சேலம் மருத்துவமனையில் ஒரு பெண் குழந்தை மரணம்: 2 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை
தருமபுரி: தருமபுரியில் அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 3 குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை உயிரிழந்தது. மேலும் இரண்டு குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஊத்தக்கரையைச் சேர்ந்த தங்கமணி, சிவகுமார் தம்பதிக்கு திங்கட்கிழமையன்று பெண் குழந்தை பிறந்தது. எடை குறைவாக இருந்த அந்த குழந்தையுடன் மேலும் இரண்டு குழந்தைகள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் இன்று காலை 10.30 மணியளவில் சிவகுமார் - தங்கமணியின் குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தருமபுரி அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 3 குழந்தைகளில் 2 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பச்சிளங் குழந்தைகள் பிரிவில் கடந்த 14ஆம் தேதி மாலை முதல் 15-ஆம் தேதி மாலை வரை 6 குழந்தைகள் இறந்தன. குறைந்த எடை, குறை பிரசவம், நுரையீரல் பாதிப்புக்குள்ளான குழந்தைகளை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் வைத்து கண்காணித்த நிலையிலும் உடல் நிலை காரணமாக அந்த குழந்தை கள் இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது. மேலும், இந்த இறப்புகளின் பின்னணியில் மருத்துவ குறைபாடு உள்ளிட்ட காரணம் எதுவும் இல்லை என்றும் விளக்கம் தரப்பட்டது.
இருப்பினும் பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டிருந்தது. இந்த பதற்றம் தணியும் முன்பாகவே 16ஆம் தேதி மாலை 6 மணி முதல் 17ஆம் தேதி மதியம் வரை மீண்டும் 5 குழந்தைகள் இறந்துள்ளன. நான்கு நாட்களில் 11 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்துவிட பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இன்று ஒரு குழந்தை உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
ஓசூரைச் சேர்ந்த ராஜேஸ்வரி-மஞ்சுநாத் தம்பதிக்கு கடந்த 9ஆம் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. மூச்சுத் திணறல் மற்றும் குழந்தை அழாமல் இருந்த காரணங்களினால் 13-ஆம் தேதி தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பச்சிளங் குழந்தைகள் பிரிவில் சேர்க்கப்பட்டது. 2.6 கிலோ எடைகொண்ட அந்தக் குழந்தை தொடர் சிகிச்சை அளித்தும் 16-ஆம் தேதி மாலை 6.05 மணிக்கு இறந்துள்ளது.
தருமபுரி மாவட்டம் பொம்மிடி கன்னியம்மாள்-தங்கமணி தம்பதிக்கு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 14-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. மூச்சுத் திணறல் பாதிப்புக்கு ஆளானதால் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையை நாடியுள்ளனர். அவர்கள் ஆலோசனைப்படி தருமபுரி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். 2.6 கிலோ எடை கொண்ட இந்த குழந்தையும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 12.05 மணிக்கு இறந்துள்ளது.
பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி அம்பிகா 9 மாத கர்ப்பிணி. திடீர் வலிப்பு ஏற்பட இவர் பாப்பாரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடர்ந்து 3 முறை வலிப்பு ஏற்பட தருமபுரிக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மருத்துவ உதவியுடன் அம்பிகாவுக்கு பிரசவம் நடந்துள்ளது. 1.6 கிலோ எடை கொண்ட பெண் குழந்தை பனிக்குட நீரை குடித்ததாலும், குறை பிரசவத்தாலும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 2.50 மணிக்கு இறந்துள்ளது.
அரூர் வட்டம் கோட்டப்பட்டி ஜெயகலாவுக்கு 12-ஆம் தேதி அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. 1.9 கிலோ எடை கொண்ட இந்த குழந்தை அன்றே தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது.
பிறகு 14-ம் தேதி பெற்றோர் அந்த குழந்தைக்கு வெளியில் சிகிச்சை அளிப்பதாக பெற்றுச் சென்றுள்ளனர். பின்னர் 16-ம் தேதி காலையில் மீண்டும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் நேற்று காலை 9.10 மணிக்கு அந்த குழந்தை இறந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளியைச் சேர்ந்த பிரேமா-முனிராஜ் தம்பதிக்கு அக்டோபர் 22-ஆம் தேதி ஓசூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. மூச்சுத்திணறல் பாதிப்புடன் பிறந்த இந்த குழந்தை நவம்பர் 4-ஆம் தேதி தருமபுரியில் சேர்க்கப்பட்டுள்ளது. 13 நாள் சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மதியம் 12.10 மணிக்கு இறந்து விட்டது.
ஊட்டச்சத்து குறைபாடே காரணம்
இந்த மரணங்கள் குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) இளங்கோவன் கூறும்போது, ‘உடல் பாதிப்பு, எடை குறைவு உள்ளிட்ட காரணங்களால்தான் குழந்தைகள் இறந்துவிட்டன. மற்றபடி மருத்துவ பிழையோ, கருவிகள் பற்றாக்குறையோ காரணம் இல்லை. தொடர்ச்சியாக மரணங்கள் நிகழ்ந்தபோதும் பின்னணியில் மருத்துவ காரணங்கள் இல்லை என்பதால் மருத்துவமனையை நாடுவோர் பதற்றம் அடையத் தேவையில்லை' என்றார்.
தருமபுரி அரசு மருத்துவமனையில் இன்று காலை ஆய்வு மேற்கொண்ட மருத்துவக்கல்வி இயக்குநர் கீதா, ஊட்டச்சத்து குறைபாடே குழந்தைகள் மரணத்திற்கு காரணம் என விளக்கம் அளித்துள்ளார்.
புதிய டீன் நியமனம்
குழந்தைகள் அடுத்தடுத்து இறந்த சம்பவத்தின் எதிரொலியாக திருவண்ணா மலை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக உள்ள நாராயண பாபு, தருமபுரி அரசு மருத்துவ கல்லூரிக்கு தாற்காலிக முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பச்சிளங்குழந்தை பிரிவில் நிபுணராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications