திமுக- அதிமுகவை நெருக்கும் வழக்குகள்.. 'திராவிட அரசியலை' வெல்ல வியூகம் வகுக்கும் பாஜக!!
சென்னை: தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இரண்டுமே ஊழல் வழக்குகளால் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில் 'திராவிட கட்சிகளின் அரசியலுக்கு' முற்றுப்புள்ளி வைக்க இதுவே வாய்ப்பு என எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா.
அதிமுகவின் ஒற்றை முகமாக இருந்த ஜெயலலிதாவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது. இதனால் 10 ஆண்டுகாலம் அவர் தேர்தல்களத்தில் நிற்க முடியாத நிலை.
திமுக தலைமையைப் பொறுத்தவரையிலும் 4 முக்கிய வழக்குகளால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு, கலைஞர் டிவிக்கு பணம் கைமாறியது குறித்து அமலாக்கப் பிரிவு வழக்கு, தயாநிதி-கலாநிதி மாறன்கள் மீதான ஏர்செல் மேக்சிஸ் மற்றும் பிஎஸ்என்எல் வழக்குகள்தான் இவை.

வழக்குகளில் கருணாநிதி குடும்பம்
இந்த நான்கு வழக்குகளிலுமே நீதிமன்றத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் கலைஞர் டிவிக்கு எதிரான அமலாக்கப் பிரிவில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளுவும் மகள் கனிமொழியும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளார். ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி குற்றவாளியாகவும் தயாளு சாட்சியமாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அடித்துக் கொள்ளும் அண்ணன்- தம்பி
இவை அல்லாமல் திமுகவில் திமுக தலைவர் கருணாநிதியின் மகன்கள் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் இருவரும் அடித்துக் கொண்டு முறைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி தமிழகத்தின் 2 பிரதான கட்சிகளுமே ஒருவகையில் பலவீனப்பட்டே நிற்கின்றன.

காங்கிரஸுக்கு சாத்தியமே இல்லை
இதனால் அரசியல் வெற்றிடம் தமிழகத்தில் ஏற்பட்டிருப்பது வெளிப்படையானது. இந்த வெற்றிடத்தை தமிழகத்தில் தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியால் நிச்சயம் நிரப்பவே முடியாது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு என்ன மரியாதை இருக்கிறது என்பதற்கு கடந்த அரை நூற்றாண்டுகால தேர்தல் களங்களே சாட்சி.

துடிக்கும் பாஜக
இந்த சூழ்நிலையில் அதாவது குழம்பிய குட்டையில் எப்படியாவது மீனைப் பிடித்துவிட முடியாதா? என்ற துடிப்பு மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவுக்கு இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை.

திராவிட அரசியலுக்கு முடிவு
அதுவும் இந்துத்துவா எதிர்ப்பு, சிறுபான்மை ஆதரவு, ஈழப் பிரச்சனை, மீனவர் பிரச்சனை, சமூக நீதி என்று தங்களுக்கு ஒவ்வாத அம்சங்களை வைத்து நெருக்கடிக்குள்ளாக்கும் திராவிட கட்சிகளின் அரசியல் எதிர்காலம் ஆட்டம் கண்டிருக்கும் நிலையில் நிச்சயம் இதை பாஜக பயன்படுத்திக் கொள்ளத்தான் வாய்ப்பிருக்கிறது.

சுவாமி சொல்வது...
இதைத்தான் ஜெயலலிதா சிறைக்குப் போக காரணமாக இருந்த பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி வெளிப்படையாகவே சொல்கிறார்.. தமிழகத்தில் திராவிட கட்சிகள் அத்தியாயம் முடிந்துவிட்டது. அடுத்த சட்டசபை தேர்தலில் பாஜக தமிழகத்தில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று பிரதமரிடம் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன் என்று ''வேதம்' ஓதுகிறார்.

தமிழிசை விரும்புவது..
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் இந்த வாய்ப்பை நழுவ விடுவதாக இல்லை என்று வெளிப்படையாகவே கருத்து தெரிவிக்கிறார். இரு பெரும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாஜகவை முன்னிறுத்தும் தருணம் என்று நேற்றே முரசு கொட்டி கிளம்பிவிட்டார் தமிழிசை அக்கா.

நழுவும் பாஜக மேலிடம்
அத்துடன் இந்த தீர்ப்பு குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவே நழுவத் துடிக்கின்றனர் பாஜக தலைவர்கள்.. அதாவது தலைமையற்ற அதிமுக, எப்படியும் ஒரு பொம்மை முதல்வர், தடுமாறப் போகும் அரசு நிர்வாகம் இவற்றையெல்லாம் உன்னிப்பாக கவனித்த பின்னர் களத்தில் இறங்குவது என்பதுதான் பாஜக மேலிடத் தலைவர்களின் நிலைப்பாடாக இருக்கிறது.
இந்தியாவிலேயே "சமூக நீதி" மண்ணாக இருக்கும் தமிழகத்தில் "மனுநீதி" பேசும் பாஜக அவ்வளவு எளிதில் கால்பதித்து முடியாதுதான்.. ஆனால் திராவிட அரசியலிடம் காலம் காலமாக இருந்து வரும் அரியணையை அதன் நேர் எதிர் அரசியலான ஆரியக் கருத்தியலை முன்னெடுக்கும் பாஜக நிச்சயம் கபளீகரம் செய்யவே களமாடும் என்பதுதான் யதார்த்தம்..












Click it and Unblock the Notifications