ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெறும் வீடியோ உண்மையானதுதானா? நிறைய லாஜிக் மிஸ்சாகுதே
Recommended Video

சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைபெறும் வீடியோ காட்சியை டிடிவி தினகரன் தரப்பு வெளியிட்டுள்ளது. மருத்துவமனையில் ஜூஸ் அருந்திக்கொண்டே டிவி பார்க்கிறார் ஜெயலலிதா.
ஜெயலலிதா கடந்த ஆண்டு 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது சசிகலா வீடியோ எடுத்தார் என்று தினகரன் கூறியிருந்தார். அதை வெளியிடும் போது வெளியிடுவோம் என்று கூறியிருந்தார் தினகரன்.
இந்த நிலையில் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்றதாக கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது தினகரன் தரப்பு.

கால்கள் உள்ளன
தினகரன் தரப்பை சேர்ந்த வெற்றிவேல் இந்த வீடியோவை வெளியிட்டார். இதில் ஜெயலலிதா ஜூஸ் குடிப்பதை போன்ற காட்சிகள் உள்ளன. அவரது கால்கள் இருப்பதை போன்ற காட்சியும் அதில் இடம் பெற்றுள்ளது.

ஜெயலலிதா வீட்டில் சிகிச்சை
இருப்பினும், இந்த வீடியோ அப்பல்லோவில் சிகிச்சை பெறும்போதுதான் எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் ஒரு மினி மருத்துவமனை செட்அப் செயல்பட்டு வந்தது அனைவரும் அறிந்ததே.

அப்பல்லோவில்தான் எடுக்கப்பட்டதா?
ஜெயலலிதா வெகு நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும் தகவல் உண்டு. இந்த நிலையில், இந்த வீடியோ என்பது, வீட்டில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்டதா அப்பல்லோவில் எடுக்கப்பட்டதா என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.

சீரியசாக இருந்ததாக கூறினார் பிரதாப் ரெட்டி
ஏனெனில், அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, சில தினங்கள் முன்பு அளித்த பேட்டியில், ஜெயலலிதா, தங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே சீரியசான நிலையில் இருந்ததாக தெரிவித்தார். மக்கள் அச்சப்படுவார்கள், என்பதால் தாங்கள் மறைத்ததாக அவர் கூறினார்.

ஏன் கூறவில்லை
ஜெயலலிதா ஜூஸ் குடித்த வீடியோ இப்போது வெளியாகியுள்ள நிலையில், ஜெயலலிதா தெம்பாகவே இருந்துள்ளதாகவே பிரதாப் ரெட்டி கூறியிருக்கலாமே, ஏன் மக்கள் அச்சப்படுவார்கள் என உண்மையை மறைத்ததாக தெரிவிக்க வேண்டும்? என்ற கேள்வி சாமானியர்களிடம் எழுந்துள்ளது.

நம்பகத்தன்மை இல்லை
விசாரணை கமிஷன் ஜெ. மறைவு குறித்து விசாரித்து வரும் நிலையில், இந்த வீடியோவை இப்போது வெளியிட்டுள்ளதால், இதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. மார்பிங் செய்யப்பட்ட வீடியோவா அல்லது போயஸ் இல்லத்தில் முன்பு எப்போதோ எடுக்கப்பட்ட வீடியோவா என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications