ஜனாதிபதி தேர்தல் குறித்து எடப்பாடியுடன் வெங்கையா ஆலோசனையா?
ஜனாதிபதி தேர்தல் குறித்து தமிழக அரசுடன் ஆலோசனை நடத்தப்படுமா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பதில் அளித்துள்ளார்.
சென்னை: விரைவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மத்திய அரசு நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்குமாறு மாநில அரசுடன் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆலோசனை நடத்துவாரா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.
தமிழகத்துக்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு இரண்டு நாள் பயணமாக வந்துள்ளார். தமிழ்நாடு பிரிவு தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் திறனாய்வு கூட்டம் சென்னை மயிலாப்பூரில் உள்ள அகில இந்திய வானொலி நிலைய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் மத்திய தகவல் ஒலிபரப்பு, வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மந்திரி வெங்கய்ய நாயுடு கலந்து கொண்டார். இந்நிலையில் இன்று திருமங்கலம்- நேரு பூங்கா இடையே தொடங்கப்படவுள்ள மெட்ரோ ரயில் சேவை விழாவிலும் அவர் கலந்து கொள்கிறார்.

உதவவே விரும்புகிறது
முன்னதாக தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மாநில அரசுகளுக்கு உதவுவதற்கே மத்திய அரசு விரும்புகிறது. ஆனால் விவசாயிகள் விஷயத்தில் அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டியது மாநில அரசு மட்டுமே.

ஆண்டுதோறும் வறட்சி
ஆண்டுதோறும் வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் வரும் காலங்களில் மத்திய அரசு சார்பில் ஒரு குழு பார்வையிட்டு சேத மதிப்பை மதிப்பிடும். அதன் அறிக்கையை பொருத்து மாநில அரசுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்கும்.

முன்னெப்போதும் இல்லாத...
இந்த ஆண்டு தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து மத்திய குழு கணக்கிட்டு நிதியுதவிகளை வழங்கியுள்ளது. எனவே பயிர்கடன் தள்ளுபடி என்பது மாநில அரசு செய்ய வேண்டிய விஷயமாகும் என்றார் அவர்.

ஆலோசனை இல்லை
ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் நிறுத்தப்படும வேட்பாளருக்கு அதிமுக ஆதரவை பாஜக நாடியுள்ளது. எனவே இந்த முறை சந்திப்பில் அது குறித்து தமிழக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்று செய்தியாளர்கள் வெங்கய்ய நாயுடுவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், ஜனாதிபதி தேர்தல் குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தும் திட்டம் எதுவும் இல்லை. தமிழகத்தின் திட்டங்கள் குறித்து மட்டுமே விவாதிக்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications