கொள்கை முடிவுகளை எடப்பாடி எடுக்க தடை.... ஆளுநருக்கு ஜெ.தீபா கடிதம்
கொள்கை முடிவுகளை எடுக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு ஜெ.தீபா கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறும் வரை கொள்கை முடிவுகளை எடுக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு ஜெ.தீபா கடிதம் எழுதியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தது. எடப்பாடி தலைமையிலும், ஓபிஎஸ் தலைமையிலும் செயல்பட்டு வந்தது.
தற்போது பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியில் இரு அணிகளும் ஒன்றிணைந்து விட்டது. ஆனால் தினகரன் தலைமையில் ஏற்கெனவே இருந்த அணி தற்போது தீவிரமடைந்துள்ளது.

முதல்வரை மாற்ற வேண்டும்
முதல்வர் எடப்பாடி மீது நம்பிக்கையில்லாததால் அவரை மாற்ற வேண்டும் என ஆளுநரை சந்தித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் தனித்தனியே கடிதம் கொடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் புதுவையில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர்.

இன்று சென்னை வருகை
ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகிறார். எனவே 19 எம்எல்ஏ-க்கள் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் ஏதேனும் முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜெ.தீபாவும் ஆளுநருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் என்ன
அந்த கடிதத்தில் அவர் கூறுகையில், ஆகஸ்டு 22-ஆம் தேதி டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் தங்களை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று அவருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக மனு கொடுத்துள்ளார்கள்.

நடவடிக்கை இல்லை
இதனால் ஆளும் கட்சியின் பலம் சட்டமன்றத்தில் குறைந்துள்ளது. ஆனால் 19 எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த மனு மீது தாங்கள் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. அதன் பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க கோரி எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தங்களுக்கு கடிதம் அளித்துள்ளார். அந்த கடிதத்தின் மீதும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பெரும்பான்மை இழந்துவிட்டது
தங்களிடம் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக ஆளுங்கட்சியை சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள் மனு கொடுத்துள்ளதால் அரசு தனது பெரும்பான்மையை இழந்துவிட்டது. எனவே தமிழக முதல்வர் உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும். பணத்துக்காக எம்.எல்.ஏ.க்கள் விலைபோக வாய்ப்புள்ளது.

கொள்கை முடிவு எடுக்கக் கூடாது
எம்எல்ஏக்களின் பெரும்பான்மையை இழந்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசு சட்டமன்றத்தை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி தனது அரசுக்குண்டான பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை எந்த ஒரு கொள்கை முடிவும் அவர் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் தீபா குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications