திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி அதிரடியாக பணியிடை நீக்கம்.. விழுப்புரம் டிஐஜி உத்தரவின் பின்னணி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் மகேஸ்வரி என்பவர் புகார் கொடுக்க வருபவர்களை தரக்குறைவாக பேசிய குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மகேஸ்வரி மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி புகார் கொடுக்க வரும் மனுதாரர்கள் மற்றும் எதிர்தரப்பினரிடம் லஞ்சம் வாங்கி கொண்டு அரசு பணியை முறையாக செய்யாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் புகாா் கொடுக்க வருபவர்களை தரக்குறைவாக பேசுவதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்திருக்கிறது.

இதுதொடர்பாக தொடர் புகார்கள் வந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மீதான புகார்கள் குறித்து அங்கிருந்த போலீசார் மற்றும் பொதுமக்களிடம் அவர் விசாரணை நடத்தி வந்தார். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனிடையே விசாரணை தொடர்பான அறிக்கையை விழுப்புரம் சரக டி ஐ ஜிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி அனுப்பி வைத்திருந்தார்.அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல் தற்போது உத்தரவிட்டுள்ளார்.
காவலர்கள் தொடர்பான பொதுவான வழக்குகள் குறித்து உயர்நீதிமன்றம்: போலீஸ்காரர்கள் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான காவல் துறையினர் மீது தனிநபர் வழக்கு தொடர முன் அனுமதி பெற தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
காவல்துறையில் போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை பணியாற்றி வருபவர்களுக்கு எதிராக அந்தந்த பகுதி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள தனிநபர் வழக்கை ரத்து செய்யக்கோரி, ஏராளமானோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தனி நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், இந்த விவகாரத்தில் இருவேறு விதமான உத்தரவுகள் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு உள்ளன. இதில் எந்த உத்தரவை பின்பற்றுவது என்பது மிகவும் சிரமமானது. எனவே எந்த முடிவை இறுதியானது என்று எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முடிவு எடுப்பதுதான் சரியானது. எனவே இந்த மனுக்களை இருநீதிபதிகள் அமர்வுக்கு மாற்றும்படி ஐகோர்ட்டு பதிவாளருக்கு பரிந்துரை செய்திருந்தார்,
அதன்படி இந்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, கே.ராஜசேகர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, அரசு பணிக்கு நியமிக்கப்பட்டவர்களை நியமன அதிகாரிதான் பணி நீக்கம் செய்ய முடியும். அதன்படி போலீஸ்காரர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலானவர்களை போலீஸ் ஐ ஜி போன்ற அதிகாரத்தில் உள்ள அதிகாரிகள்தான் நியமிக்கின்றனர் போலீஸ் டி எஸ் பி உள்ளிட்ட அதிகாரிகளை அரசு நியமனம் செய்கிறது. எனவே போலீஸ்காரர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை பணியில் இருப்பவர்களை நீக்கம் செய்யக்கோரி தனி நபர் வழக்கு தொடர முன் அனுமதி தேவையில்லை என்று தெரிவித்தார்.
மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் காந்தி, அருள்வடிவேல்சேகர் ஆகியோர் ஆஜராகி, குற்றவியல் நடைமுறை சட்டம் 197-ன்படி தனி நபர் வழக்கு தாக்கல் செய்ய அரசின் முறையான ஒப்புதல் பெற வேண்டும். அவர்களுக்கு சட்டப்படி பாதுகாப்பு உள்ளது. இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகள் அல்லது சாதாரண பணியாளர் என பாகுபாடு பார்க்க முடியாது. எனவே தனி நபர் வழக்கு தொடர முறையாக அனுமதி பெறுவது அவசியம் என வாதிட்டார்.
விசாரணை முடிவில் நீதிபதிகள் கூறும் போது, உயர் அதிகாரி ஒருவரால் துறைரீதியான நடவடிக்கை எடுக்க முடியும் என்று இருக்கும்போது போலீஸ்காரர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலானவர்களுக்கு குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 197 பொருந்தாது. இதை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட பல்வேறு உத்தரவுகள் உறுதி செய்துள்ளன. அரசு நடவடிக்கை எடுக்கக்கூடிய பணி நிலையில் உள்ளவர்கள் மீது வழக்கு தொடர மட்டும்தான் அனுமதி பெற வேண்டும் என்பது பொருந்தும். எனவே போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலான காவல்துறையினர் மீது தனி நபர் வழக்கு தொடர முன் அனுமதி பெற தேவையில்லை என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications