செக்ரட்டரியேட் முதல் கோவில் கோபுரம் வரை.. தமிழகத்தில் அடுத்தடுத்து நடக்கும் அசம்பாவிதங்கள்
சென்னை: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வந்த வாரத்தில் இருந்து நடைபெறும் அசம்பாவித சம்பவங்களை தங்களுக்கு ஏற்படும் சகுண குறையாக பார்க்கிறார்கள் அதிமுகவினர்.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த மாதம் 27ம்தேதி தீர்ப்பு கூறப்பட்டது. இதற்காக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வரும் பெங்களூரிலுள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு ஆஜராக வருவதாக இருந்தது.

தலைமைச் செயலகத்தில் தீ
இந்நிலையில், 22ம்தேதி திங்கள்கிழமை, தமிழக தலைமைச் செயலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வாரத்தின் முதல் நாள் காலையிலேயே இதுபோன்ற ஒரு தீவிபத்து ஏற்படும்போதே அது ஆட்சியில் உள்ளவர்களுக்கு எதிரான கெட்ட சகுணமாக பார்க்கப்பட்டது.

முதல்வர் பதவி பறிபோனது
27ம்தேதி கோர்ட் ஜெயலலிதாவை குற்றவாளி என்று அறிவித்தது. நான்காண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு சிறை தண்டனையில் மாற்றமில்லை, ஆனால் அபராதம் குறைவாக விதிக்கப்பட்டது. இதையடுத்து முதல்வராக பெங்களூர் வந்த ஜெயலலிதா உடனடியாக முன்னாள் முதல்வரானதுடன், சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

தசராவின்போது சிறைவாசம்
ஜெயலலிதா சிறையில் இருந்தபோது அவர் வக்கீல்கள் ஜாமீனுக்கு கடும் பிரயத்தனம் செய்தனர். ஆனால் தசரா விடுமுறையால் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, இந்த ஜாமீன் மனுவை விசாரிக்க மறுத்துவிட்டார். இதனால் தசரா பண்டிகையின்போது ஜெயலலிதா சிறையிலேயே இருந்தார்.

விஜயதசமியில் பாம்பு
இந்நிலையில்தான் விஜயதசமி நாளான அக்டோபர் 3ம்தேதி, அதுவும் வெள்ளிக்கிழமை, பாம்பு ஒன்று தலைமைச் செயலகத்திற்குள் புகுந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து உள்ளே புகுந்த சாரைப் பாம்பை பிடித்துச் சென்றனர். நல்ல பாம்புடன் கூடக்கூடியது சாரைப்பாம்பு என்பதால், பாம்பு நுழைந்தது தோஷம்தான் என்று அப்போதே அதிமுகவில் பலரும் முணுமுணுத்தனர்.

கோவில் கோபுரத்தில் தீ
இதன் உச்சமாக நேற்று காளையார் கோயில் கோபுரம் தீபிடித்து எரிந்துள்ளது. அதுவும் அதிமுகவினர் கொளுத்திய பட்டாசால் கோயில் கோபுரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோயில் கோபுரத்தில் ஏதாவது விரிசல் என்றாலே ஆட்சியாளர்களுக்கு ஆபத்து என்று தொன்றுதொட்டு நம்பிக்கை நிலவும் சூழ்நிலையில், ஆளும்கட்சியினரால் கோபுரத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளது கடும் அபசகுணமாக அதிமுகவினரால் பார்க்கப்படுகிறது.

ஜாமீன் பிரச்சினை
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதாக கருதிக்கொண்டு அதிமுகவினர் பட்டாசு வெடித்தபோது கோபுரத்தில் தீ பிடித்தது. ஆனால் சற்று நேரத்திலேயே ஜாமீன் கிடைக்கவில்லை என்று தெரியவந்துவிட்டது. ஆனால் வருண பகவான் தக்க நேரத்தில் வந்து தீயை அணைத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications