அசரடிக்கும் ஹை டெக் பிரச்சார வேன்கள்... ஜெயலலிதா வேனில் என்னென்ன வசதிகள்?
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கான ஹைடெக் வசதிகளுடன் கூடிய பிரச்சார வாகனங்கள் கோவையில் தயாராகி வருகிறது. இந்த வாகனம் முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் நட்சத்திர ஹோட்டல் ரூம் போல வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரச்சார வேனில் சுழலும் அமைப்புடன் கூடிய இருக்கை, இருக்கையை உயர்த்தும் ஹைட்ராலிக் சிஸ்டம், வாகனத்தின் உள்ளே வலது பக்கத்தில் சிறிய கான்ஃப்ரன்ஸ் ஹால், மேக்கப் ரூம், குட்டி கிச்சன் மற்றும் ஹைடெக் வசதிகளுடன் கூடிய கெமிக்கல் டாய்லெட் என்று, முழுக்க முழுக்க குளிர்சாதன வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அக்னி வெயில் தகிக்க கூடவே அரசியல் பிரச்சாரமும் இன்னும் சில தினங்களில் சூட்டை கிளப்பப் போகிறது. என்னதான் ஹெலிகாப்டரில் பறந்தாலும் பல இடங்களுக்கு சாலை மூலமாக சென்றுதான் ஜெயலலிதா மக்களை சந்திக்க வேண்டும். இதற்காக குளு குளு வசதியுடன் பிரச்சார வேன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

தேர்தல் பரபரப்பு
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 45 நாட்கள் உள்ளன. வேட்பு மனு தாக்கல் தொடங்க இன்னும் 20 நாட்களே உள்ளன. வாக்காள பெருங்குடி மக்களே.... என தருமை வாக்காளர்களே!... அருமை உடன்பிறப்புக்களே!.... ரத்தத்தின் ரத்தங்களே! என்று அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் பாணியில் வாக்காளர்களை அழைத்துக்கொண்டு பிரச்சாரத்தை தொடங்கப் போகிறார்கள்.

ஜெயலலிதாவின் திட்டம்
ஆளுங்கட்சியான அதிமுகவில் வேட்பாளர் நேர்காணல் இறுதிக்கட்டத்தில் உள்ளது. நேர்காணல் முடிந்ததும் விரைவில் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும்.
வேட்பாளர் பட்டியலை அமாவாசைக்குப் பின்னர் வெளியிட்ட உடனே, பிரச்சாரத்தை தொடங்க அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

2 பிரச்சார வாகனங்கள்
அதிமுகவுக்காக இந்த முறை இரண்டு பிரச்சார வேன்கள் தயாராகின்றன. ஜெயலலிதாவின் பிரச்சாரத்துக்காக பிரபல வால்வோ நிறுவனம் இந்த வாகனங்களை வடிவமைத்துள்ளது. தற்போது இந்த வாகனம், கோவையில் உள்ள பிரபல நிறுவனத்தில் உள் அலங்காரப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஹைடெக் வசதிகள்
முதல் வேனில், சுழலும் அமைப்புடன் கூடிய இருக்கை, இருக்கையை உயர்த்தும் ஹைட்ராலிக் சிஸ்டம், வாகனத்தின் உள்ளே வலது பக்கத்தில் சிறிய கான்ஃப்ரன்ஸ் ஹால், மேக்கப் ரூம், குட்டி கிச்சன் மற்றும் ஹைடெக் வசதிகளுடன் கூடிய கெமிக்கல் டாய்லெட் என்று, முழுக்க முழுக்க குளிர்சாதன வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஓய்வுக்கு ஒன்று
மற்றொரு வேன் ஓய்வெடுப்பதற்கு மட்டும். உயர்தர குஷன் படுக்கை மற்றும் இருக்கைகள் கொண்ட இந்த வேனில் குறைந்த அளவு வெளிச்சம் உமிழும் எல்ஈடி விளக்குகளும், அதிநவீன கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. வேன் எவ்வளவு வேகத்தில் சென்றாலும், உள்ளே ஒரு சின்ன அதிர்வுகூட தெரியாத அளவுக்கு ஸ்பெஷல் சஸ்பென்ஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

வாய்ஸ் அப்சர்வர்
வெளியே நின்றுகொண்டு கட்சியின் முக்கியஸ்தர்கள் பேசிக் கொள்வதைக்கூட துல்லியமாக வேனின் உள்ளிருந்தபடியே கேட்கக்கூடிய ஸ்பெஷல் வாய்ஸ் அப்சர்வர்ஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதாம். எனவே தொண்டர்கள் மவுனமாக இருப்பதே சிறந்தது.

டெம்போ டிராவலர்கள்
பிரச்சார வேன்களாக உருமாற, ஆறு அடிக்கும் அதிக உயரமுள்ள டெம்போ டிராவலர்தான் வசதியானது. பிரச்சார வேன்களில் தலைவர்களுடன் நிறையப்பேர் பயணமாவதால், அதில் சீட்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும். பிரைவஸிக்காக வடிவமைக்கும் கேரவன்களில் எல்லாமே ஹைட்ராலிக் சிஸ்டம்தான். கிச்சனிலிருந்து, டாய்லெட்வரை ரிமோட்டில் இயங்கும் ஸ்லைடிங் டோர்கள் உபயோகப்படுத்தப்படுகிறது.

கொரியன் மார்பிள்கள்
டாய்லெட்களின் தளம் கொரியன் மார்பிளால் ஆனது. அது வளையும் தன்மை கொண்டதோடு மட்டுமல்லாமல், கீழே விழுந்தாலும் உடையாது. இது தவிர, 50 லிட்டர் ஃபிரிட்ஜ், மியூஸிக் சிஸ்டம், வாட்டர் பியூரிஃபையர், டூயல் ஏர் கண்டிஷனிங், லாக்கர் என சகல வசதிகளும் கொண்டதாக இருக்கும் என்கின்றனர் பொறியாளர்கள்.

ஜெ. பிரச்சாரம்
கடந்த லோக்சபா தேர்தல் வரை, பிரச்சார வாகனத்தில் நின்றபடியே மேற்கூரையின் மேல் இருக்கும், கண்ணாடியால் சூழப்பட்ட பகுதியில் பொதுமக்களை பார்த்து முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால், ஆர்.கே.நகரில், வாகனத்தில் இருந்தபடியே பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த சட்டசபைத் தேர்தலுக்கும் அதே பாணியில்தான் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொள்வார் என அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications