ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு.. அரியலூர் அருகே கிராம மக்கள் சாலை மறியல்
ஜல்லிக்கட்டுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காததைக் கண்டித்து அரியலூர் அருகே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
அரியலூர்: ஜல்லிக்கட்டு போட்டிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதை கண்டித்து அரியலூர் அருகே கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தால் திருச்சி-சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் புரட்சி போராட்டங்கள் நடத்தினர். மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தமிழக சட்டசபையில் நிரந்தர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

அந்த சட்டத்துக்கு மத்திய அரசும், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் ஒப்புதல் அளித்து விட்டனர். இதையடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை விலகியது.
இதையடுத்து மதுரை அவனியாபுரத்தில் வருகிற 5-ந் தேதியும், பாலமேட்டில் 9-ம் தேதியும், அலங்காநல்லூரில் 10-ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க உள்ளன. இதனிடையே ஜல்லிக்கட்டு நடைபெறும் பிற இடங்களிலும் போட்டி நடத்த ஆயத்தமாகி வருகின்றனர்.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் புதுச்சாவடி கிராமத்தில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. வழங்கப்பட்ட அனுமதி திடீரென மறுக்கப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் திரண்ட கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருச்சி-சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
