ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு; கருணாநிதி எழுதும் 'தொடர் கதை'!
சென்னை: பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக ஒரு விவரமான அறிக்கையை தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கை சில பாகங்களாக வெளியாகவுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முதல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இப்போது மூன்றாவது முறையாக தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை நடத்தி வரும் நேரத்தில், அவர் மீது கடந்த காலத்தில் பல்வேறு வழக்குகள் நடைபெற்று, அவற்றில் விசாரணை நீதிமன்றத்தில் சட்டப்படி அவர் தண்டிக்கப்பட்ட போதிலும், பின்னர் மேல் முறையீடு செய்து அதன் மூலம் தப்பித்துக் கொண்டிருக்கிறார். எல்லா வகையிலும் எவ்வளவோ முயன்றும், தப்பிக்க முடியாத சில வழக்குகளை எப்படியோ வாய்தாக்களுக்கு மேல் வரலாறு கண்டிராத வகையில், "கின்னஸ்" ஆவணத்திலே இடம் பிடிக்கக்கூடிய வகையில் வாய்தாக்களை வாங்கி, தீர்ப்புகளை தள்ளிப் போட்டு வருகிறார்! அத்தகைய வழக்குகளில் மிக முக்கியமான ஒன்றுதான் பெங்களூரில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கு.

எத்தனை வாய்தாக்கள்?.. எத்தனை வாய்தாக்கள்?:
இந்த வழக்கு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? எத்தனை வாய்தாக்கள் வாங்கப்பட்டன? என்ற விவரங்களைத் தமிழ்நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் ஆயிரம் ரூபாய், இரண்டாயிரம் ரூபாய் ஊழல் செய்தவர்கள் மீதான வழக்குகள் எல்லாம் ஒரு சில மாதங்களிலேயே முடிவுற்று, அவர்கள் தண்டனை அனுபவிக்கும் இந்நாளில், முறைகேடு களைச் செய்து பல்லாயிரம் கோடி ரூபாய்களை குவித்துள்ள ஒருவர் தமிழகத்தின் முதலமைச்சராகவே இருந்து கொண்டு, எப்படியெல்லாம் நீதியை வளைக்கவும் நெரிக்கவும் முயற்சி செய்கிறார் என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?

திமுக ஆட்சியைக் கலைத்துவிட்டு...
அதற்காகத்தான் இந்த வழக்கிலும், வேறு சில வழக்குகளிலும் இவர் எப்படியெல்லாம் நீதி பரிபாலன நெறிமுறைகளைச் சவாலுக்கு அழைத்திடும் வண்ணம் நடந்து கொண்டிருக்கிறார் என்பதைத் தொடர்ந்து விளக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
1991ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பெரும்பான்மையாக இருந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருந்தது என்ற குற்றச்சாட்டைச் சுமத்தி மத்திய அரசினால் கலைக்கப்பட்ட பிறகு, நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஜெயலலிதா முதன் முறையாக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து, 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தார்.

ரூ. 66 கோடியான ரூ. 2 கோடி:
நாடாளுமன்ற மாநிலங்களவையில் வெளியிட்ட விவரப்படி, ஜெயலலிதா முதல் முறையாக, முதல் அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்பு அவருக்கு இருந்த சொத்து மதிப்பு அதாவது 1-7-1991 அன்றைய தேதியில் 2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 957 ரூபாய்.
1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு மே திங்கள் வரையில் ஜெயலலிதாதான் தமிழகத்தின் முதலமைச்சர். ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை ஐந்தாண்டுகள் அனுபவித்து முடிந்த பிறகு 30-4-1996 அன்று ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு 66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395 ரூபாயாகும்.

சென்னா ரெட்டியிடம் மனு:
ஜெயலலிதா முதலமைச்சராக பதவியில் இருந்த போதே, தமிழகத்தில் பெருமளவுக்கு ஊழல்கள் பல்கிப் பெருகி நடைபெறுவதைச் சுட்டிக்காட்டி, 15-4-1995 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அப்போது தமிழக ஆளுநராக இருந்த சென்னா ரெட்டி அவர்களிடம் 539 பக்கங்கள் கொண்ட ஊழல் குற்றப்பட்டியலை, நானும், கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களும், மற்றும் முரசொலி மாறன், நாஞ்சிலார், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், என்.வி.என். சோமு, ரகுமான்கான் ஆகியோரும் சென்று கொடுத்தோம்.
அந்தக் குற்றச்சாட்டுப் பட்டியலில் மொத்தம் 28 ஊழல்களை வரிசைப்படுத்தியிருந்தோம். அதில் 25வது குற்றச்சாட்டுதான், ஜெயலலிதா வருமானத்தை மீறி அதிகச் சொத்து சேர்த்தது பற்றியதாகும்.

செல்வி ஜெயலலிதாவும், தொழில் கூட்டாளியான சசிகலாவும்:
அதில், "தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவும், அவரது வீட்டில், அவருடன் வசிக்கும் அவருடைய தொழில் கூட்டாளிகளான சசிகலாவும், அவரது சகோதரர்களும் தமிழகம் முழுவதும் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை வாங்கி மலையெனக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். செல்வி ஜெயலலிதா முதல்வரானதிலிருந்து அவருக்கு நெருக்கமானவர்கள் சொத்துக்களை வாங்குவதில் ஈடுபட்டிருக்கும் வகையும் வேகமும் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதுடன் எப்படி இவர்களால் இப்படிச் செய்ய முடிகிறது என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியுள்ளது" என்று தொடங்கி 15-4-1995 தேதியிட்ட "இந்தியா டுடே"" இதழில் வெளிவந்த ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு விவரங்களை எல்லாம் தெரிவித்திருந்தோம்.
இந்தச் செய்தி தமிழ்நாட்டு மக்களும் இந்திய மக்களும் நன்கறிந்த செய்திதான். நாமாக இட்டுக் கட்டிப் பரப்பிய செய்தியல்ல.

சுப்பிரமணிய சுவாமி:
நமக்கு முன்பே, சுப்பிரமணிய சுவாமி அவர்கள் தமிழக ஆளுநரிடம் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து வழக்குப் போடுவதற்கான அனுமதி கோரியிருந்ததால், ஆளுநர் அதற்கான அனுமதியை சுப்பிரமணிய சுவாமி அவர்களுக்கு கடிதத்தின் மூலம் வழங்கினார். இதன் காரணமாக சுப்பிரமணிய சுவாமி மீது கோபம் கொண்ட அ.தி.மு.கவினர் 6-4-1995 அன்று சென்னையில் நடைபெற்ற ஜனதா கட்சிப் பொதுக் கூட்டத்தில் அவர் மீதும், சந்திரலேகா மீதும் கற்களையும், செருப்புகளையும் வீசி ரகளை செய்தனர். வழக்கு தொடுப்பதற்கான அனுமதியை தமிழக ஆளுநர் வழங்கினார் என்பதற்காக 27-4-1995 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் அ.தி.மு.க. ஆட்சியில், ஆளுநர் சென்னா ரெட்டி அவர்களைத் திரும்பப் பெறக் கோரும் தீர்மானம் ஒன்றையே அ.தி.மு.கவினர் நிறைவேற்றினர்.

லத்திகா சரண், வி.சி. பெருமாள்:
டாக்டர் சுப்பிரமணிய சுவாமி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 1996 ஜூன் 14ம் தேதி தாக்கல் செய்த மனுவில் 1.7.1991 முதல் 30.4.1996 வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகக் கூறியிருந்தார். அதையேற்றுக் கொண்ட நீதிமன்றம் விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டது. அதை அப்போது போலீஸ் அதிகாரியாக இருந்த லத்திகா சரண், புகார் மீது விசாரணை நடத்தும்படி போலீஸ் அதிகாரி வி.சி. பெருமாளுக்கு 26.6.1996 அன்று உத்தரவிட்டார்.

விசாரணையைத் தடுக்க உயர் நீதிமன்றத்தில் வழக்கு:
விசாரணையைத் தடுத்திட ஜெயலலிதா உயர்நீதிமன்றத்திலே வழக்கு தொடுத்து, விசாரணை சிறிது காலம் தடை செய்யப்பட்டிருந்த போதிலும், பின்னர் தடையை நீக்கி விசாரணையைத் தொடர உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. இந்த வழக்கிலே ஜெயலலிதா, பிறகு உயர் நீதிமன்றத்திலே தனக்கு முன் ஜாமீன் கோரினார். அதனை நிராகரித்து, உயர் நீதிமன்றம் ஜெயலலிதா மீது சாட்டப்பட்டுள்ள ஊழல் வழக்கிற்கு அடிப்படை ஆதாரம் உள்ளது என்றும், அரசியல் பகை காரணமாக இவ்வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்று கூறுவது சரியல்ல என்றும் தீர்ப்பு கூறியது.

நல்லம்ம நாயுடு:
மூத்த போலீஸ் அதிகாரி திரு.வி.சி.பெருமாள் முதல் நிலை விசாரணையை முடித்து, குற்றச்சாட்டுகளுக்குத் தேவையான பூர்வாங்க ஆதாரங்கள் இருந்ததால், விரிவான விசாரணையை மேற்கொள்ளலாம் என்றும், விரிவான விசாரணை அதிகாரியாக திரு. நல்லம்ம நாயுடு அவர்களை நியமனம் செய்தும் 7-9-1996 அன்று உத்தரவிட்டார். அதன்படி 18-9-1996 அன்று முதல் தகவல் அறிக்கையினை பதிவு செய்தார். தொடர் விசாரணையை மேற்கொள்ள திரு.நல்லம்ம நாயுடுவுக்கு உதவியாக, 16 காவல் துறை இன்ஸ்பெக்டர்களை நியமனம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஐதராபாத் திராட்சை தோட்டத்தில் சோதனை:
குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதோடு, அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்கள். ஜெயலலிதா தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வாங்கிய அசையா சொத்துக்களின் விவரங்களை நேரில் சென்று ஆய்வு செய்து தேவையான ஆதாரங்களைத் திரட்டுவதற்காக 16-10-1996 அன்று முதன்மை அமர்வு நீதிமன்றத்திடம் ஒப்புதலும் பெறப்பட்டது. 6-12-1996 அன்று ஜெயலலிதாவின் சென்னை வீட்டையும், ஐதராபாத் திராட்சை தோட்டத்தையும் நேரில் சோதனையிடுவதற்கான அனுமதியினையும் நீதிமன்றத்திடம் பெறப்பட்டு, அவ்வாறே சோதனைகளும் நடைபெற்றன.

ஜெயலலிதா வேறொரு வழக்கில் கைது:
அந்த நேரத்தில் ஜெயலலிதா வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலே இருந்தார். விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு, ஜெயலலிதாவைச் சிறையில் சந்தித்து, அவரது வீட்டைச் சோதனை செய்யும்போது, ஜெயலலிதா தரப்பிலே பாஸ்கரன், விஜயன் ஆகிய இருவரையும் தனது தரப்புப் பிரதிநிதிகளாக நியமனம் செய்யவும், வீட்டைச் சோதனையிடவும் ஒப்புதல் பெற்றார். அவ்வாறே 7-12-1996 முதல் 12-12-1996 வரை ஜெயலலிதாவின் வீடும், ஐதராபாத் திராட்சை தோட்டமும் காவல் துறையினரால் சோதனையிடப்பட்டன.

வீட்டில் இருந்த தங்க, வைர நகைகள்:
சோதனையின் போது வீட்டில் இருந்த தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருள்கள். ஆவணங்கள் மற்றும் ரொக்கத் தொகை கைப்பற்றப்பட்டு வெள்ளிப் பொருள்களைத் தவிர மற்றவை நீதிமன்றப் பொறுப்பிலே ஒப்படைக்கப்பட்டன. (வெள்ளிப் பொருள்கள் வீட்டிலே வைக்கப்பட்டு பாஸ்கரன் என்பவர் பொறுப்பிலே விடப்பட்டன) விசாரணை அறிக்கை கொடுத்த பின், 1997 ஜூன் 4ம் தேதி சென்னை தனி நீதிமன்றத்தில்

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
மறுநாள், 5-6-1997 அன்று வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்குச் சம்மன்கள் அனுப்பப்பட்டன. 1997 அக்டோபர் 21ம் தேதியன்று 2, 3 மற்றும் நான்காம் குற்றவாளிகளான சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தாக்கல் செய்த விடுவிப்பு மனுவை தள்ளுபடி செய்து நான்கு குற்றவாளிகள் மீதும் தனி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 259 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். அதில் 39 சாட்சிகளைத் தவிர மற்றவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

தனி நீதிமன்றம், தனி நீதிபதி:
தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டதையும், தனி நீதிபதி நியமனம் செய்யப்பட்டதையும் எதிர்த்து ஜெயலலிதா தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பின்பற்றியே விசாரணைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதால் ஜெயலலிதா தரப்பினரின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனை எதிர்த்து ஜெயலலிதா தரப்பினர் இந்திய உச்ச நீதிமன்றத்தில் செய்த மேல் முறையீடும் 14-5-1999 அன்று நீதிபதிகள் ஜி.டி.நானாவதி, எஸ்.பி.குர்துக்கர் ஆகியோரால் தள்ளுபடி செய்யப்பட்டது. ஜெயலலிதா தரப்பினர் மீதான விசாரணைக்குத் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டதும், தனி நீதிபதி நியமனம் செய்யப்பட்டதும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி சரியானது என்பது நிலை நாட்டப்பட்டது.

ஜெயலலிதா பதவியேற்றதே செல்லாது:
இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் 2001 மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளவர் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். 2001ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி மீண்டும் தமிழகத்தில் ஏற்பட்ட பிறகு, இந்த வழக்கு விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டது. ஜெயலலிதா பதவியேற்றதே செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததையொட்டி, 21-9-2001 அன்று ஜெயலலிதா முதலமைச்சர் பதவியிலிருந்து இறங்கினார்.

மீண்டும் முதலமைச்சராக...:
ஆனால் அவர் மீதான வேறு சில குற்றச்சாட்டுகள் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மேல் முறையீட்டில் ரத்து செய்யப்பட்ட காரணத்தால், ஜெயலலிதா மீண்டும் இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2-3-2002ல் முதலமைச்சராக பதவியேற்றார். ஜெயலலிதா மற்றும் மூன்று பேர் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னையில், முதலாவது தனி நீதிமன்றத்தில், அ.தி.மு.க. ஆட்சியில், நீதிபதி ஆர்.ராஜமாணிக்கம் அவர்கள் முன்பு மீண்டும் 2002ம் ஆண்டு நவம்பரில் தொடங்கியது. அப்போது சென்னையில் நடந்து வந்த விசாரணையில் ஏற்கனவே சாட்சியம் அளித்த 76 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்து, 2002 நவம்பர் முதல் 2003 பிப்ரவரி 21ம் தேதி வரை மறு விசாரணை நடந்தது.

சாட்சிகள் பல்டி...:
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் ஏற்கனவே சாட்சியம் அளித்த 76 பேர்கள் அ.தி.மு.க. ஆட்சியில் மீண்டும் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அந்தச் சாட்சிகள் ஏற்கனவே கொடுத்த வாக்குமூலத்திற்கு மாற்றாக மறு சாட்சியம் அளித்தனர். அதைத் தொடர்ந்து குற்றவியல் நடைமுறைச் சட்டம் 313 விதியின்படி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகாமல், நீதிமன்ற உத்தரவின்படி அவர்களிடம் நேரில் சென்று கேள்வி கேட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. நடைமுறைக்கு மாறான இந்த முறைகேட்டினை எதிர்த்து ஆட்சேபித் திருக்க வேண்டிய அரசு வழக்கறிஞர், அ.தி.மு.க. ஆட்சியினால் நியமனம் செய்யப்பட்டவர் என்ற காரணத்தால், எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி...:
இவற்றுக்கிடையேதான் இவ்வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றம் செய்யக்கோரி தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஜெயலலிதாவிற்கு எதிரான வழக்கு விசாரணை நியாயமாக நடைபெற ஏதுவாக இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்றும், இவ்வழக்கில் ஏற்கனவே 250 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு 2000ம் ஆண்டிலேயே அரசுத் தரப்பு விசாரணை முடிந்துவிட்ட நிலையில் ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் சாட்சிகளிடம் மறு விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், இந்த மறு விசாரணையின் போது பல்வேறு சாட்சிகளும் தாங்கள் ஏற்கனவே அளித்த சாட்சியத்தை மாற்றிக் கூறி வருகின்றனர் என்றும், லஞ்ச ஒழிப்புத் துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் விசாரணை அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள வாய்ப்பில்லை என்றும், விசாரணை அதிகாரிகள் சாட்சியங்களை கலைத்து ஜெயலலிதாவையும் வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் விடுவிக்க முயற்சிக்கக் கூடும் என்பதால் தமிழகத்திற்கு வெளியே சுயேச்சையான ஒரு அமைப்பின் மூலம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
பேராசிரியர் அவர்களின் கோரிக்கையினை ஏற்று, உச்ச நீதிமன்றம், சென்னை தனி நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணைக்கு 2003 பிப்ரவரி 28ம் தேதி இடைக்காலத் தடை விதித்தது. இம்மனுவை விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், இவ்வழக்கை பெங்களூருக்கு மாற்றம் செய்து 2003 நவம்பர் 18ம் தேதி உத்தரவிட்டது.

நீதிபதிகள் எஸ்.என். வரியவா, எச்.கே. சீமா:
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.என். வரியவா அவர்களும், எச்.கே. சீமா அவர்களும் அளித்த அந்தத் தீர்ப்பு மிக முக்கியமானது. அதன் முக்கிய பகுதிகள் இங்கே குறிப்பிடப்படுகின்றன. அந்தத் தீர்ப்பின் தொடக்கத்திலேயே நீதிபதிகள்,
"ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது வாதத்தில் மனுதாரரான (பேராசிரியர்) அரசியல் எதிரி என்ற முறையில் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதாகவும், அரசியல் காரணங்களுக் காகவே இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார். இந்த வாதம் ஏற்புடையதல்ல.
ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுக்கு அவைக் குள்ளும், அவைக்கு வெளியேயும் முக்கியமானதோர் இடம் உண்டு. ஆட்சியிலே இருப்பவர்களைக் கண்காணிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு எதிர்க் கட்சிகளுக்குண்டு. ஆட்சியிலே உள்ள கட்சியின் தவறான செயல்முறைகளையும், நடவடிக்கைகளையும் எதிர்ப்பதுதான் அவர்களுடைய முக்கியமான ஆயுதமாகும். பொதுவாக மக்களுடைய குறைகளை எதிரொலிக்கக் கூடியவர்களே இவர்கள்தான்.

''ஐயங்களை எழுப்பியிருக்கிறது''- நீதிபதிகள் கருத்து:
அந்த நிலையில் எதிர்க்கட்சி என்ற முறையில் மனுதாரர் (பேராசிரியர்) உண்மையில் மாநிலத்தின் அரசு நிர்வாகத்திலும், நீதி நிர்வாகத்திலும் அக்கறை உள்ளவராவார். அப்படிப்பட்டவரிடமிருந்து தாக்கல் செய்யப்படுகின்ற மனு, அரசியல் காரணத்திற்காக போடப்பட்ட ஒன்று என்று கூறி அலட்சியப்படுத்தக்கூடிய ஒன்றல்ல. இந்த வழக்கில் மனுதாரர் (பேராசிரியர்) பல நியாயமானதும், ஏற்கத்தக்கதுமான காரணங் களை அதாவது இதிலே நீதி மறுக்கத்தக்க வகையிலும், ஒரு தலைப்பட்சமாகவும் வழங்கக்கூடிய நிலை ஏற்படலாம் என்று வலுவான ஐயங்களை எழுப்பியிருப்பதை எங்கள் கருத்தின் அடிப்படையில் ஏற்கிறோம்" என்று உச்ச நீதிமன்றம் 18-11-2003 அன்று தனது தீர்ப்பில் தெரிவித்தது.
இவ்வாறு கருணாநிதியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
''சட்டத்தின் சந்து பொந்துகளில் ஜெயலலிதா நுழைந்து..'': கருணாநிதி எழுதும் 'தொடர் கதை' பாகம்-2!
-
“பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரிக சமுதாயமாக கருதவே முடியாது” - கமல்ஹாசன் -
வங்கிக் கணக்கில் மேலும் ரூபாய் 6,000.. BLO ஊதியம் டபுள் மடங்கு ஆனது.. ஊக்கத்தொகையும் உயர்வு! -
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
காமராஜருக்கு தலைவலியாக மாறிய தொற்று நோய்.. ‘இன்புளுயன்ஸா’ நகரமாக அறிவிக்கப்பட்ட சென்னை! -
மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி நாள் : உடனே சொத்து வரி செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்! -
வெயில் மண்டையை பொளக்கப்போகுது.. வார்னிங் கொடுத்த வானிலை மையம்! இந்த மாவட்டங்கள் உஷார் -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
"ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை.." சென்னையில் மூடப்படும் பெட்ரோல் பங்குகள்.. உண்மையில் என்ன காரணம்! -
LPG shortage: நயினார் நாகேந்திரன் கேஸ் டீலர்னு சொன்னாலும் சொன்னார்! அப்பாவு கிண்டலை பாருங்களேன்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications