வாக்குறுதி மட்டுமே கொடுப்பதில் வல்லவர் ஜெயலலிதா: ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை: தேர்தல் நேரத்தில் மட்டும் அதை செய்வோம், இதை செய்வோம், வானத்தை கட்டுவோம், மணலை திரிப்போம் என்று வாக்குறுதிகளை மட்டும் ஜெயலலிதா அள்ளி வீசுகிறார் என்று வடசென்னை தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
தி.மு.க. வடசென்னை வேட்பாளர் வக்கீல் கிரிராஜனை ஆதரித்து, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் மக்காராம் தோட்டம், உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
ஓட்டேரி பாலம் சந்திப்பு அருகே தி.மு.க. வடசென்னை வேட்பாளர் வக்கீல் கிரிராஜனை ஆதரித்து, மு.க.ஸ்டாலின் திறந்தவேனில் நின்றபடி பேசியதாவது:

வாக்குறுதி மட்டுமே
மக்களை பற்றியோ, மக்கள் பிரச்சினைகளை பற்றியோ ஜெயலலிதா சிந்தித்து பார்ப்பது கிடையாது. தேர்தல் நேரத்தில் மட்டும் அதை செய்வோம், இதை செய்வோம், வானத்தை கட்டுவோம், மணலை திரிப்போம் என்று வாக்குறுதிகளை மட்டும் ஜெயலலிதா அள்ளி வீசுகிறார். ஆனால் எதையும் செய்யவில்லை.

விலைவாசி உயர்வு
ஜெயலலிதா ஆட்சியில் விலைவாசி விஷம் போல் ஏறிவிட்டது. அதை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்டுமான பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. தி.மு.க. ஆட்சிகாலத்தில் சிமெண்ட் 1 மூட்டை ரூ.250. கம்பி 1 டன் ரூ.28 ஆயிரம். மணல் 3 யூனிட் ரூ.7 ஆயிரம். செங்கல் ரூ.11 ஆயிரமாக இருந்தது. அ.தி.மு.க. ஆட்சியில் சிமெண்ட் 1 மூட்டை ரூ.350. கம்பி 1 டன் ரூ.48 ஆயிரம். மணல் 3 யூனிட் ரூ.23 ஆயிரம். செங்கல் ரூ.17 ஆயிரம் என்று அதிகரித்துள்ளது.

குப்பை நகரம்
சென்னை மாநகராட்சியை எடுத்துக்கொண்டால் குப்பை, குளமாகவும், கழிவுநீர் நிலையமாகவும் மாறி உள்ளது. நான் 2 முறை சென்னை மாநகராட்சி மேயராக இருந்துள்ளேன். என்னை தொடர்ந்து மா.சுப்பிரமணியன் இருந்துள்ளார்.

9 மேம்பாலங்கள்
நாங்கள் தி.மு.க. ஆட்சியில் கருணாநிதியின் ஆலோசனையை பெற்று எத்தனையோ பணிகளை மேற்கொண்டோம். 10 மேம்பாலங்களை கட்ட திட்டமிட்டு 9 பாலங்களை கட்டினோம். கட்ட முடியாது என்று சவால் விடப்பட்ட பெரம்பூர் மேம்பாலத்தை கட்டி முடித்தோம். அந்த பாலத்தை இன்று புரசைவாக்கம், கொளத்தூர், வில்லிவாக்கம் உள்பட பகுதி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

பாடம் புகட்டுங்கள்
அ.தி.மு.க. ஆட்சியில் 3 ஆண்டுகளில் ஒரு மேம்பாலமாவது கட்டியது உண்டா?. சிந்தித்து பார்த்து தேர்தலில் ஜெயலலிதாவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.
மத்தியில் மதச்சார்ப்பற்ற ஆட்சி அமைய வேண்டும். கருணாநிதி சுட்டி காட்டுபவரே அடுத்த பிரதமராக வர வேண்டும். எனவே தி.மு.க.வுக்கு வாய்ப்பு தாருங்கள்.

சொத்துக்குவிப்பு எப்படி?
தொடர்ந்து திருவொற்றியூர் பெரியார் நகரில் இரவு நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்திலும் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலா உள்ளிட்டோரும் வாங்கிக் குவித்துள்ள ஒட்டுமொத்த சொத்துக்கள் கிட்டத்தட்ட 3300 ஏக்கர் நிலங்கள் என பெங்களூரு நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு வழக்குரைஞர் பவானி சிங் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

ஒரு ரூபாய் சம்பளம்
1991 - 1996 ஆண்டுக்கால ஆட்சிக்காலத்தில், ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றபோது எனக்கு சம்பளமே வேண்டாம், ஆனால் அரசுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் மாதம் 1 ரூபாய் மட்டும் சம்பளமாக வாங்கிக் கொள்கிறேன் என அறிவித்தார்.
அதன்படி 5 ஆண்டுகளில் ஜெயலலிதா பெற்றிருக்கக் கூடிய மொத்த சம்பளம் 60 ரூபாய். ஆனால் அந்த 5 ஆண்டுகால ஆட்சியில் ஜெயலலிதா வாங்கி குவித்த பலாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள், சொத்துக்கள் எவ்வளவு என்று இப்போது வெளிச்சத்துக்கு வந்து கொண்டு இருக்கிறது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications