மத்திய அரசின் இந்தி திணிப்பு: பாஜக கூட்டணி தலைவர்களான ராமதாஸ், வைகோ கடும் எதிர்ப்பு!!
சென்னை: சமூக வலைதளங்களில் இந்தி மொழியைத்தான் அதிகாரிகள் பயன்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திமுக ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மோடி தலைமையிலான மத்திய அரசு, சமூக வலைதளங்களில் அந்தந்த அமைச்சக அதிகாரிகள் இந்தியை பயன்படுத்த முன்னுரிமை தர வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
அதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா மற்றும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
மத்திய அரசு அலுவல்களில் இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையை அடிப்படையாக வைத்து பெரும் சர்ச்சை வெடித்திருக்கிறது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலுவல் மொழிப் பிரிவு இயக்குனர் அவதேஷ் குமார் மிஸ்ரா கடந்த மே 27 ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில்,‘‘மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள், அனைத்துத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றின் சார்பில் அலுவல் சார்ந்த சமூக ஊடகங்களை கையாளும் அதிகாரிகள் இந்தி அல்லது இந்தி மற்றும் ஆங்கிலத்தை பயன்படுத்தலாம். எனினும் இந்தி மொழிக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்'' என்று கூறியிருந்தார். அவர் வெளியிட்ட இன்னொரு சுற்றறிக்கையில், அரசு அலுவல்களை முழுக்க முழுக்க இந்தி மொழியிலேயே மேற்கொண்ட அதிகாரிகளுக்கு பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இரு சுற்றறிக்கைகளும் தான் தொடர்பு மொழி குறித்த சர்ச்சைகள் வெடிப்பதற்குக் காரணமாகும்.
மத்திய அரசின் அலுவல் மொழியாக இந்தி இருப்பதை பயன்படுத்திக் கொண்டு, இந்தி பேசாத மாநில மக்கள் மீது அம்மொழியை திணிக்கும் முயற்சிகள் இந்திய விடுதலைக்கு முன்பிலிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களிடம் கடுமையான எதிர்ப்பு எழும்போதெல்லாம் இந்த முயற்சியில் இருந்து பின் வாங்குவதும், பின்னர் இன்னொரு தருணத்தில் வேறு வடிவத்தில் ஹிந்தியை திணிக்க முயற்சி செய்வதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. 1938 ஆம் ஆண்டில் கட்டாயப் பாடமாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நுழைய முயன்று விரட்டியடிக்கப்பட்ட இந்தி, அதன்பின் 27 ஆண்டுகள் கழித்து 1965ஆம் ஆண்டில் ஹிந்தி ஆட்சி மொழிச் சட்டம் என்ற பெயரில் நுழைவதற்கு முயன்றது. அப்போதும் பெரும் போராட்டத்தின் மூலம் விரட்டியடிக்கப்பட்ட இந்தியை இப்போது சமூக ஊடகங்களுக்கான அலுவல் சார்ந்த மொழி என்ற சற்று மென்மையான வடிவத்தில் திணிக்க மத்திய அரசு முயல்கிறது. இந்தியா என்பதே பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய நாடு தான். ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தனித்தனியாக மொழி, கலாச்சாரம் போன்ற அடையாளங்கள் உள்ளன.
அவ்வாறு இருக்கும் போது ஒரு தேசிய இனத்தின் மொழியான இந்தியை தமிழர்கள் உள்ளிட்ட மற்ற தேசிய இனங்களின் மீது கட்டாயப்படுத்தி திணிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.
அதுமட்டுமின்றி, தில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர் கிரன் ரிஜிஜு, அனைத்துத் துறைகளிலும் இந்தி மொழி ஊக்குவிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இதனால், இந்தி பேசாத மாநில மக்களிடத்தில் இந்தி திணிப்பு குறித்த அச்சம் அதிகரித்திருக்கிறது. எனினும், மத்திய உள்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங், ‘‘ இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் முக்கியம். அவை அனைத்தையும் வளர்க்க மத்திய அரசு உறுதி பூண்டிருக்கிறது'' என்று கூறியிருப்பது மட்டும் தான் நம்பிக்கை அளிக்கிறது. திரு. இராஜ்நாத் சிங் அவர்களின் டுவிட்டர் பதிவுகள் அனைத்தும் இந்தியில் இல்லாமல் ஆங்கிலத்தில் இருப்பதும் இந்த நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.
இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி மட்டும் அறிவிக்கப்பட்டிருப்பது தான், இந்தி பேசாத மாநில மக்கள் மீது அம்மொழி திணிக்கப்படுவதற்கு கருவியாக உள்ளது. இந்தியாவிலுள்ள அனைத்து மக்களுக்கும் மொழிச் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டுமானால் தமிழ் உட்பட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளும் ஆட்சி மொழிகளாக்கப்பட வேண்டும்.
இக்கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறது. மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முதன்முதலில் பதவியேற்ற பிறகு, புதுதில்லியில் 19.11.1998 அன்று அப்போது 8 ஆவது அட்டவணையில் இருந்த 18 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக அறிவிக்கக் கோரி எனது தலைமையில் மிகப்பெரிய மாநாட்டை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியது. அதற்காக 18 மொழிகளில் அச்சிடப்பட்டிருந்த அழைப்பிதழை பிரதமர் வாஜ்பாய் வியந்து பாராட்டினார். எங்கள் கோரிக்கை குறித்து ஆய்வு செய்வதாகவும் உறுதியளித்தார். மாநாட்டில் பங்கேற்ற பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் இக்கோரிக்கையை வலியுறுத்தினர். அதன்பின் வந்த அரசுகளும் இது தொடர்பாக வாக்குறுதி அளித்த போதிலும், அவை அனைத்துமே வாக்குறுதிகளாகத் தான் உள்ளன. தமிழ் ஆட்சி மொழி குறித்த எங்களின் எதிர்பார்ப்பு இன்னும் கனவாகவே இருந்து வருகிறது.
2014 மக்களவைத் தேர்தலுக்கான பாரதிய ஜனதாக் கட்சியின் தேர்தல் அறிக்கையில்,‘‘ இலக்கியம், வரலாறு, கலை மற்றும் அறிவியல் சாதனைகளின் களஞ்சியமாக திகழும் அனைத்து இந்திய மொழிகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்'' என கூறப்பட்டிருக்கிறது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக அறிவித்து இந்தி மொழித் திணிப்பு குறித்த சர்ச்சைக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
வைகோ
மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிக்கை:
மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், இந்த ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி அன்றும், மே மாதம் 27 ஆம் தேதி அன்றும் அனுப்பிய சுற்று அறிக்கைகளில், இணையதளம், முகநூல், ட்விட்டர், மின் அஞ்சல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், தற்போது ஆங்கில மொழி பயன்படுத்தப்பட்டு வருவதால், இனிமேல் இந்தி மொழியைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், அதற்கே முதல் இடம் தர வேண்டும் என்றும் அறிவித்து இருப்பது, மிகப்பெரிய அதிர்ச்சியைத் தருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தன் கருத்துகளைப் பதிவு செய்வதற்குச் சமூக வலைதளங்களையே முழுமையாகப் பயன்படுத்தி வருகின்ற நிலையில், தற்போதைய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பு மிகவும் கவலை தருகிறது.
1938 ஆம் ஆண்டில் இருந்தே இந்தி ஆதிக்கத்தை எதிர்த்துத் தமிழகம் தியாகம் நிறைந்த போராட்டங்களை நடத்தி இருக்கின்றது. 38 இல் தாளமுத்து-நடராசன் களபலியானது முதல், எட்டுத் தமிழர்கள் இந்தியை எதிர்த்துத் தீக்குளித்து மாண்டனர்.

1965 இல் நடைபெற்ற மொழிப்புரட்சியில், இந்திய இராணுவத்தின் அடக்குமுறையை எதிர்த்துத் தமிழக மாணவர்கள் களம் கண்டனர். பலர் உயிர்ப்பலி ஆயினர். பேரறிஞர் அண்ணா அவர்கள், 1963 இல் மாநிலங்கள் அவையில் பேசுகையில், ‘புகழ்மிக்க தமிழ் மொழிக்குச் சொந்தக்காரன் நான். எந்த மொழியில் இலக்கியங்களை, காவியங்களை நாங்கள் பெற்று இருக்கின்றோமோ, அந்த மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக உரிய இடத்தைப் பெறும் வரையில், நான் மனநிறைவு அடைய மாட்டேன்' என்றார்.
இந்தி ஆட்சி மொழியாக ஆவதைத் தடுக்க நடைபெற்ற அறப்போரில், இந்திய அரசியல் சட்டத்தின் 17 ஆவது பிரிவு தீயிடப்பட்டது. எண்ணற்றோர் சிறை புகுந்தனர். 1967 இல், அறிஞர் அண்ணா ஆட்சி அமைத்தவுடன், ‘தமிழ்நாட்டில் இந்திக்கு இடம் இல்லை' என்று சட்டம் நிறைவேற்றினார். எனவே, இந்தப் பிரச்சினை இந்தி பேசாத மக்களுக்குக் குறிப்பாகத் தமிழ்நாட்டு மக்களுக்குப் பெரும் கவலை தருகின்ற உணர்ச்சிமயமான பிரச்சினை ஆகும்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மொழிகளும் ஆட்சி மொழிகளாக வேண்டும்; அதுவரை ஆங்கிலம் மத்திய ஆட்சி மொழியாக நீடிப்பதுதான், பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் சிதையாமல் பாதுகாக்கும்.
1998 இல், அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்தபோது, அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சிமொழிகளாக ஆக்குவது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அமைக்கும் என அறிவித்தது.
2004 ஆம் ஆண்டு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்தபோதும், கொள்கை அளவில் இதை ஏற்பதாக உறுதி கூறப்பட்டது.
ஆனால் தற்போது மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ இந்தி நமது தேசிய மொழி ஆட்சி மொழி, எனவே, இதனை ஊக்குவிப்பேன் என்று கூறி உள்ளார்.
தமிழகம் இந்தி ஆதிக்கத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இந்தித் திணிப்பை எதிர்த்து, இரத்தமும், கண்ணீரும் சிந்தி மகத்தான போராட்டங்களைத் தமிழகம் நடத்தி வந்து உள்ளது. தூங்கும் வேங்கையை இடறுவது போன்ற செயலில், மத்திய அரசு ஈடுபடக் கூடாது எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
பாரிவேந்தர்
இதேபோல் பாஜகவின் மற்றொரு கூட்டணிக் கட்சியான இந்திய ஜனநாயகக் கட்சியும் இதை எதிர்த்துள்ளது. இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மாநிலங்கள் அனைத்தும் 1952 ல் மொழி வாரிமாநிலங்களாக பிரிக்கப்பட்டபோதே, அந்தந்த மாநில மொழிகளுக்கும் அரசியல் சட்ட பாதுகாப்பு வழங்கப்படும் என அப்போதைய பிரதமர் நேரு அவர்களும், சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர் அவர்களும் உறுதி அளித்தனர்.
அதன்படி சென்னை மகாணத்திற்குட்பட்ட சிலபகுதிகள் ஆந்திர மாநிலத்துடனும், கர்நாடகம் மற்றும் கேரளாவுடனும் இணைக்கப்பட்டன. அனைத்து மாநில மொழிகளும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதே வேளையில், இந்தி மொழி மத்திய அரசின் ஆட்சிமொழியாகவும் - ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் அறிவிக்கப்பட்டது.
இது குறித்து 1965 - ம் ஆண்டில் மறுபரீசிலனை செய்யப்படும் என சட்ட துணைவிதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில், அனைத்து மாநில மொழிகளும் மத்திய அரசின் ஆட்சி மொழியாகவும், அலுவல் மொழியாகவும் பயன்படுத்தப் படவேண்டும் என, இந்தி பேசாதா மாநிலங்களில் கோரிக்கை எழுந்தது. இதனை வலியுறுத்தி மிகப்பெரும் மொழிப் போரட்டமே தமிழகத்தில் நடைபெற்றது.
1964 ம் ஆண்டு, நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மனத்தின் மீது பேசிய பிரதமர் நேரு அவர்கள், ‘இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பாத வரையில் இந்தி மொழி திணிக்கப்படமாட்டாது' என வாக்குறுதி அளித்தார்.
இந்த வாக்குறுதிக்கு அரசியல் சட்ட பாதுகாப்பு அளிக்கும் வகையில், அரசியல் அமைப்புச் சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து மாநில மொழிகளுக்கும் அரசியல் சட்ட பாதுகாப்பு வழங்கும் வகையில், புதிய சட்ட மசோதா ஒன்றை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு பாரிவேந்தர் கூறியுள்ளார்.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications