நல்லவேளை மோடியை ஜெயலலிதா சந்திக்கவில்லை.. காங். நிம்மதிப் பெருமூச்சு
சென்னை: சென்னைக்கு வந்திருந்த பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா சந்திக்காதது காங்கிரஸ் வட்டாரத்தில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளதாம்.
இந்த சந்திப்பு குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
உண்மையிலேயே இந்த சந்திப்புக்கு திட்டமிடப்பட்டிருந்ததா.. அல்லது செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட ஹைப்பா... ஏன் சந்திப்பு நடக்கவில்லை என்ற கேள்விகள் இன்னும் அரசியல் வட்டாரத்தில் உலா வந்து கொண்டுள்ளன. ஆனால் இந்த சந்திப்பு நடக்காமல் போனதற்காக காங்கிரஸ் வட்டாரத்தில் நிம்மதியாக உள்ளனராம்.

நானி பல்கிவாலா நினைவு உரை
சென்னையில்நடந்த நானி பல்கிவாலா நினைவு உரையில் கலந்து கொண்டு மோடி பேசினார். மேலும் அருண் ஷோரியின் புத்தக வெளியீட்டிலும் கலந்து கொண்டார்.

கடவுளே கடவுளே ... சோ
இந்த நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர் சோவும் கலந்து கொண்டார். அவரது பேச்சில் மோடியை ஓவராகவேப் புகழ்ந்து பேசினார். கடவுள் அனுப்பிய கொடைதான் மோடி என்று அவர் பேசியதுதான் அதில் ஹைலைட்.

'அம்மா' அப்செட்...?
சோவின் பேச்சு யாருக்குப் பிடித்ததோ இல்லையோ, முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிடிக்கவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

சந்திப்பு ரத்துக்கு சோதான் காரணமா...?
சோவின் பேச்சால் அதிருப்தியடைந்தே மோடியைச் சந்திக்கும் திட்டத்தை கடைசி நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா ரத்து செய்தார் என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது.

அதெல்லாம் காரணம் இல்லை...
அதேசமயம், அப்படியெல்லாம் எந்தக் காரணமும் இல்லை. காங்கிரஸ் மற்றும் பாஜகவிடமிருந்து தேர்தல் முடியும் வரை விலகியே இருக்க முதல்வர் நினைப்பதால்தான் மோடி நெருங்கிய நண்பர் என்ற போதிலும் அவரை முதல்வர் சந்திக்கவில்லை என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது.

முஸ்லீம்களை நினைத்து
மேலும் இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது மோடியைச் சந்தித்தால், அது தமிழகத்தில் உள்ள முஸ்லீம்களின் மனதில் கிலேசத்தை ஏற்படுத்தலாம். வாக்குகளை இழக்க நேரிடலாம் என்பதாலும் முதல்வர் இந்த சந்திப்பை ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

அது மட்டுமல்ல...
அது மட்டுமல்லாமல், முதல்வர் ஜெயலலிதாவே பிரதமர் பதவிக்கு குறி வைத்து காய் நகர்த்தி வருவதால், இன்னொரு பிரதமர் வேட்பாளரை எப்படி சந்திப்பார் என்றும் அதிமுகவுக்கு ஆதரவான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைமைச் செயலகத்தி்ல் முகாமிட்டிருந்த ஜெ.
மோடி சென்னைக்கு வந்து இறங்கிய சமயத்தில் முதல்வர் ஜெயலலிதா கோட்டையில் தனது அலுவலகத்தில் இருந்தார். கிட்டத்தட்ட 3 மணி நேரம் அதாவது மாலை 5 மணி வரை அவர் அங்கேயேதான் இருந்தார். இதனால் மோடி, நேராக தலைமைச் செயலகம் வந்து ஜெயலலிதாவை சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் சந்திப்பு நடைபெறவில்லை.

பொது நண்பர்களின் தீவிர முயற்சி
அதேசமயம், ஜெயலலிதா, மோடி சந்திப்புக்கு இருவருக்கும் பொதுவான சில முக்கிய நண்பர்கள் கடுமையாக முயற்சித்ததாக கூறப்படுகிறது.

அதெல்லாம் முயற்சிக்கவில்லை.. பொன்னார்
அதேசமயம், இருவரது சந்திப்புக்கும் தாங்களோ அல்லது அதிமுகவிலிருந்தோ யாரும் முயற்சிக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவரான பொன் ராதாகிருஷ்ணன் விளக்கியுள்ளார்.

காங்கிரஸுக்கு நிம்மதி..
ஆனால் இந்த சந்திப்பு நடைபெறாமல் போனதற்கு காங்கிரஸ் வட்டாரம் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான ரேணுகா சவுதிரி கூறுகையில், மோடி இப்போதுதான் தேசிய அரங்குக்கு வருகிறார். அவர் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது. ஆனால் ஜெயலலிதா தேசிய அரசியலில் முக்கியமானவர். நீண்ட காலம் அவரது பங்கு தேசிய அரசியலில் காத்திருக்கிறது என்று கூறினார்.
இதன் மூலம் ஜெயலலிதாவை தங்களது பக்கம் இழுக்க காங்கிரஸும் தயாராகவே இருப்பதாக உணரப்படுகிறது.












Click it and Unblock the Notifications