கழுகு மலை, சுவாமிமலை உள்பட 6 புதிய புராதன நகரங்கள்... ஜெ. அறிவிப்பு!
சென்னை: கழுகு மலை, சுவாமி மலை, திருமுருகன்பூண்டி, புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், திருப்புனவாசல் மற்றும் திருபுவனம் ஆகிய ஆறு நகரங்களை முதல்வர் ஜெயலலிதா புராதன நகரங்களாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று தமிழ்நாடு சட்டசபை விதி 110ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா படித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

புராதன நகரங்கள்...
மாநிலத்தின் செழுமையான பாரம்பரியத்தைப் பேணிப் பாதுகாக்க இதுகாறும் 64 நகரங்கள் புராதன நகரங்கள் என அரசால் அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது.
கட்டமைப்பு வசதி மேம்பாடு...
இந்த புராதன நகரங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முன்னர் ஒவ்வொரு புராதன நகரத்திற்கும் தலா 50 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்பட்டு வந்தது. இதற்கான மானியத் தொகை 2012-2013 ஆம் ஆண்டில் 1 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.
மானியம்...
இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 64 புராதன நகரங்களில் 60 புராதன நகரங்களுக்கு இதுகாறும் 16 கோடியே 82 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள புராதன நகரங்களான திருப்பரங்குன்றம், திருவட்டாறு, சுசீந்திரம் மற்றும் கொடுமுடி ஆகிய நகரங்களில் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக தலா ஒரு கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.
புதிய 6 புராதன நகரங்கள்...
இது மட்டுமல்லாமல், திருமுருகன்பூண்டி, கழுகு மலை, சுவாமி மலை, புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், திருப்புனவாசல் மற்றும் திருபுவனம் ஆகிய ஆறு நகரங்கள் புராதன நகரங்களாக அறிவிக்கப்பட்டு, அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும். மொத்தத்தில், இந்த 10 நகரங்களுக்கும் 10 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும்" என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications