ஒரு பெண்.. இரண்டு காதலர்கள்.. ஐடி ஊழியர் மீது ஆசிட் வீச்சின் பரபரப்புப் பின்னணி!
சென்னை: வருமான வரித்துறை அலுவலர் மோகித் மீது ஆசிட் வீசிய இளைஞரை போலீஸார் நேற்று கைது செய்தனர். காதல் விவகாரத்தில் அதிகாரி மீது ஆசிட் வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தான் காதலித்த பெண்ணை வருமான வரித்துறை அதிகாரி காதலித்ததால் அவரது முகத்தில் ஆசிட் வீசியதாக கைதான நபர் கூறியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த மோகித் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், சென்னை அண்ணா நகர் மேற்கில் உள்ள மத்திய வருவாய்த்துறை அலுவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.
கடந்த 23ம் தேதி இரவு வீட்டில் இருந்த மோகித் மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த மோகித், சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
மோகித் கொடுத்த புகாரின் பேரில், திருமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்க திருமங்கலம் உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
ஆசிட் வீசியபோது அழகான முகம் இருந்தால்தானே காதலிப்பாய் என்று கூறிக்கொண்டே ஆசிட் வீசியதாக தகவல் தெரியவந்தது. இதனையடுத்து மோகித் மீது 2 பேர் ஆசிட் வீசியதாகவும், அவர்கள் தமிழில் பேசியதால், தெரிந்த நபர்கள்தான் இதை செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்தது.
போலீஸ் தீவிர விசாரணை நடத்தி, சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த பிரபு என்பவரை கைது செய்தனர். நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் டிடிபி ஆபரேட்டராக பணியாற்றி வந்த பிரபு, அங்கு பணியாற்றும் சக பெண் ஊழியர் ஒருவரை காதலித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு பிரபு வேலையில் இருந்து விலகி எலட்ரிக்கல் கடையில் வேலைக்கு சேர்ந்தார். இதற்கிடையே பிரபு காதலித்த அந்தப் பெண் பிரபுவை தவிர்த்துவிட்டு மோகித்தை காதலிக்க ஆரம்பித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரபு தன் முன்னாள் காதலியிடம் பேச முயற்சி செய்தார். அதற்கு அந்த பெண் முகம் கொடுத்து பேசவில்லையாம். அதோடு தான் மோகித்தை காதலிப்பதாகவும் கூறிவிட்டாராம்.
இதனால் ஆத்திரமடைந்த பிரபு, தனது நண்பரோடு சேர்ந்து மோகித் மீது ஆசிட் வீசியுள்ளார். அழகான முகம் இருந்தால்தானே காதலிப்பாய் என்று சொல்லிக்கொண்டே ஆசிட் வீசினாராம் பிரபு.
போலீஸ் விசாரணையில் மோகித் இதை கூறவே பிரபுவை வளைத்தது போலீஸ். கைது செய்யப்பட்ட பிரபு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.
காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் அடித்த காலம் போய் இப்போது காதலன் மீது முன்னாள் காதலன் ஆசிட் வீசும் காலமாக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications