இன்று ஒரு அமைச்சருக்குக் கல்தா கொடுக்கிறார் ஜெயலலிதா?
சென்னை: முதல்வர் ஜெயலலிதா இன்று தனது அமைச்சரவையில் மேலும் ஒரு அமைச்சரை நீக்கப் போவதாக பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்த அமைச்சர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர். முக்கியத் துறையை வகித்து வருகிறார். இவர் சார்ந்த நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வென்று விட்டாலும் கூட இவர் மீது வேறு சில குற்றச்சாட்டுக்கள் தலைமை வசம் குவிந்துள்ளதாம்.

தேர்தலின்போது கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட பணத்தை செலவிட்டது தொடர்பான கணக்கு வழக்குகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருப்பதாகவும், சரியாக பணப் பட்டுவாடா கட்சியினருக்கு நடக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து இந்த அமைச்சரின் பதவியும் பறி போவதாக பரபரப்புடன் அதிமுகவினர் பேசிக் கொள்கிறார்கள். இவரது நீக்கம் குறித்த அறிக்கை தயாராகி விட்டதாகவும், ஜெயா டிவிக்கும் நேற்று இரவே செய்தி போய் விட்டதாகவும், இன்று வரை அதை நிறுத்தி வைக்குமாறும் கூறியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இன்று அமாவாசை என்பதால் இன்று அந்த அமைச்சரின் நீக்கம் குறித்த செய்தி வரலாம் என்றும் பேசப்படுகிறது.
லோக்சபா தேர்தல் முடிந்ததும் அதிமுகவில் களையெடுப்பை நடத்தி வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. உண்மையில் தோற்றுப் போன கட்சிகளில்தான் இப்படிப்பட்ட களையெடுப்பு நடக்கும். ஆனால் அமோக வெற்றி பெற்ற அதிமுகதான் அதை கடுமையாக செய்து வருகிறது.
சமீபத்தில் சில அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட்டன. சிலர் ஓரம் கட்டப்பட்டனர். இந்த வரிசையில் இந்த புதுக்கோட்டை அமைச்சரும் இன்று இணைவாரா என்பது மாலை வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டியதுதான்.












Click it and Unblock the Notifications