உலகின் சிறந்த பல்கலை பட்டியல்: 150 இடங்களுக்குள் வராத இந்தியா.. 249வது இடத்தில் சென்னை ஐஐடி!
சென்னை: அமெரிக்க நிறுவனம் வெளியிட்டுள்ள சர்வதேச அளவில் கல்வி தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்திய பல்கலைக்கழகங்கள் எதுவும் முதல் 150 இடத்திற்குள் வரவில்லை. ஆனால், இந்தப் பட்டியலில் சென்னை ஐஐடி ஐந்து இடங்கள் முன்னேறி 249வது இடத்தைப் பிடித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று 2016-17ம் ஆண்டுக்கான சர்வதேச கல்வித் தரம் கொண்ட பல்கலைக்கழகங்களின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் அமெரிக்காவின் மஸாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இம்முறையும் உலக தரத்தில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதற்கடுத்த இடங்களில் ஸ்டான்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழங்கள் உள்ளன.

ரஷ்யா, சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள், முதல் 100 இடங்களுக்குள் வந்துள்ளன.
இந்தப் பட்டியலில் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெங்களூருவில் உள்ள ஐஐஎஸ்சி எனப்படும் இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம், 152வது இடத்தில் உள்ளது. சென்ற ஆண்டில் இந்நிறுவனம், 150வது இடத்தில் இருந்தது. தற்போது இரண்டு இடங்கள் பின் தங்கி 152வது இடத்திற்கு சென்றுள்ளது.
அதன் தொடர்ச்சியாக டெல்லி ஐஐடி 185வது இடத்திலும், மும்பை ஐஐடி 219வது இடத்திலும் உள்ளது. சென்னை ஐஐடியானது இந்தப் பட்டியலில் 249வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 5 இடங்கள் முன்னேற்றம் ஆகும்.
ஐஐடி கான்பூர், ஐஐடி காரக்பூர் மற்றும் ஐஐடி ரூர்கீ ஆகிய நிறுவனங்கள், முறையே 271, 313 மற்றும் 399 ஆகிய இடங்களைப் பிடித்துள்ளன.
இந்த பட்டியலைத் தயாரித்த குழுவின் தலைவர் பென் சவுட்டர் இது குறித்து கூறுகையில், "இந்திய பல்கலைக்கழகத்தின் இந்த நிலைக்கு பல்வேறு காரணங்களைக் கூறலாம். அதில் முக்கியமான ஒன்று இந்தியப் பல்கலைக்கழகங்கள் அதிகளவில் தரமான பிஹெச்டி மாணவர்களைக் கொண்டிராதது தான்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆய்வின் போது இந்தியாவில் ஒன்பது பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் சரி விகிதத்தில் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications