ஜெயலலிதா மரண மர்மம்... நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையை தொடங்கினார்!
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷன் இன்று தனது பணியைத் தொடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையைத் தொடங்கியுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் சசிகலா குடும்பத்தின் சதி இருப்பதாக பலரும் சந்தேகம் எழுப்பினர். இதனையடுத்து முதல்வர் பழனிசாமி அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக் கமிஷனை அமைத்தது. நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் டிசம்பர் 25ம் தேதிக்குள் 3 மாதத்தில் விசாரணை நடத்தி முடிக்க அரசு உத்தரவிட்டிருந்தது.

விசாரணைக் கமிஷனிடம் இதுவரை 7 பேர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். மேலும் 70 கடிதங்களும் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில் விசாரணைக் கமிஷனுக்கு முனிசிப் நீதிபதிக்கு இருக்கும் அதிகாரமே இருப்பதால் வெளிநாட்டில் இருப்போரையும் விசாரிக்கும் விதமாக கூடுதல் அதிகாரம் வழங்க வலியுறுத்தி அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே நீதிபதி ஆறுமுகசாமி இன்று சென்னை எழிலகத்தில் உள்ள கலசமகாலுக்கு வந்துள்ளார். திருப்பரங்குன்றம் தேர்தலில் வைக்கப்பட்ட ஜெயலலிதா கைரேகையில் சந்தேகம் உள்ளதாக திமுகவின் டாக்டர் சரவணன் ஆஜராகியுள்ளார். அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையைத் தொடங்கியுள்ளார். நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனிடம் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றோடு முடியும் நிலையில், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையைத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications