கர்நாடகாவில் மீண்டும் பாஜக வந்தால் இந்த 2 பேரில் ஒருவரே முதல்வர்.. போட்டு உடைக்கும் பத்திரிகையாளர்!
சென்னை : "கர்நாடகாவில் கடுமையான எதிர்ப்பின் காரணமாக இந்துத்வா அரசியலில் இருந்து பின்வாங்கி இருக்கிறது பாஜக, மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தீவிர இந்துத்வ முகத்தை முதல்வராக்குவார்கள்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் மணி.
பத்திரிகையாளர் மணி ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில், "எடியூரப்பாவை பாஜக ஒதுக்கி வைத்தது லிங்காயத் சமூகத்தினர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும். கர்நாடகாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது நடுத்தர, ஏழை மக்கள் மத்தியில் பெரிய அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பசவராஜ் பொம்மை அரசு மதவெறி அரசியலை கட்டவிழ்த்து விட்டதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு நிலவுகிறது.

எடியூரப்பாவை நிராகரிக்கும் மேலிடம் : கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு காரணமே எடியூரப்பாதான். லிங்காயத் சமூக வாக்குகளை அப்படியே பாஜகவுக்கு மடைமாற்றிவிட்டார். தென் இந்தியாவில் பாஜக காலூன்றுவது என்பது மிக மிக கடினமான காரியம். அதைச் செய்து பாஜக ஆட்சியை கர்நாடகாவில் கொண்டு வந்த எடியூரப்பாவை இன்று பாஜக தேசிய தலைமை நிராகரிக்கிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, எடியூரப்பாவை கண்டு கொள்ளாமல் அவரது மகனிடம் பூங்கொத்தைப் பெற்றுக் கொள்கிறார்.
அடுத்த முதலமைச்சர் : கொளுந்து விட்டு எரியும் மதவெறியை அனுமதித்தால், இன்னொரு முறை பாஜக ஆட்சிக்கு வந்தால் இன்னும் தீவிரமான இந்துத்வரை பாஜக முதல்வர் ஆக்கும். சிடி ரவி அல்லது பி.எல்.சந்தோஷ் போன்ற தீவிர ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களை இறக்கினால் கர்நாடகா இன்னொரு குஜராத்தாகவோ, உத்தர பிரதேசமாகவோ மாறும். இதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கிறது.
கர்நாடகாவில் இன்னும் நல்லவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதனால் தான் தீவிர இந்துத்வ அரசியல் எடுபடவில்லை என்று பின்வாங்கிவிட்டார்கள். பாஜக புத்திசாலித்தனமாக தங்கள் திட்டங்களை பரிசீலனைக்கு உட்படுத்திக்கொண்டே இருக்கும். இங்கு ஹிஜாப் அரசியல் வேலைக்கு ஆகவில்லை என்றுதான் நிறுத்திவிட்டது பாஜக.

வேலைக்கு ஆகவில்லை : இன்று கர்நாடகா பாஜக முழுக்க முழுக்க மோடியை நம்பியே இருக்கிறது. மோடி ஒரே நேரத்தில் பிரதமராகவும், கர்நாடகா முதல்வராகவும் இருக்க முடியாது. 2024ல் பாஜக வென்றால் அப்படிச் செய்யவும் ஒரு சட்டம் கொண்டு வரக்கூடும். 3 ஆண்டுகள் முதலமைச்சராக இருப்பவரை தவிர்த்துவிட்டு பிரதமர் மோடியை பிரதானமாக பாஜக முன்வைக்கிறது என்றால் எந்தளவுக்கு அங்கு பாஜக தோல்வி முகமாக இருக்கிறது என்பதை யோசிக்க வேண்டும்.
இன்று வரும் எல்லா கருத்துக்கணிப்புகளுமே காங்கிரஸ் வெற்றி பெறும் என்று சொல்கின்றன. ஆனால், வெற்றியின் வாயில் இருந்தே தோல்வியை கவ்வி எடுத்துக்கொள்வதில் காங்கிரஸ் ஸ்பெஷலிஸ்ட். ஏற்கனவே டிகே சிவகுமார் - சித்தராமையா இடையே மோதல் இருக்கிறது. காங்கிரஸ் ஜெயிக்க முடியாமல் போனால் நிச்சயமாக அதற்குக் காரணம் காங்கிரஸாகத்தான் இருக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications