ஆந்திராவை பிரிக்காமல் லோக்சபா தேர்தலை நடத்திப் பாருங்கள்.. காங்.க்கு ஜெகன் சவால்!
சென்னை: ஆந்திர மாநிலத்தைப் பிரிக்காமல் லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 30 இடங்களைக் கைப்பற்றும் என்று அதன் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த பின்னர் கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பின் போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பைத் தொடர்ந்து கோபாலபுரத்தில் செய்தியாளர்களிடம் ஜெகன் பேசியதாவது:

தெலுங்கானா விவகாரத்தில் ஆந்திர மக்களின் கருத்தை கேட்காமலும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமலும் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்திருப்பதை ஏற்க முடியாது. ஆந்திர பிரிவிணைக்கு ஆதரவு அளிக்கக்கூடாது.
ஆந்திர மாநிலம் பிரிக்கப்படுவதை ஆந்திராவின் பிரச்சனையாக மட்டும் பார்க்கக்கூடாது. வெளிப்படையாக சொல்கிறேன். இந்த பிரச்சனையில் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. எங்களிடம் 3 எம்.பிக்கள் தான் உள்ளனர். நீங்கள்தான் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டு வருகிறேன். அதற்கு ஆதரவு தாருங்கள் என்று பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறேன்''என்று தெரிவித்தார்.

நான் காங்கிரஸுக்கு நேரடியாக சவால் விடுகிறேன். 2014 தேர்தலை தற்போதுள்ள ஒருங்கிணைந்த ஆந்திராவாக நடத்திப்பாருங்கள். மக்கள் தீர்ப்பு அப்போது தெரியும். நாங்கள் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம். நாட்டின் அடுத்த பிரதமரை நாங்களே தீர்மானிப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications