‛கரூரில் அதிகாரிகள் மீது திட்டமிட்டே தாக்குதல்’.. சிக்கிய ஆடியோ! பகீர் கிளப்பும் வருமான வரித்துறை
கரூர்: கரூரில் அதிகாரிகள் மீது திட்டமிட்டே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆடியோ ஆதாரம் கிடைத்துள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆடியோவை போலீசில் ஒப்படைக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ள நிலையில் அதுபற்றிய பகீர் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இந்நிலையில் தான் நேற்று முதல் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையை நடத்தி வருகின்றனர்.

சென்னை, கோவை, கரூரில் இந்த சோதனை நடந்து வருகிறது. இன்று 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார், அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில் சோதனையிட சென்ற வருமான வரி அதிகாரிகளை திமுகவினர் தடுத்து நிறுத்தி பையை திறந்து காட்ட கூறியதோடு, ஐடி கார்டையும் கேட்டு பணிக்கு இடையூறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிகாரிகளின் கார்களை சேதப்படுத்தியதோடு, அதிகாரிகளையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
வருமான வரித்துறை பெண் அதிகாரி காயத்ரி உள்ளிட்ட 4 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் வருமான வரித்துறை பாதுகாப்பு கேட்டு கரூர் நகர காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் சோதனை தொடங்கி நடந்தது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டனர்.
மேலும் கரூர் துணை மேயர் தாரணி சரவணன் வீட்டுக்கு சீல் வைத்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து இரவில் திமுகவினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவங்களால் நேற்று கரூர் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது. இதற்கிடையே தான் பணிக்கு இடையூறு செய்து வாகனங்களை சேதப்படுத்தி தாக்கியதாக கூறி வருமான வரித்துறை சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்படி ராமகிருஷ்ணபுரத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக திமுகவினர் மீது கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதேபோல் செங்குந்தபுரம், ஏகேசி காலனியில் இடையூறு செய்தவர்கள் மீதும் கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலம் ராயனூர் கொங்கு மெஸ் மணி வீட்டில் சோதனைக்கு இடையூறு செய்ததாக 50க்கும் மேற்பட்டோர் மீது தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது ஒருபுறம் இருக்க ராமகிருஷ்ணபுரத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக குமார் என்பவர் அளித்த புகாரில் கரூர் நகர போலீசார் வருமான வரி ஆய்வாளர் காயத்ரி மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் தான் அதிகாரிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது திட்டமிட்ட தாக்குதல் தொடர்பான ஆடியோ ஆதாரம் கிடைத்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதாவது கொங்குமெஸ் சுப்ரமணி என்பவர் செல்வராஜ் என்பவருடன் பேசிய ஆடியோ பதிவில் கும்பலாக அதிகாரிகளை தாக்கி ரொக்கம், ஆவணங்களை பறிக்க திட்டமிடப்பட்டதாகவும், அந்த ஆடியோ தங்கள் வசம் ஆதாரமாக கிடைத்திருப்பதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆடியோ ஆதாரத்தை போலீசில் சமர்ப்பிக்க உள்ளதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications