'இரட்டை இலை'யைப் போலவே இரண்டு ராசி எண்களோடு வலம் வரும் ஜெ.
சென்னை: ராசி நம்பர், கலர் உள்ளிட்டவைகளில் அதிக நம்பிக்கைக் கொண்டவர் முதல்வர் ஜெயலலிதா என்பவர் நாடறிந்த விஷயம் தான்.
பச்சைக்கலர் புடவை, பச்சைகலர் பேனா என அனைத்திலும் செண்டிமெண்ட் பார்ப்பவர் அவர். தனக்கு ராசி எனக் கருதப்படும் எண்களில் தான் முக்கியமான வேலைகளைச் செய்வதையும் அவர் வழக்கமாக வைத்திருக்கிறார்.
ஆனால், காலத்திற்குத் தகுந்த மாதிரி அவர் ராசி எண்ணும் மாறி வருவது தான் அவரது தொண்டர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

ராசி எண் 9...
ஜெயலலிதாவுக்கு முந்தைய ஆண்டுகளில் ராசி எண் 9 என்று கூறப்பட்டது. கடந்த 91-96 ஆம் ஆண்டுகளில் அவர் முதல்வராக பொறுப்பேற்ற பின் 9 ஆம் எண் அவரது ராசி எண்ணாக இருந்தது. தேர்தலில் ஜெயலலிதா வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 160 பேர் இடம்பெற்றனர்.

7ம் கூட...
ஆனால், ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற தேதி 16. முதல்வரான பின் 7 முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் 34 பேர்.

காரணம்...
இதேபோல், எம்.ஜி.ஆர் வாழ்வில் பல திருப்பங்களை தந்தது இந்த 7 ஆம் எண் தான். அதனால் ஜெயலலிதாவும் அதை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார் எனக் கூறப்பட்டது. அதோடு ஜெயலலிதா பிறந்த நட்சத்திரம் மகம். அதன் அதிபதி கேது. 7 ஆம் எண்ணின் அதிபதி கேது. இதுவும் 7ம் எண்ணை ஜெயலலிதா விரும்பக் காரணமாகக் கூறப்பட்டது.

முக்கிய முடிவுகள்...
இதனால் ஜெயலலிதா பல்வேறு முக்கிய முடிவுகளை 7 அல்லது 9ஆம் தேதிகளில் தான் எடுப்பார். மேலும் அவரது செயல்பாடுகள் அனைத்தும் கூட்டுத் தொகை 7 அல்லது 9 வருமாறு அமைத்துக் கொண்டார்.

11க்கு மாறியது...
ஆனால், இந்த இரண்டு எண்களும் நீண்ட காலம் ராசி எண்ணாக நீடிக்கவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி ஜெயலலிதாவை விடுதலை செய்த தேதி மே 11. மீண்டும் அரியணையில் அமரவைத்ததோடு அரசியல் மறுவாழ்வுக்கு நிச்சயம் போட்ட நாள் என்பதால் மே 11 ஜெயலலிதாவின் ராசி நம்பர் ஆனது.

புதிய ராசி எண்...
ஜெயலலிதா 217 நாட்களுக்குப் பிறகு வீட்டில் இருந்து வெளியே வந்த நேரம் 1.28. இதன் கூட்டுத் தொகையும் 11. மே 23ஆம் 5வது முறையாக முதல்வராக பதவியேற்றார் ஜெயலலிதா. பதவியேற்பு நடந்த நேரம் 11 மணி. அமைச்சரவை எண்ணிக்கை 29. இதன் கூட்டுத் தொகை 11. பதவியேற்பு விழாவுக்காக கார்டனில் இருந்து புறப்பட்ட நேரம் 10.37. அதன் கூட்டுத் தொகையும் 11. ஆக, இனி எல்லாமே 11 என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருப்பதாகக் கூறப்பட்டது.

5ம் எண்...
ஆனால், மாற்றம் ஒன்றே மாறாதது என அந்த ராசி எண்ணும் மாறியது. 5ம் எண் ஜெயலலிதாவின் ராசி எண்ணாக புதிதாக பதவியேற்றது. இதனால் தான் 5வது முறையாக முதல்வர் பதவியேற்க ஜெயலலிதா 23ம் தேதியை தேர்வு செய்ததாகக் கூறப்பட்டது. ஏனெனில் அதன் கூட்டுத்தொகை 5.

5 கையெழுத்து...
பதவியேற்பிற்குப் பின் மறுநாள் கோட்டைக்குச் சென்ற ஜெயலலிதா, அங்கு உள்ளாட்சித் துறை மற்றும் சில துறைகள் சார்ந்த 5 திட்டங்களுக்கான பைல்களில் கையெழுத்திட்டு பணியைத் துவக்கினார். இதனால் ஜெயலலிதாவின் ராசி எண் 5 தான் என தொண்டர்கள் நம்பினர்.

வரிசை எண் 11...
ஆனால், இடைத்தேர்தலுக்கு சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியைத் தேர்ந்தெடுத்தார் ஜெயலலிதா. இந்தத் தொகுதியின் வரிசை எண் 11. அத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மீண்டும் ஜெயலலிதாவின் ராசி எண் 11 எனக் கொண்டாடப்பட்டது.

5ம், 11ம்...
அடுத்தடுத்து 5 மற்றும் 11 என ஜெயலலிதாவின் ராசி எண்கள் மாறி மாறி வந்ததால், இனி துவக்கப்படும் திட்டங்கள், ஜெயலலிதா பங்கேற்கும் விழாக்கள் என எல்லாமே 11 மற்றும் 5 என வருமாறு அதிமுகவினர் பார்த்துக் கொள்கின்றனர்.

தீர்மானங்கள்...
நேற்று நடந்த அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் கூட்டுத் தொகை 5 என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications