ஜெ. படிப்பது 110வது விதி, அதைத் தமிழ் மக்கள் கேட்டுத் தீர வேண்டும் என்பது தலைவிதி: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதா படிப்பது 110வது விதி; அதைத் தமிழ் மக்கள் கேட்டுத் தீர வேண்டும் என்பது தலைவிதி என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கேள்வி பதில் வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கேள்வி : "திருவாரூர் முழுவதும் குப்பைக் கூளங்கள்-புறக்கணிக்கப்படும் கருணாநிதி தொகுதி" என்று "தினமலர்" நாளிதழிலேயே செய்தி வந்துள்ளதே?

பதில் : இந்தச் செய்தி ஆளுங்கட்சியினர் மற்றும் அதிகாரிகள் கண்ணிலே பட வேண்டுமென்பது தான் என்னுடைய விருப்பம். "தினமலர்" வெளியிட்டுள்ள அந்தச் செய்தியிலேயே "தி.மு.க. தலைவர் கருணாநிதியின் தொகுதி என்பதால், ஆளுங்கட்சியாலும், அரசு அதிகாரிகளாலும், திருவாரூர் புறக்கணிக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர் அத்தொகுதி மக்கள். திருவாரூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது :- தமிழகத்தில் 100வது ஆண்டு விழா கொண்டாடும் நகராட்சிகளுக்கு, சிறப்பு நிதி ஒதுக்கி, அந்நகர மேம்பாட்டுக்கு, மாநில அரசு உதவுகிறது. ஆனால், கருணாநிதியின் தொகுதி என்ற ஒரே காரணத்திற்காக திருவாரூர் நகராட்சி 100வது ஆண்டு விழாவைக் கொண்டாட முடியவில்லை. புதிய கட்டடங்கள், நகர வளர்ச்சி, சுகாதார மேம்பாடு என அனைத்து அரசு திட்டங்களிலும், திருவாரூர் தொகுதி மாநில அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் நகராட்சி ஆணையர் பதவி, மூன்று ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் நகராட்சிப் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன. நகரம் முழுவதும் குப்பைக் கூளமாக காட்சி அளிக்கிறது. தி.மு.க. ஆட்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினார்கள்" என்று அந்தச் செய்தியிலே வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் செய்திக்குப் பிறகாவது ஆளுங்கட்சியினரும், அதிகாரிகளும் திருவாரூர் தொகுதி பற்றிக் கவனிப்பார்களா? அல்லது எதிர்க்கட்சித் தொகுதி என்பதால் பழி வாங்கிடும் வகையில், தொடர்ந்து புறக்கணிக்கப்படுமா?

It is TN people's fate: Karunanidhi

கேள்வி : வேளாண்துறை குறித்த பல்வேறு அறிவிப்புகளை நேற்றைய தினம் முதலமைச்சர் ஜெயலலிதாவே பேரவையில் அறிவித்து விட்டாரே?

பதில் : பேரவை ஆரம்பித்து, இத்தனை நாட்கள் 110வது விதியின் கீழ் அறிக்கை வரவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். 19-8-2016 அன்று வேளாண் துறை குறித்த மானியத்தின் மீது பேரவையில் விவாதம் நடைபெறவுள்ளது. பொதுவாக பேரவையில் ஆண்டுதோறும், ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று, அதன் இறுதியில் அந்தந்த அமைச்சர்கள் தான் அந்தத் துறை பற்றிய அறிவிப்புகளை செய்வார்கள். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில்தான், பேரவையில் விவாதம் நடைபெறுவதற்கு முன்பாகவே முதலமைச்சரே, அந்தத் துறை குறித்த அறிவிப்புகளையெல்லாம் 110வது விதியின் கீழ் படித்து விடுகிறார். நடப்பு ஆண்டில் 13 கோடியே 43 இலட்சம் ரூபாய்ச் செலவில், நெல் கொள்முதல் கணினி மயம் என்பதுதான் அந்த அறிவிப்பு. விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்காத ஜெயலலிதா கொள்முதலைக் கணினிமயமாக்கி என்ன பயன்? முதலமைச்சர் ஜெயலலிதா படிப்பது 110வது விதி; அதைத் தமிழ் மக்கள் கேட்டுத் தீர வேண்டும் என்பது தலைவிதி!

கேள்வி : தமிழகத்தில் குற்றங்களைத் தடுக்க அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று ஐகோர்ட், தமிழக அரசிடம் விவரம் கேட்டிருக்கிறதாமே?

பதில் : புகைவண்டி நிலையத்தில் பட்டப்பகலில் சுவாதி கொலை செய்யப்பட்டது பற்றி, மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குறைபாடுகள் குறித்தும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகளிடம் பத்து கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு. கிருபாகரன் அவர்களே, தலைமை நீதிபதி திரு. கவுல் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், அறிவியல் வளர்ச்சி இவ்வளவு முன்னேறியுள்ள நிலையில், அதை முழுமையாகப் பயன்படுத்தி பொதுமக்களுக்கான பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்யாதது ஏன்? தேவையான உபகரணங்களுடன் ரகசிய கண்காணிப்பு கேமராக்களை ஒருங்கிணைக்கும் நவீன கட்டுப்பாட்டு அறையை அமைக்க மத்திய - மாநில அரசுகள் போதிய நிதியை ஏன் ஒதுக்கவில்லை? இதுவரை எத்தனை இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன? - என்பது உட்பட பத்து கேள்விகளை எழுப்பியிருக்கிறார். தலைமை நீதிபதி அவர்கள், அந்தக் கடிதத்தையே வழக்கு மனுவாகப் பதிவு செய்து, தலைமை நீதிபதி கவுல் அவர்களும், நீதிபதி மகாதேவன் அவர்களும் விசாரித்து, இந்தப் பத்து கேள்விகளுக்கு மத்திய - மாநில அரசுகள் நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தார்கள். இந்த வழக்கு தான் நேற்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரசு வழக்கறிஞர்கள் பதிலளிக்க அவகாசம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு நீதிபதிகள், "ஏற்கனவே கால அவகாசம் தரப்பட்டுள்ளது. இருந்தாலும் மேலும் அவகாசம் கேட்கிறீர்கள். இன்னும் ஆறு வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதற்குள் பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் பத்தாயிரம் ரூபாய் அபராதத்துடன் பதிலளிக்க வேண்டும்" என்று நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள். நீதிமன்றத்தின் மூலமாக, கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டாலும், கண்டன அம்புகள் எய்யப்பட்டாலும், அபராதங்கள் விதிக்கப்பட்டாலும், அவ்வளவு எளிதில் அசைந்து கொடுத்து விடுமா ஜெயலலிதா அரசு?

கேள்வி : தமிழக வனத் துறையில் 45 சதவிகித இடங்கள் காலியாக இருப்பதாகவும், அதற்கான அறிவிப்பு மானியக் கோரிக்கையில் வெளியாகுமா என்றும் செய்தி வந்திருக்கிறதே?

பதில் : அ.தி.மு.க. ஆட்சியில் எந்தத் துறையில்தான் பணி இடங்கள் காலியாக இல்லாமல் இருக்கின்றன? காவல் துறை முதற்கொண்டு, கல்வித் துறை வரை பல ஆயிரக்கணக்கான பணி இடங்கள் காலியாகத்தான் உள்ளன. அவ்வளவுக்கும் வேலையில்லா பட்டதாரிகள் பல்லாயிரக்கணக்கில் வாடிக் கொண்டிருக்கும்போது, காலியான பணி இடங்களை நிரப்பக்கூட பணத்தை எதிர்பார்த்துத் தேக்கி வைத்துள்ளனர். வனத் துறையைப் பொறுத்த வரையில், வன அலுவலர்கள் பணி இடங்கள் ஆறு காலியாக உள்ளதாம். வனச் சரகர், வனவர்கள், வனக் காப்பாளர்கள், வனக் காவலர்கள் பணியிடம் 45 சதவிகிதம் காலியாக உள்ளது. வனவர்கள், வனக் காப்பாளர், வனக் காவலர்கள் பணி இடங்களை நிரப்ப கடந்த நான்காண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பணிகளைச் செய்வதில் ஆர்வம் இருந்தால் அல்லவா, காலியிடங்களை நிரப்புவதில் அக்கறை இருக்கும்?

கேள்வி : பொங்கல் வேட்டி, சேலை வாங்குவதற்காக அரசு கோரியிருந்த டெண்டரை, உயர் நீதிமன்றம் தடை செய்திருக்கிறதே?

பதில் : பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவதற்காக ஆண்டுதோறும் அரசு கொள்முதல் செய்கிறது. அதற்கு டெண்டர் கோரிய நிறுவனம் ஒன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புகார் மனுவில், தங்களின் டெண்டரை அரசு அதிகாரிகள் ஏற்காமல், தங்களுக்கு விருப்பப்பட்ட கம்பெனிக்கு கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும், அது டெண்டர் விதிகளுக்கு எதிரானது என்றும், அனைத்து டெண்டர் விண்ணப்பங்களையும் அதிகாரிகள் பரிசீலனை செய்யாமல் டெண்டர் கொடுத்துள்ளனர் என்றும், அதற்கு தடை விதிக்க வேண்டுமென்றும் கோரியிருக்கிறார். அந்த வழக்கில்தான் உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயணன், பொங்கலுக்கு வேட்டி, சேலை சப்ளை செய்ய டெண்டர் விட இடைக்காலத் தடை விதித்ததோடு, வழக்கினை 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றைக்கு அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டிருக்கிறார்.

கேள்வி : அதிக அளவில் வருவாய் தரக்கூடிய உணவுப் பொருட்களான பருப்பு மற்றும் எண்ணெய் வகைகளுக்கு, வரி வாங்காமல், அதானி மற்றும் ராம்தேவ் போன்ற பெரும் நிறுவனங்கள் அதிக இலாபம் சம்பாதிக்க மத்திய அரசே உதவி செய்கிறது என்ற குற்றச்சாட்டு பற்றி?

பதில் : மத்தியில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் நரேந்திர மோடியின் நண்பர் என்று அழைக்கப்படுகின்ற அதானி நடத்தும் "அதானி புட் ப்ராடக்ட்ஸ்" நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் அரசு எண்ணெய் நிறுவனப் பங்குகளைவிட அதிகம் உயர்ந்துள்ளது. ராம்தேவ் அவர்களின் பதஞ்சலி நிறுவனமும் பருப்பு மற்றும் எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டுள்ளது. அண்மையில் ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணம் செய்த மோடி அவர்கள் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கே சோயா எண்ணெய் மற்றும் பாமாயில் போன்றவற்றின் இறக்குமதி குறித்து பேசப்பட்டுள்ளது. இந்த நிலையிலே, தனியார் நிறுவனங்களின் அதிக இலாபத்திற்கு உதவி செய்திடும் வகையில், பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட முக்கியப் பொருட்கள் மீதான உள்ளூர் வரியை நீக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு யோசனை கூறியிருப்பதாகத் தெரிகிறது. இதுபற்றி மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறைச் செயலாளர் அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறாராம். அந்தக் கடிதத்தில், அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் 3 (2) (சி)வது பிரிவின்கீழ் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு விலை உச்ச வரம்பு நிர்ணயிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும், இந்தப் பொருள்கள் மீதான உள்ளூர் வரியை மாநில அரசுகள் நீக்க வேண்டும் என்றும், அப்போதுதான் நுகர்வோருக்கு நியாய விலையில் கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளதாம். இதைப் பற்றி நம்முடைய "விடுதலை" நாளிதழிலேயே பெரிதாக செய்தி வந்துள்ளது. அதானிக்கு லாபம் கிடைக்கும் என்றால், மத்திய மோடி அரசு எதையும் செய்யும் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்!

கேள்வி : கரூர் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளராக இருந்த வந்திதா பாண்டே மாற்றம் செய்யப்பட்டுள்ளாரே?

பதில் : அமைச்சர்களுக்கு மிகவும் நெருங்கிய அன்புநாதன் வீடு, குடோன் ஆகியவை சோதனைக்கு உள்ளான போது, கரூர் மாவட்டத்தில் காவல் துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய வந்திதா பாண்டே அவர்களை கொலை செய்யக் கூட முயற்சி நடைபெற்றதாக ஏடுகளில் அப்போதே செய்தி வந்தது. அன்பு நாதன் வழக்கை திசை திருப்ப ஒரு சிலர் முயன்ற போது, அதற்கு கரூர் மாவட்டக் காவல் துறை கண்காணிப் பாளர் ஒத்துழைப்பு நல்கவில்லை; நேர்மை உணர்வோடு, சட்டப்படி நடந்து கொண்டார். அதற்காக அ.தி.மு.க. ஆட்சி நிர்ணயித்துள்ள விலையைத்தான் இப்போது கொடுத்துள்ளார். காவல் துறை அதிகாரிகள் பலர் மாற்றப் பட்டுள்ளார்கள். ஆனால் கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் மட்டும் சென்னையிலே உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த ஆட்சியில் சட்ட விதிமுறைகளின்படி, நியாயமாகப் பணியாற்றினால் இப்படிப்பட்ட தண்டனைக்குத்தான் ஆளாக நேரிடும் என்பதற்கு இது தக்க உதாரணம் அல்லவா?

கேள்வி : ஆசிரியர் கவுன்சலிங் தொடங்குவதற்கு முன்பே வசூல் வேட்டை தொடங்கிவிட்டதாமே?

பதில் : பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சலிங் ஆகஸ்ட் முதல் வாரத்தில்தான் தொடங்குகிறது. அப்போது தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரி யர்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளன. இந்த நிலையில், அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் கவுன்சலிங் நேரத்தில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் அவசர உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில், மனமொத்த மாறுதல் உத்தரவு வழங்கும் நேரங்களில் 7 வகையான நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

2016-2017ஆம் கல்வி ஆண்டில் ஓய்வு பெற உள்ள, பதவி உயர்வில் செல்ல உள்ள ஆசிரியர்களுக்கு தற்போதைய பதவியில் மனமொத்த மாறுதல் கேட்கக்கூடாது. மனமொத்த மாறுதல் அடிப்படையில், மாறுதல் பெற்றவர்கள் மீண்டும் ஏற்கெனவே பணி செய்த பள்ளிக்கே மனமொத்த மாறுதலில் செல்ல அனுமதிக்கக் கூடாது. மனமொத்த மாறுதல் கேட்கும் இரண்டு ஆசிரியர்களும் 1-6-2015க்கு முன்னரே தற்போது உள்ள பள்ளியில் பணியில் சேர்ந்திருக்க வேண்டும். இரண்டுக்கும் மேற்பட்ட ஆசிரியர் களுக்கு மனமொத்த மாறுதல் கிடையாது. மாவட்டம் விட்டு மாவட்டம் மனமொத்த மாறுதல் கேட்கும் விண்ணப்பங்களை 2-8-2016இல் தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு கொண்டு வந்து அதே நாளில் அந்தந்த மாவட்டங்களுக்கு உரிய விண்ணப்பங்களைப் பெற்றுச் செல்ல வேண்டும். மனமொத்த மாறுதல் உத்தரவு என்பது அந்தந்த பதவிகளுக்கு பொது மாறுதல் கவுன்சலிங் அட்டவணைப்படியே அதே நாளில் வழங்கப்பட வேண்டும் - என்றெல்லாம் தொடக்கக் கல்வி இயக்குநரின் அவசர உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கேள்வி : குஜராத் மாநிலத்தில் பொருளாதார அடிப்படையில் செய்யப்பட்டிருந்த இட ஒதுக்கீடு செல்லாது என்று அந்த மாநில உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளதே?

பதில் : வரவேற்கத்தக்க தீர்ப்பாகும். இடஒதுக்கீடு என்பது சமூக அடிப்படையிலும் மற்றும் கல்வி அடிப்படையிலும் பிற்படுத்தப்பட்டோருக்குத் தான் அளிக்கப்பட வேண்டும் என்பதற்கு மாறாக, பொருளாதார அடிப்படையிலும் இட ஒதுக்கீடு என்பதை தி.மு. கழகம் எப்போதும் ஏற்றுக் கொள்ளவில்லை. மேல் சாதியில் உள்ள வசதியற்றவர்களுக்கு பத்து சதவிகித இட ஒதுக்கீட்டினை, கல்வியிலும், உத்தியோகங்களிலும் வழங்க வேண்டுமென்று குஜராத்தில் ஒரு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்த அவசரச் சட்டம் செல்லாது என்றும், அரசியல் சட்ட விரோதம் என்றும் குஜராத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷ் ரெட்டி தலைமையிலான முதல் அமர்வு தீர்ப்பு கூறியிருப்பது நம்மைப் போன்ற சமூக நீதி ஆர்வலர்கள் வரவேற்கத்தக்க ஒன்றாகும். இந்தத் தீர்ப்பு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அமைந்திருக்கும் சரியான தீர்ப்பாகும்!

கேள்வி : வரலாற்றுச் சிறப்பு மிக்க பேரவையைத் தூக்கி எறிந்துவிட்டு, கவிழ்ந்த கப்பல் போன்ற ஒரு கட்டடத்தைக் கட்டி அங்கே தி.மு.க. போக முயற்சித்ததாக, பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?

பதில் : அ.தி.மு.க. ஆட்சியிலே பேரவைக்காக புதிய இடம் கட்ட இடம் எல்லாம் பார்த்து, புரோகிதரை அழைத்து பூஜை எல்லாம் நடத்தினார்களே, அப்போது அவர்களுக்கும், அந்தக் கட்சித் தலைமைக்கும் பேரவை நடைபெறும் இடம் வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பேரவையாகத் தெரியவில்லையா? இங்கே இடம் போதவில்லை என்று கூறித்தானே வேறு இடம் பார்த்தார்கள்! தி.மு.கழக ஆட்சியில் கட்டப்பட்டு, சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும், நானும் கலந்துகொண்டு திறப்பு விழா நடைபெற்றதே, அந்தக் கட்டிடத்தை கவிழ்ந்த கப்பல் போன்ற கட்டிடம் என்கிறார் ஜெயலலிதா. தற்போது அதே கட்டிடத்தில் மருத்துவமனையை ஜெயலலிதா அமைத்திருக்கிறாரே; அதுமட்டும் அங்கே இருக்கலாமா? நிமிர்ந்து நிற்கின்ற கப்பல்கள் கவிழவும் நேரலாம்; தரை தட்டவும் நேரலாம்; கவிழ்ந்த கப்பல்கள் நிமிரவும் செய்யலாம்; பயணம் தொடரவும் செய்யலாம். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நடித்த ஒரு திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் பாடல் ஒன்று பாடுவார். "பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது; கருடா சவுக்கியமா? யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால், எல்லாம் சவுக்கியமே; கருடன் சொன்னது, அதில் அர்த்தம் உள்ளது" - என்ற அந்தப் பாடல்தான் ஞாபகத்திற்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+