ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புது வகை போராட்டத்தில் குதிக்கிறார் சிம்பு.. மக்களுக்கு அழைப்பு
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மக்கள் அனைவரும் நாளை மாலை 5 மணிக்கு 10 நிமிடம் மவுன விரதம் கடைபிடிக்க வேண்டும் என்று போராட அழைப்புவிடுத்துள்ளார் நடிகர் சிலம்பரசன்.
சிலம்பரசன் இன்று சென்னையில் அவரது இல்லத்தில் வைத்து பிரஸ் மீட் செய்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எனது அப்பா போராடுகிறார், சீமான் அண்ணன் போராடுகிறார். ஆனால் இப்படி தனித்தனியாக போராடுபவர்களால் பத்து பைசாவுக்கு பலனில்லை. தனித்தனியாக போராடுவதால் பலன் கிடைக்காது.

தனித்தனியாக போராடுவதால்தான் போலீசாரால் தடியடி நடத்த முடிகிறது. இந்த டிஜிட்டல் யுகத்தில் போராட்டத்தை புது வகையில் எடுத்து செல்லுங்கள். தமிழன் என்று பெருமையுள்ளவர்களுக்காக நான் இதை கூறுகிறேன். யாரும் தனித்தனியாக போராடாதீர்கள்.
உங்களுக்காக நான் ஒரு யோசனை சொல்கிறேன். நாளை 12ம் தேதி மாலை 5 மணிக்கு என் வீட்டு வாசலில் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தப்போகிறேன். 10 நிமிடமும் நான் வாயே திறக்கப்போவதில்லை. மவுனமாக நிற்கப்போகிறேன். அதேபோல தமிழகத்திலுள்ள எல்லா மக்களும், எந்த துறையில் வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும், மாலை 5 மணிக்கு 10 நிமிடங்களுக்கு கருப்பு சட்டை அணிந்து வீட்டை விட்டு வெளியே வந்து மவுனமாக நிற்கவும்.
நாளை நான் போராட்டம் நடத்தும்போது, என்னை முடிந்தால் போலீசார் கைது செய்யட்டும். முடிந்தால் என்னை தடியடி நடத்தி கலையுங்கள். எல்லோரும் என்னைப்போலவே, பிறருக்கு தொந்தரவு கொடுக்காமல் அப்படியே 10 நிமிடங்கள் நில்லுங்கள்.
தமிழர்கள் அநாதை இல்லை என்று காண்பிக்க திரளுங்கள். உங்களுக்கு இதுதான் கடைசி வாய்ப்பு மக்களே. எனது வீட்டுக்கு போராட்டம் நடத்த வருவோர் வரலாம். இந்த விஷயத்தில் எனக்கு ஆதரவு தராவிட்டால் தமிழர்களின் பிற பிரச்சினைகளில் நான் தலையிடமாட்டேன். நடிகர்கள் தமிழர் பிரச்சினைக்கு வருவதில்லை என்று கூறுவோர் அதன்பிறகு வாய் திறக்க கூடாது.
மக்களை போராட கூப்பிடுவதால் அரசியலுக்கு வரப்போகிறேன் என வதந்தி கிளப்ப வேண்டாம். பேப்பரில் கையெழுத்து போட்டு வேண்டுமென்றாலும் தருகிறேன், நான் அரசியலுக்கு வரமாட்டேன். அது சாக்கடை. அதற்கு நான் ஆளில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications