திருச்சி சிவாவை அடித்தது ஏன்.. போயஸ் கார்டனில் சசிகலா புஷ்பாவிடம் ஜெ. அதிரடி விசாரணை!
சென்னை: திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவாவை, டெல்லி விமான நிலையத்தில் வைத்து கழுத்தில் போட்டிருந்த தங்கச் சங்கிலி அந்து போகும் அளவுக்கு அடித்துத் தாக்கிய அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவிடம் முதல்வர் ஜெயலலிதா இன்று போயஸ் தோட்டத்தில் வைத்து விசாரணை நடத்தினார்.
இந்த அதிரடி விசாரணையால் அதிமுக வட்டாரம் இன்று மாலை பரபரப்பானது. இந்த விசாரணையின்போது என்ன நடந்தது என்ற விவரம் தெரியவில்லை.
இருப்பினும் சசிகலா புஷ்பா அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருவதால் அவருக்கு மிகக் கடுமையான கண்டனம் ஜெயலலிதாவிடமிருந்து கிடைத்திருக்கும் என்று நம்பப்படுகிறது.

சசிகலா புஷ்பா
டெல்லி விமான நிலையத்தில் விமானம் ஏறுவதற்காக வந்த சசிகலா புஷ்பாவுக்கும், திருச்சி சிவாவுக்கும் இடையே ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது. என்ன பிரச்சினை என்று சரியாக தெரியவில்லை.

சட்டையைப் பிடித்து உலுக்கி
இந்த மோதலில் சிவாவை, சரமாரியாக அடித்து விட்டார் சசிகலா புஷ்பா. இந்த தாக்குதலில் சிவா கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலி அறுந்து கீழே விழுந்து விட்டது. சட்டையைப் பிடித்து உலுக்கி அவர் அடித்ததாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா விசாரணை
இந்தத் தாக்குதல் குறித்து இரு தரப்பும் கமுக்கமாக போய் விட்டது. இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று சிவா கூறியுள்ளார். இந்த நிலையில் இன்று மாலை முதல்வர் ஜெயலலிதா முன்பு ஆஜராகுமாறு புஷ்பாவுக்கு உத்தரவு போனது.

விளக்கம் அளித்தார் சசிகலா
அதன் பேரில் புஷ்பா முதல்வரை இன்று போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்தார். அவரிடம் என்ன நடந்தது என்று ஜெயலலிதா விசாரணை நடத்தியதாகவும், அதற்கு புஷ்பா விளக்கம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

தம்பித்துரை முன்னிலையில்
இந்த சந்திப்பின்போது மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரையும் உடன் இருந்தார் என்று கூறப்படுகிறது. விசாரணை விவரம் தெரியவில்லை.

கருணாநிதியிடம் சிவா விளக்கம்
அதேபோல திமுக தலைவர் கருணாநிதியை திருச்சி சிவா எம்.பி. நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். அப்போது இந்த மோதல் தொடர்பாக அவர் கருணாநிதியிடம் தனது தரப்பு விளக்கத்தைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications