாந்த்தை மதுவுக்கு அடிமை என தொடர்ச்சியாக சித்தரித்தன. அவர் வேட்பாளர்களை அடிப்பது போன்ற காட்சிகளை திரும்ப திரும்ப காட்டின. அவற்றை மக்கள் ஏற்கவில்லை என்றபோதிலும், விஜயகாந்த்துக்கும் அவரது கட்சியினருக்கும், திமுக குடும்ப ஊடகங்கள் செயல்பாடு ஆறாத வடுவாக காட்சியளிக்கின்றன. மீம்ஸ்கள் உருவாக திமுக குடும்ப ஊடகங்களே தொடக்க புள்ளி எடுத்து கொடுத்தன என்ற கோபம் விஜயகாந்த்துக்கு உள்ளது.

இரு முதல்வர்கள்
திமுகவின் முதல்வர் வேட்பாளர் கருணாநிதி என்று அதன் பொருளாளர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தேமுதிகவோ விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளர் என்கிறது. இரு முதல்வர் வேட்பாளர்களை கொண்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கும் முன்பாக, ஒரே முதல்வர் வேட்பாளரை அறிவிப்பது கட்டாயம். அதில் பெரிய சிக்கல் நிலவுகிறது. விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க திமுகவும், கருணாநிதியையோ அல்லது ஸ்டாலினையோ அறிவிக்க விஜயகாந்த்தும் சம்மதிக்கப்போவதில்லை.

தடைகளை தாண்டுமா?
பீகாரை போன்று முதல்வர் பதவியை பங்கிட்டு ஆட்சி நடத்தும் திட்டத்தை விஜயகாந்த் முன்வைப்பதாக தெரிகிறது. கர்நாடகாவில் எடியூப்பா-குமாரசாமி இதுபோல இணைந்து ஆட்சி நடத்திவிட்டு பட்டபாடு பெரும்பாடு என்பதால், அனுபவசாலியான கருணாநிதி இதற்கு ஒப்புக்கொள்ளப்போவதில்லை என்கிறது கள நிலவரம். இப்படி ஒருபாடு தடைகளை தாண்டினால்தான், திமுக-தேமுதிக கூட்டணி சாத்தியம்.
-
திருச்சி திமுக மாநில மாநாடு LIVE:உங்க அப்பனே வந்தாலும் நடக்காது! பாஜவுக்கு சவால் விட்ட ஸ்டாலின் -
அப்போ நான் கைக் குழந்தையா இருந்தப்போ.. இதே திருச்சியில் தான்! பழைய நினைவுகளை பகிர்ந்த ஸ்டாலின்! -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
திருச்சி திமுக மாநாட்டில் கமகமக்கும் பிரியாணி.. 10 லட்சம் பேருக்கு சுடச்சுட ரெடி! -
கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிக்கொண்ட திமுக பிரமுகர்.. அண்ணாமலை வீடியோ -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
திமுக ஆட்சியில் 6 மாதம் மும்மொழிக் கொள்கை! அமெரிக்காவில் அண்ணா சொன்ன விளக்கம்! -
200+ உறுதி.. சிதறிய எதிர்க்கட்சிகள்... ஜாலியாக 'ஸ்வீப்' செய்யும் திமுக? பாலி மார்க்கெட் பரபர கணிப்பு -
ஸ்டாலினின் கையில் அந்த சர்ப்ரைஸ் லிஸ்ட்.. திமுக துரைமுருகன் முதல் பொன்முடி வரை! 15 விஐபிகளுக்கு கிலி? -
காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் என்னென்ன? டெல்லி தலைகளுடன் சென்னையில் நடந்த முக்கிய ஆலோசனை!












Click it and Unblock the Notifications