கபாலியை எச்டி தரத்துடன் நெட்டில் ரிலீஸ் செய்து திருட்டு விசிடி கும்பல் அட்டூழியம்!
சென்னை: தமிழ் திரைஉலகத்தை நாசமாக்குவதற்காகவே பிறப்பெடுத்திருக்கும் திருட்டு விசிடி கும்பல் ரஜினிகாந்த் நடித்திருக்கும் கபாலியையும் விட்டு விடவில்லை. கபாலி திரைப்பட தயாரிப்பாளர் தாணுவுக்கு சவால்விடுக்கும் வகையில் எச்டி தரத்துடன் இணையத்தில் முழு படத்தையுமே சுட்டு ரிலீஸ் செய்திருக்கிறது அந்த நாசகார கும்பல்.
ரஜினிகாந்தின் கபாலி திரைப்படம் மிகப் பெரிய திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இளம் இயக்குநர், முற்போக்கு சிந்தனையாளர் ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினி முழுமையாக "நடித்திருக்கும்" படமாக பாராட்டுகளைக் குவித்து வருகிறது கபாலி.

படத்தில் 'அரசியல்' வசனங்களை 'தெறிக்க' விட்டிருக்கிறார் ரஞ்சித்... இந்த படத்துக்கான டிக்கெட்டுகள் முன்னெப்போதையும் விட ஆயிரக்கணக்கில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. ரஜினிகாந்தின் பரம ரசிகர்கள் பலரும் டிக்கெட் கிடைக்காத ஏமாற்றத்தில் பித்து பிடித்தவர்களாக தத்தளித்து வருகின்றனர்.
கபாலி நேற்றே மலேசியா, அமெரிக்கா, துபை உள்ளிட்ட வெளிநாடுகளில் வெளியாகிவிட்டது. ஏற்கனவே கபாலி படத்தை இணையத்தில் வெளியிடக்கூடாது என்று படத்தின் தயாரிப்பாளர் தாணு நீதிமன்றத்தை அணுகி இருந்தார். இதனால் பல இணையதளங்கள் முடக்கப்பட்டன.
இருந்தபோதும் கபாலி திரைப்படத்தின் பிரத்யேகக் காட்சியை அமெரிக்காவில் ரஜினிகாந்த் பார்த்த போது உடனிருந்த சிலரே சுட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் தற்போது முழு திரைப்படத்தையுமே இணையத்தில் வெளியிட்டு அட்டூழியம் செய்திருக்கிறது திருட்டு விசிடி கும்பல். அதுவும் எச்டி தரத்துடன் ஒட்டுமொத்த படத்தையும் வெளியிட்டு தயாரிப்பாளர் வயிற்றில் அடித்திருக்கிறது இந்த பாழாய்போன திருட்டு விசிடி கும்பல்.
இந்த நாசகார செயல் தமிழ் திரை உலகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.












Click it and Unblock the Notifications