இன்று தினகரனுக்கு ஸ்லீப்பர் செல்... நாளை துணை முதல்வர் பதவி.. துண்டுபோடும் இளவரசி மகன் விவேக்?
ஆர்கே நகரில் தினகரனுக்காக வரிந்து கட்டிக் கொண்டு ஸ்லீப்பர் செல்லாக களமிறங்கியுள்ளார் இளவரசி மகன் விவேக். அதிமுக அம்மா அணியில் விவேக்தான் அடுத்த துணை முதல்வர் என்கிற பேச்சு பலமாகவே அடிபடுகிறது.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி தினகரனுக்கான ஸ்லீப்பர் செல்லாக முழு வீச்சில் இறங்கி செயல்படுகிறார் இளவரசி மகன் விவேக். பணப்பட்டுவாடா தொடங்கி அத்தனையும் விவேக் கட்டுப்பாட்டில்தான் விட்டிருக்கிறாராம் தினகரன்.
முதல்வர் நாற்காலியில் எப்படியும் அமர்ந்துவிட வேண்டும் என்கிற வெறித்தனத்தில் அனைத்துவித வியூகங்களையும் அரங்கேற்றி வருகிறது தினகரன் தரப்பு. அவருக்காக ஆர்கே நகர் தொகுதியில் முழுவீச்சில் களமிறங்கியுள்ளவர் இளவரசி மகன் விவேக்.
தினகரனை அதிமுக துணைப் பொதுச்செயலராக்கிய சசிகலாதான் அவர் ஆர்கே நகர் வேட்பாளர் என்ற போது அதிர்ந்து போனார். ஆனால் முதல்வர் நாற்காலியில் எப்படியும் அமர்ந்துவிடுவேன் என தினகரன் உறுதியளித்ததால் சசிகலாவும் அரைமனதாக ஏற்றுக் கொண்டுவிட்டார்.

முழுவீச்சில் விவேக்
இதையடுத்தே சசிகலாவின் நம்பிக்கைக்குரிய தளபதியான விவேக்கை முழுவீச்சில் ஆர்.கே.நகரில் இறங்க உத்தரவிட்டிருக்கிறார் சசிகலா. இப்போது தினகரனுக்காக ஆர்கே நகரில் 'ஆல் இன் ஆல்' அழகுராஜாவாக இறங்கியுள்ளார் விவேக்.

எல்லாம் பணம்
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரிடம் மனு கொடுத்த ஆர்கே நகர் தொகுதி வாசிகள் 60,000 பேருக்கும் இலவச வீடு கட்டித் தரப்படுவதை உறுதி செய்துள்ளாராம் விவேக். அத்துடன் கடன் கட்ட முடியாமல் தவிக்கும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களிடமும் தினகரனுக்கு ஓட்டுப் போடுங்க கடனை கட்டுகிறோம் என வாக்குறுதி அளித்துள்ளாராம் விவேக்.

100 பேர் குழு
விவேக் நேரடியாக களத்துக்கு வராமல் அவரது 100 பேர் கொண்ட குழுதான் இத்தனை வேலைகளையும் கனகச்சிதமாக செய்து கொண்டிருக்கிறதாம். ஆர்கே நகர் தொகுதி வாசிகளை ராயபுரம், துறைமுகம் தொகுதிகளுக்கு அழைத்து வந்து அவர்களுக்கான அத்தனை தேவைகளையும் நிறைவேற்றி தருவதும் இந்த 100 பேர் கொண்ட குழுவின் பணியாக இருக்கிறதாம்.

துணை முதல்வர் பதவிக்கு துண்டு?
டிடிவி தினகரன் வெற்றி பெற்று முதல்வராகிவிட்டால் 'அண்ணன்' விவேக்தான் துணை முதல்வர் என அடித்து சொல்கிறது அடிப்பொடி கும்பல். அந்த அளவுக்கு முழுவீச்சில் விவேக் களமிறங்கியுள்ளாராம். இதை திவாகரன் மகன் ஜெயானந்த் தரப்பு கடுகடுப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறது என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications