திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம்! மன்னிப்பு கேட்பார் மாவட்ட ஆட்சியர்! இந்து முன்னணி கொண்டாட்டம்
பழனி: "திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு முருக பக்தர்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி! பொய்யான தகவல் கொடுத்த மாவட்ட ஆட்சியர் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை வரும்!" என பழனியில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் சாதகமாக வர வேண்டும் எனப் பிரார்த்தனை செய்து, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் இன்று பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து பழனியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது நூற்றாண்டு காலப் போராட்டம்; இந்து முன்னணி சார்பில் கடந்த 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருகிறோம்.

அரை மணி நேரம் அவகாசம்
உச்சநீதிமன்றத்தில் எதிர் தரப்பினர் மூன்று நாட்கள் விவாதம் நடத்திய நிலையில், தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்கு அரை மணி நேரம் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும் நமது வழக்கறிஞர்கள் சிறப்பாக வாதாடியதன் பயனாக, இந்த ஆண்டு கார்த்திகை ஜோதி தீபம் ஏற்றலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது முருக பக்தர்களுக்கும் இந்துக்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி; நீதிபதிகளுக்கு மனதாரப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
6 வார காலம்
முழுமையான ஆய்வுக்காக 6 வார காலம் அவகாசம் வழங்கி ஆவணங்கள் கேட்கப்பட்டுள்ளன. அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பதால், வரும் காலங்களிலும் தொடர்ந்து அங்கு தீபம் ஏற்றப்படும். போன திமுக அரசாங்கமும் சரி, இப்போது இருக்கக் கூடிய அரசாங்கமும் சரி, இந்துக்களுக்கு விரோதமான போக்கிலேயே ஈடுபட்டு உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு சென்றன.
தீபத் தூணில் எண்ணெய் ஊற்ற..
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் எண்ணெய் ஊற்றுவதற்கான அமைப்பும், கல்வெட்டும் உள்ளது. ஆனால், மாவட்ட ஆட்சியர் அரசாங்கத்தின் தூண்டுதலின் பேரில் தவறான மற்றும் பொய்யான தகவல்களைச் சொல்லியிருக்கிறார்.
ஏற்கனவே திமுக ஆட்சியில் இரண்டு அதிகாரிகள் மன்னிப்பு கேட்டது போல, இந்த மாவட்ட ஆட்சியரும் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை மற்றும் வருத்தம் தெரிவிக்க வேண்டிய நிலை நிச்சயம் வரும்.
அறநிலையத் துறை
இந்து சமய அறநிலையத்துறை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு கோயில்களின் வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்துச் செயல்படுகிறது. பல நூறு ஆண்டுகள் பழமையான கோயில்களின் சுவர்களில் மரங்கள் முளைத்துள்ளன.
அடிப்படை வசதிகள்
பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதில்லை. பழனியில் வரவிருக்கும் தைப்பூசத் திருவிழாவிற்குப் பக்தர்களுக்குத் தேவையான சவுகரியங்களை அறநிலையத் துறை செய்து கொடுக்க வேண்டும். மேலும், அறநிலையத் துறை கோயில்களை விட்டு வெளியேற வேண்டும் என சுவாமி தயானந்த சரஸ்வதி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
சட்டம் ஒழுங்கு
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது; அரசாங்கம் சரியான வழியில் நிர்வாகத்தை நடத்தவில்லை. சட்டசபை உறுப்பினர்களும், அமைச்சர்களும் தப்புத் தப்பாகப் பேசுகிறார்கள். கோயில்களுக்குள் கடவுளுக்கு மேலானவர் யாரும் இல்லை; திருச்செந்தூர் கோயிலில் அரசியல் கோஷம் எழுப்பிய விவகாரத்தில் வேல்முருகன் மன்னிப்பு கேட்டுள்ளார். அதேபோல், இந்துக்களின் ஜனத்தொகை குறைந்து வருவதாக வெளியாகியுள்ள ஆய்வு உண்மையானதுதான் என்றும் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்தார்.




Click it and Unblock the Notifications
